பொற்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொன். கோதண்டராமன்
Pon. Kothandaraman
துணைவேந்தர்,
சென்னைப் பல்கலைக்கழகம்
பதவியில்
24 சூன் 1999 – 23 சூன் 2002
வேந்தர்(கள்)எம். பாத்திமா பீவி (1997-2001)
சி. ரங்கராஜன் (2001- சனவரி 2002)
பி.எஸ். ராம்மோகன் ராவ் (சனவரி 2002- 04)
முன்னையவர்பி. டி. மனோகரன்
பின்னவர்எஸ்.இக்னாசிமுத்து
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு9 சூன் 1941 (1941-06-09) (அகவை 82)
இரும்புலிகுறிச்சி, திருச்சினாப்பள்ளி மாவட்டம்,
சென்னை மாகாணம்,
பிரித்தானிய இந்தியா (தற்போது
அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)
குடியுரிமைஇந்தியர்
தேசியம்தமிழர்
பெற்றோர்(s)பழனியம்மாள்
பொன்னுசாமி
முன்னாள் கல்லூரிஅண்ணாமலைப் பல்கலைக்கழகம்

பொன். கோதண்டராமன் (Pon. Kothandaraman) என்ற இயற்பெயரைக் கொண்ட பொற்கோ (பிறப்பு: 9 சூன் 1941) ஒரு தமிழ்ப்பேராசிரியர், மொழியியல் அறிஞர், கல்வியாளர், பல்கலைக்கழகத் துணைவேந்தர், இதழாசிரியர் மற்றும்,தமிழியல் ஆராய்ச்சியாளர் ஆவார். அறுபது நூல்களுக்கும் மேல் எழுதியுள்ளார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வெளிவரும் இதழ்களில் உறுப்பினராக இருந்து பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

தொடக்க வாழ்க்கை[தொகு]

பொற்கோவின் இயற்பெயர் பொன் கோதண்டராமன்.அரியலூர் மாவட்டத்தில் இரும்புலிக்குறிச்சி என்னும் ஊரில் பிறந்தார்.தந்தை பொன்னுசாமி ஆசிரியராக இருந்தார். தாயார் பழனியம்மாள்.

கல்வி[தொகு]

தொடக்கக் கல்வியை இரும்புலிக்குறிச்சியிலும் உயர்நிலைப்பள்ளிப் படிப்பைப் பொன்பரப்பி என்ற ஊரிலும் கற்றார் பொற்கோ.

இதன்பின் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் வித்துவான் படிப்பில் சேர்ந்தார். அப்போது இரண்டாம் ஆண்டில் கோதை வளவன் என்ற காப்பியத்தை எழுதினார். இந்தக் காப்பியம் பின்னாளில் வேங்கடவன் பல்கலைக் கழகம், கேரளப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகிய மூன்றிலும் தமிழ் மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டது.

திருநெல்வேலி சைவ சித்தாந்தக் கழகத்தில் இளம் புலவர் பட்டமும் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் பண்டிதம் பட்டமும் பெற்றார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கீழைக்கலையியல் துறையில் மொழியியல், திராவிட மொழியியல் ஆகிய பாடங்களைக் கற்று பிஓஎல் (BOL - Bachelor of Oriental Learning) பட்டம் பெற்றார். இக் காலகட்டத்தில் மொழியியல் அறிஞர்கள் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், ச.அகத்தியலிங்கம் ஆகியோர் இவருக்கு ஆசிரியர்களாக விளங்கினர்.

கல்விப் பணிகள்[தொகு]

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் மொழியியல் துறையில் பணியில் சேர்ந்தார். அந்தக் காலகட்டத்தில் பேரா.ச. அகத்தியலிங்கம் , பேரா.குமாரசாமி ராஜா போன்றோருடன் பொற்கோ பணி செய்தார்.

1970 ஆம் ஆண்டில் இலண்டன் பல்கலைக்கழக அழைப்பின்பேரில் இலண்டன் பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டுகள் ஆய்வுப் பணிகள் செய்து விட்டு 1972 இல் இந்தியாவுக்குத் திரும்பினார்.

1973-74 ஆம் ஆண்டுகளில் யுனெசுகோ ஆய்வுநிலை அறிஞர் என்ற பொறுப்பில் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் ஆய்வு நிலைகளைப் பார்வையிட்டார்.

1973 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். அதன் பின்னர் சென்னையில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணி செய்தார். 1977 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் இணைப் பேராசிரியராக ஆனார்.அங்கேயே பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் உய்ர்வு பெற்றார். பின்னர் 1999 முதல் 2002 வரை சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராகப் பதவி வகித்தார். பொற்கோ துணைவேந்தராக இருந்த காலத்தில் சென்னைப் பல்கலைக் கழகம் 5 நட்சத்திர மதிப்பைப் பெற்றது. உயர்சிறப்புப் பல்கலைக்கழகம் என்ற விருதினையும் பெற்றது. இவர் காலத்தில் பல்கலைக்கழக நல்கைக் குழு சென்னைப் பல்கலைக் கழகத்துக்கு 30 கோடி உருபா நிதி வழங்கியது. இந்தியாவில் இத்தகைய சிறப்புப் பெற்ற 5 பல்கலைக்கழகங்களில் சென்னைப் பல்கலைக் கழகம் முதலிடம் வகித்தது. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், குப்பத்தில் உள்ள திராவிடப் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் ஆட்சிமன்றக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.

தமிழ் சப்பானிய ஒப்பாய்வில் ஈடுபட்டார். 1982 இல் டோக்கியோவில் பன்னாட்டு மொழியியல் அறிஞர்கள் கூடிய ஒரு மாநாட்டில் பொற்கோ தமிழ் சப்பானிய மொழித் தொடர்பு பற்றி விரிவாகப் பேசினார்.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் பொற்கோவின் வழிகாட்டுதலில் பேராசிரியர் ஓனோ ஓராண்டு காலம் தமிழ் சப்பான் மொழி உறவு ஆய்வைச் செய்தார். இந்தக் காலகட்டத்தில் தமிழ் சப்பானிய ஆய்வுகள் வலுவாகக் கால் ஊன்றியது. பேராசிரியர் ஓனோ மற்றும் பிற சப்பானிய அறிஞர்களுடன் தமிழ் சப்பானிய மொழிஉறவு ஆய்வுகள் மேற்கொண்டார்.

இதழ்ப்பணிகள்[தொகு]

1965 இல் ஆய்வுப்பட்ட மாணவராக இருந்தபோது அறிவுக்கூர்வாள் என்ற கையெழுத்துப் பிரதியை நடத்தினார்.

மக்கள் நோக்கு என்ற இதழை சில நண்பர்களின் உதவியோடு சில ஆண்டுகள் நடத்தினார்.

ஆய்வாளர்களுக்காகவும் அறிஞர்களுக்காகவும் புலமை என்ற ஆராய்ச்சி இதழை 1974 இல் தொடங்கி பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக புலமை மன்றம் என்ற அமைப்பின் வாயிலாக தமிழியல் ஆராய்ச்சி என்னும் பெயரில் முப்பத்து நான்கு தொகுதிகள் வெளியாகின. தமிழ் ஆராய்ச்சித் துறையில் 45 ஆண்டுகள் இடையீடு இல்லாமல் பொற்கோ சில நண்பர்களின் உதவியுடன் இந்த ஆய்விதழைப் பதிப்பித்து வெளிக் கொண்டு வருகிறார்.

பிற பணிகள்[தொகு]

சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பணிகளுக்கிடையில் தொல்காப்பிய அறக்கட்டளை, தமிழ் மன்றம், தமிழ் மேம்பாட்டுத்தளம் ஆகியவற்றை உருவாக்கினார்.

இவர் காலத்தில் சென்னைப் பல்கலைக்கழக ஆட்சி மன்றம், கல்வி மாமன்றம், பல்கலைக்கழகப் பொதுப்பேரவை ஆகிய மூன்றும் தமிழ் செவ்வியல்மொழி ஆவதற்குத் தீர்மானங்கள் இயற்றின.

தமிழ் கல்விமொழி, ஆட்சிமொழி ஆவதற்கான போராட்டங்களில் கலந்து கொண்டார். மொழி மேம்பாட்டுப் பேரவை என்ற அமைப்பின் மூலம் பல மாநாடுகளையும் கருத்தரங்குகளையும் ஊர்வலங்களையும் முன்னின்று நடத்தினார். இவற்றின் விளைவாக தமிழ்வழிக் கல்விக்கு ஓர் இயக்கம் பிறந்தது

வெளிநாட்டுப் பயணங்கள்[தொகு]

இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, தென்னாப்பிரிக்கா முதலிய நாடுகளுக்கு ஆய்வுகள் செய்யவும் சிறப்புச் சொற்பொழிவுகள் ஆற்றவும் பயணம் செய்தார்.

விருதுகள்[தொகு]

தமிழக அரசு வழங்கிய கலைமாமணி விருது (1995- 96)

தமிழக அரசு வழங்கிய திருவள்ளுவர் விருது (2009)

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வழங்கிய தமிழ்ப்பேரவைச் செம்மல் (2003)

எழுதிய நூல்கள்[தொகு]

வாழ்க்கைப் பூங்கா, 1965

வாழ்வியல், 1969

வள்ளுவ நெறியும் வைதிக நெறியும், 1969

பி.பி.சி தமிழோசையில்..1972

இலக்கண உலகில் புதிய பார்வை 1973

செந்தமிழ், 1974

உலகில் தமிழும் தமிழரும், 1976

இலக்கியக் கோலங்கள் 1976

கோதை வளவன், 1978

கலங்கரை விளக்கம், 1979

இலக்கண உலகில் புதிய பார்வை-2, 1981

குறள் காட்டும் உறவுகள், 1982

நல்ல உடல் நல்ல மனம், 1982

இலக்கணக் கலைக்களஞ்சியம், 1985

தமிழ் உணர்ச்சி தமிழ் வளர்ச்சி தமிழ் ஆட்சி,1986

பொற்கோவின் கவிதைகள்,1987

தமிழ் இலக்கணக் கோட்பாடுகள், 1989

தமிழில் நீங்களும் தவறில்லாமல் எழுதலாம்,1992

தொல்காப்பிய அறிமுகம்,1994

தேவையான மொழிக் கொள்கை,1994

இன்னமுத மாமழை,1994

தமிழக வரலாற்றில் தந்தை பெரியார்,1995

புதிய நோக்கில் தமிழ் யாப்பு, 1995

ஆராய்ச்சி நெறிமுறைகள்,1996

இலக்கண உலகில் புதிய பார்வை-3, 1996

பொது மொழியியல்,1997

குயில் பாட்டு, 1998

இலக்கிய அறிவியல், 1998

திருக்குறள் அரங்கம், 1999

தமிழக வரலாற்றில் திருக்குறள்,2000

இலக்கணக் கலைக் களஞ்சியம், 2000 மூன்றாம் பதிப்பு

பண்பாட்டுக் கருத்தோட்டம், 2001

இலக்கிய வெளிச்சம்--1 2001

இலக்கிய வெளிச்சம்--2 2001

மொழிசார் சிந்தனைகள், 2001

இக்காலத் தமிழ் இலக்கணம், 2002

கோதைவளவன், 2002 மூன்றாம் பதிப்பு

தேவையான மொழிக் கொள்கை,விரிவாக்கப் பதிப்பு,2003

தமிழில் நாமும் தவறின்றி எழுதலாம் 2003

தமிழ் ஜப்பானிய ஒப்பாய்வு, 2003

திருக்குறள் உரைவிளக்கம்,2004

தமிழ் வரலாற்றில் பாவாணர், 2004

தமிழ் வரலாற்றில் வள்ளலார்,2004

மக்கள் நேயச் சுயமரியாதை,2005

தமிழக வரலாற்றில் அறுந்து கிடக்கும் சங்கிலிகள், 2005

தமிழ் ஜப்பானிய ஆராய்ச்சி --பாதையும் பயணமும், 2005

இலக்கண உலகில் புதிய பார்வை,நான்காம் பதிப்பு தொகுதி (1,2,3) 2005

மக்கள் நடுவில் பொற்கோ,2006

குறள் காட்டும் உறவுகள்,விரிவாக்கப் பதிப்பு,2006

இக்காலத் தமிழ் இலக்கணம், சீராக்கப் பதிப்பு ,2006

தமிழக வரலாற்றில் பேராசிரியர் தெ.பொ.மீ. 2007

செம்மொழித் திட்டம், 2007

வள்ளுவ நெறியும் வைதிக நெறியும், 2007

நல்ல உடல் நல்ல மனம், சீராக்கப் பதிப்பு, 2007

வாழ்க்கை வளம் பெற வழிவகைக் காண்போம், 2007

பொதுமொழியியல் மூன்றாம் பதிப்பு, 2007

தமிழில் நாமும் தவறில்லாமல் எழுதலாம், ஐந்தாம் பதிப்பு

மொழிசார்ந்த சுயமரியாதை,2008

திருக்குறள் உரைவிளக்கம், சீராக்கப் பதிப்பு, 2008

பொது மொழியியல், சீராக்கப் பதிப்பு, 2008

மொழி சார்ந்த இயக்கங்கள், 2009

இவை அல்லாமல் 15 ஆங்கில நூல்களை எழுதியுள்ளார். 'தமிழ் ஸ்டடீஸ்' என்ற 800 பக்கங்கள் கொண்ட ஆங்கில நூல் இவரால் எழுதப்பெற்று வெளிவந்தது. இந்த நூல் செம்மொழி என நடுவணரசு அறிவிக்கும் காலத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 400 க்கும் மேற்பட்ட ஆய்வுரைகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி வழங்கியிருக்கிறார்.

உசாத்துணை[தொகு]

பொற்கோவின் வாழ்க்கைப்பாதை-நூல் ஆசிரியர் பொற்கோ, பூம்பொழில் வெளியிடு சென்ன-ை600126

அறிஞர்களின் பார்வையில் பொற்கோ, 70 ஆம் ஆண்டு நிறைவு விழா மலர், சூன் 2011

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொற்கோ&oldid=3743330" இலிருந்து மீள்விக்கப்பட்டது