திருச்செங்கோட்டுத் திருப்பணி மாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருச்செங்கோட்டுத் திருப்பணி மாலை என்பது தமிழ்நாட்டின், நாமக்கல் மாவட்டம் திருசெங்கோட்டில் உள்ள அர்த்தநாரீசுவரர் கோயிலுக்கு செய்யப்பட்ட திருப்பணிகளைத் தொகுத்துக் கூறும் ஒரு நூலாகும்.[1] மாலை என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று, அதில் திருப்பணி மாலை என்பது ஒரு தனி வகை. திருப்பணி மாலை என்னும் இலக்கிய வகையானது கோயில் ஒன்றுக்கு எந்தெந்தக் காலத்தில் என்னென்ன திருப்பணிகள் செய்யப்பட்டன, அவற்றை செய்தவர்கள் யார் என்னும் விவரங்களை செய்யுள் வடிவில் தொகுத்துக் கூறும் கோயில் வரலாற்று நூலாகும்.

திருச்செங்கோட்டுத் திருப்பணி மாலையின் ஆசிரியர் எழுகரை நாட்டு நம்பி என்னும் சதாசிவப் பண்டிதர் என்பவராவார். இந்த நூலானது 364 பாடல்களைக் கொண்டது. இந்நூல் விசய நகர ஆட்சியாளர்கள் தொடங்கி அதன்பிறகு ஆண்ட சிற்றரசர்கள் காலம் வரையில் செய்யப்பட்ட கோயில் திருப்பணிகளை பட்டியல் இடுகிறது. இந்த நூலை 1913இல் தி. அ. முத்துசாமிக் கோனார் பதிப்பித்தார். இந்நூலில் சில பாடல்கள் சிதைந்துவிட்டதாக குறிப்பிடும் பதிப்பாசிரியர். இந்நூல் கூறும் தகவல்களுக்கு பின்னர் ஆங்கிலேயர்களும், தனிநபர்களும் செய்த திருப்பணிகள் பற்றிய தகவல்களை கோனாரே செய்யுள் வடிவில் பாடி இதனுடன் சேர்த்துள்ளார். அவற்றையும் சேர்த்து மொத்தம் 408 செய்யுள்களைக் கொண்ட நூலாக பதிப்பித்துள்ளார். இந்நூல் தரும் செய்திகளையும் கல்வெட்டு ஆதாரங்களையும் ஒப்பிட்டு கல்வெட்டு ஆய்வாளர் வெ. இரா. துரைசாமி இரண்டும் பெரும்பாலும் பொருந்தி போவதாக குறிப்பிட்டுள்ளார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "திருச்செஙகோட்டு திருத்தலத்னத பற்றிய நூல்கள் பற்றிய நூல்கள்". பட்டியல். அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில். Archived from the original on 2018-08-09. பார்க்கப்பட்ட நாள் 21 ஆகத்து 2018.
  2. பெருமாள்முருகன் (2009 ஏப்ரல்). "வட்டார இலக்கியப் பதிப்பு முன்னோடி: தி. அ. முத்துசாமிக் கோனார்". கட்டுரை. புதிய புத்தகம் பேசுது சிறப்பு மலர். pp. 28–33. பார்க்கப்பட்ட நாள் 21 ஆகத்து 2018. {{cite web}}: Check date values in: |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]