மசாமுனே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மசாமுனேவை சித்தரிக்கும் ஓவியம்

மசாமுனே (Masamune (正宗?) (正宗), also known as Gorō Nyūdō Masamune (五郎入道正宗? Priest Gorō Masamune, c.1264–1343 AD) (五郎入道正宗, Priest Gorō Masamune, c.1264–1343 AD),[1] என்பவர் சப்பானின் சாமுராய்களுக்கான தலைசிறந்த வாள்களை உருவாக்கியவர் என்ற புகழைப் பெற்றவர் ஆவார். சப்பானிய மொழியில் டாச்சி மற்றும் தந்தோ என்று குறிப்பிடப்படும் வாட்கள் மற்றும் குத்துவாட்களை இவர் உருவாக்கினார். மசாமுனே வாழ்ந்த காலகட்டம் குறித்த சரியான தகவல் இல்லை (இருப்பினும், 1906 இல், சீலியா நட்டுல் வெளியிட்ட, 'the Earliest Historical Relations between Mexico and Japan, from original documents preserved in Spain and Japan', என்ற நூலின் 32 ஆம் பக்கத்தில் எசுபானிய தளபதியான விஸ்கானோ என்பவரால் கி.பி. 1611 இல் ஆக்ஸோவின் சக்திவாய்ந்த தலைவன் என்று மசாமுனே குறிப்பிடப்படுகிறார். ) 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 14 ஆம் நூற்றாண்டின் முற்பகுதிகளில், அதாவது 1288-1328 ஆம் ஆண்டுகளில் இவர் ஏராளமான சிறந்த வாள்களைச் உருவாக்கினார் என்பது பொதுவாக ஒப்புக் கொள்ளப்படுகிறது. சில தரவுகள் அவருடைய குடும்பப் பெயரை ஒக்காசாகி எனக் குறிப்பிடுகின்றன, ஆனால் சில ஆய்வாளர்கள் டோகுகவா குடும்பத்தின் பெருமையை பறைசாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை பாத்திரம் என்றும் கருதுகின்றனர்.[2]

காமகுரா காலத்தின் கடைசி பகுதியில் (1288-1328) சாகிமியா மாகாணத்தில் மசாமுனே பணியாற்றியதாக நம்பப்படுகிறது.

சப்பான் வாள் தயாரிப்பு போட்டியின் விருதானது மசாமுனே பரிசு என்று அழைக்கப்படுகிறது. இது ஆண்டுதோறும் வழங்கப்படாவிட்டாலும் தலைசிறந்த வாளை உருவாக்குபவருக்கு வழங்கப்படுகிறது.[3]

தனித்தன்மை[தொகு]

வாள் தயாரிக்க தேவைப்படும் எஃகானது பெரும்பாலும் தூய்மையற்றதாக தரமில்லாமல் கிடைத்த அக்காலத்தில் தயாரிக்கப்பட்ட மசாமுனேவின் வாள்கள் அதன் அழகுக்கும் தரத்துக்கும் புகழ்பெற்றவையாக விளங்கின என்பது குறிப்பிடத் தக்கது. தான் உருவாக்கிய வாள்களில் மசாமுனே, தன் பெயரை பொறித்திருந்தார் (மற்ற கலைப் படைப்புகளைப் போல).

மசாமுனே பெயர் பொறித்த வாள்கள் அரிதானவை. அத்தகைய வாள்களுக்கு எடுத்துக்காட்டாக ஹோஞ்ஜோ, ஃப்யூடோ மசாமுனே, முஸாஷி மசாமுனே, ஹோச்சோ மசாமுனே, கோடேகிரி மசாமுனே போன்றவை மசாமுனே தயாரித்த உண்மையான சரித்திரப் புகழ்பெற்ற சாமுராய் வாள்களாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

முராமசா மற்றும் மசாமுனே குறித்த கதைகள்[தொகு]

இங்கு நிலவும் ஒரு தொன்மக் கதையின்படி மசாமுனேவின் மாணவரான முராமசாவுக்கும் அவரது ஆசானான மசாமுனேவுக்கும் இடையில் தங்களில் யார் சிறந்த வாள் தயாரிப்பாளர் என்பது குறித்து வாக்குவாதம் ஏற்படுகிறது. இதை சோதித்துப் பார்க்க இருவரும் தனித்தனியாக தங்கள் திறமையைப் பயன்படுத்தி வாள்களைத் தயாரித்து, அதை சோதிக்க முடிவு செய்கின்றனர். போட்டியின்போது இருவர் தயாரித்த வாளை ஆற்று நீரில் நின்று அருகில் உள்ள பொருட்களை வாள் முனைகளால் வெட்டியபடி வீடுகின்றனர். முராமசாவின் வாளான, ஜூச்சி யோசாம் ( Juuchi Yosamu (十千夜寒? "10,000 Cold Nights") (十千夜寒, "10,000 Cold Nights") காற்றைக் கிழித்துக்கொண்டு, நீரைத் துளைத்துக்கொண்டு, இடைப்பட்ட இலைகளை எல்லாம் சரசரவெனக் கிழித்துக்கொண்டு, எதிர் வந்த மீன்களை எல்லாம் மளமளவெனத் துண்டாக்கியபடி ஆற்றின் அடித்தரையில் குத்தி நின்றது. தன் மாணவனின் திறமையான பணியை மனம் லயித்தபடி பாத்த மசாமுனே தன் வாளான யவரகா-டீ யை ( Yawarakai-Te (柔らかい手? "Tender Hands") (柔らかい手, "Tender Hands"), நீரை நோக்கி வீசினார். அது காற்றை மென்மையாகத் தழுவியபடியும், நீரின் ஓட்டத்தைப் பாதிக்காதபடியும் தன்மையாக இறங்கியது. இலைகள் வாளின் கூர்மையால் கிழிந்தன. ஆனாலும் வாள், மீன்களை எந்த விதத்திலும் பாதிக்காமல் ஆற்றின் தரையைச் சென்றடைந்தது. யாருடைய வாள் சிறந்தது என்ற முடிவை அறிவிக்கும் பொறுப்பு ஒரு துறவியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்தத் துறவி கீழ்கண்டவாறு தன் முடிவைச் சொன்னார்.

"முதல் வாளான முராமசாவின் வாள் இரத்த வெறி பிடித்தது. எதை வெட்டுகிறோம், யாரை வெட்டுகிறோம் என்று பிரித்து உணரத் தெரியாத தீய வாள். அது ஒரு பட்டாம்பூச்சியைக்கூட எதிரியின் தலையைப்போல வெட்டிவிடும். மசாமுனேவின் வாளுக்கு எதை வெட்ட வேண்டும், யாரை வெட்ட வேண்டும் என்ற புரிதல் இருக்கிறது. அப்பாவி உயிர்களை எந்த விதத்திலும் பாதிக்காத அற்புதமான வாள், மசாமுனேவினுடையதே."

கதையின் இன்னொரு வடிவத்தில் இரண்டு வாள்களும் இலைகளை வெட்டின இதில் மசாமுனேவின் வாளால் வெட்டப்பட்ட இலைகள் வாளின் கூர்மையால் கிழிந்தன என்றாலும், அடுத்த விநாடியே அவை ஒட்டிக் கொண்டன.

இன்னொரு கதையில் முராமசா மற்றும் மசாமுனே ஆகிய இருவரும் ஷோகன் எனப்படும் சக்கரவர்த்திக்கு வாள் செய்ய அழைக்கப்பட்டனர். இருவராலும் தயாரிக்கப்பட்ட வாள்களில் எது சிறந்த வாள் என்பதற்கான வாள்வீச்சு ஒரு அருவியில் நடைபெற்றது. இதன் முடிவாக மற்ற கதைகளைப் போலவே மசாமுனே தயாரித்த வாளானது புனித வாளாக அறிவிக்கப்பட்டது. கதையின் ஒரு பதிப்பில், தீய வாள்களை உருவாக்கியதற்காக முராமசா கொல்லப்பட்டார்.

இந்த இருவர் குறித்து அறியப்பட்ட இந்த தொன்மங்களும் வரலாற்று ரீதியாக ஏற்கப்படாதவை என்றாலும், இந்த இரு கருமான்களும் அவர்களின் காலங்களுக்கான அடையாளங்களாக பரவலாகக் கருதப்படுகின்றனர்.

மாணவர்கள்[தொகு]

மசாமுனேவுக்கு 15 மாணவர்கள் இருந்ததாக கருதப்படுகிறது. , அவர்களில் 10 பேர் "பத்து புகழ் பெற்ற மாணவர்கள்" அல்லது "மசாமுனேவின் 10 சிறந்த சீடர்கள்" என்று அழைக்கப்படுகிறனர்.

வாள்கள்[தொகு]

ஹோஞ்சோ மசாமுனே[தொகு]

ஹோஞ்ஜோ மசாமுனே ( Honjō Masamune ) என்ற வாளானது இவர் தயாரித்த வாள்களில் மிக முக்கியமான வாளாக கருதப்படுகிறது. சப்பானில் இதுவரை தயாரிக்கப்பட்ட வாள்களிலேயே மிகவும் நேர்த்தியுடன் அழகாகவும் வலிமையானதாகவும் உருவாக்கப்பட்ட வாள் என்ற பெருமை இதற்கு உண்டு. இது 1939 இல் ஜப்பானின் தேசிய பொக்கிசம் (Kokuhō) என வகைப்படுத்தப்பட்டது.

இதற்கு ஹோஞ்சோ என்ற முன்னொட்டு வருவதற்கு காரணம், இந்த வாளை போர் பரிசாக பெற்ற ஹொஞ்சோ ஷிகெனகாவின் பெயராகும். பதினாறாம் நூற்றாண்டில் ஜப்பானிய ராஜ்ஜியமான யுசுகி கென்ஷின் என்ற இராச்சியத்தின் தளபதியாக இருந்த ஹோஞ்ஜோ என்பவர், போரில் எதிரி வீரரான உமானோசுகேவின் வாளால் தாக்கப்பட்டார். அந்த வாள் ஹோஞ்ஜோவின் வலிமையான தலைக்கவசத்தை இரண்டாகப் பிளந்தது. அந்த வாளின் வலிமையைக் கண்டு அதிசயித்த ஹோஞ்சோ, பிறகு சுதாரித்துக்கொண்டு எதிரியை அழித்தார். அந்த வாளைத் தனக்கான போர்ப் பரிசாக எடுத்துக்கொண்டார். அந்த வாள், மஸாமுனேவால் தயாரிக்கப்பட்டது. பல போர்க்களங்களைக் கண்ட பிறகும் கூர்மை குறையாமல் மின்னியது. அந்த வாளுக்கு ‘ஹோஞ்ஜோ மஸாமுனே’ என்ற பெயரே நிலைத்துவிட்டது.

அந்த வாள் ஹோஞ்ஜோவால் 13 பெரிய தங்கக் காசுகளுக்கு இன்னொருவரிடம் விற்கப்பட்டது. இந்த வாள் பின்னர் 1000 மாய் மதிப்புக்கு கையாஹோ மைபுட்சூ சோவால் வாங்கப்பட்டது. பின்னர் டோயோட்டோமி ஹிடியோஷியிடம் இருந்து ஷிமாசு யோஷிஹிரோவிடம் சென்ற வாள், மீண்டும் ஹிடிஷோஷியிடம் வந்து, டோகூகாவா ஈயசு, டோகுகவா யோனினோபு, இறுதியாக டோகுகாவா ஐட்சுனா ஆகியோரின் கைகளுக்கு இடம் பெயர்ந்தது. இருபதாம் நூற்றாண்டில், டோகுகவா குடும்பத்தின் கீ (紀 伊) கிளையிடம் அந்த வாள் இருந்தது. இரண்டாம் உலகப் போரின்போது அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த லிமாஸா என்பவர், வாளின் உரிமையாளராக இருந்தார்.

இரண்டாம் உலகப் போரின் முடிவில், சப்பானின் சரணடைவுக்குப் பின், சப்பான் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிச்கீழ் வந்தது. அப்போது காவல்துறை அல்லது அரசாங்க அனுமதி இன்றி சப்பானிய வாளை தயாரிக்க தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து லிமாஸா தன்னிடமிருந்த ஹோஞ்ஜோ மஸாமுனே உள்ளிட்ட 14 வாள்களை அருகிலுள்ள காவல் நிலையத்தில் 1945 திசம்பரில் ஒப்படைத்தார். அந்த வாள்கள் 1996 சனவரியில் செர்ஜண்ட் கோல்டி பைமோர் (ஒலிப்பில் உள்ள) என்ற அமெரிக்கரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சப்பானியத் தரப்பில் பதிவு செய்யப்பட்டது.[4] ஆனால், அமெரிக்கத் தரப்பில் அப்படி ஒரு வீரர் சப்பானுக்கு அனுப்பப்பட்டதற்கான பதிவே இல்லை எனப்பட்டது. இப்போது ஹோஞ்ஜோ மஸாமுனே வாள் எங்கு இருக்கிறது என்ன ஆனது என்பதற்கான எந்தத் தகவலும் தெரியவில்லை.[5]

ஃப்யூடோ மசாமுனே[தொகு]

மசாமுனே கையொப்பமிட்ட கேள்விக்கு அப்பாற்பட்ட சில வாள்களில் இது ஒன்றாகும். இது டோட்டோமிமி ஹைடூகுவாவால் 1601 ஆம் ஆண்டில் 500 கனேன் பணத்துக்கு வாங்கப்பட்டது. அவரிடமிருந்து ஷோகன் ஐயசுவிடமும் அவரைச் சேர்ந்த மேயா டோஷியாவுக்கும் பின்னர் மேயா டோஷிடுனிக்கு கை மாறியது. மீண்டும் மேயா டோஷிடுனி ஷோகனுக்கு அதை மறுபடியும் அளித்தார். பின்னர், ஓவாரி டோககுவாவில் வாள் கைகொள்ளப்பட்டது. இந்த வாளஇன் தகடானது தோராயமாக 25 செமீ அளவுடையதாக இருந்தது

முசாஷி மசாமுனே[தொகு]

முசாஷி மசாமுனே ஒரு விசித்திரமான வாளாகும்.

ஹோச்சோ மசாமுனே[தொகு]

கோடேகிரி மசாமுனே[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Fujishiro, Yoshio; Fujishiro Matsuo (1935). Nihon Toko Jiten. பக். 386. 
  2. Fujishiro, Yoshio; Fujishiro Matsuo (1935). Nihon Toko Jiten. பக். 387. 
  3. Japanese Sword Making Competition பரணிடப்பட்டது சனவரி 16, 2007 at the வந்தவழி இயந்திரம்
  4. Josh Gates
  5. Jim Kurrach, Honjo Masamune and Important Missing Nihonto பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம், Japanese Sword Society of Southern California newsletter, 1996
  • Nuttall, Zelia. "The Earliest Historical Relations between Mexico and Japan, from original documents preserved in Spain and Japan". (1906)

https://archive.org/details/earliesthistoric00nuttrich

"https://ta.wikipedia.org/w/index.php?title=மசாமுனே&oldid=3860756" இலிருந்து மீள்விக்கப்பட்டது