சின்னையா (நாட்டிய ஆசிரியர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தஞ்சை சின்னையா (பிறப்பு 1802-1856) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபலமான பரத நாட்டிய ஆசிரியர் ஆவார். கோயிலில் இருந்த நாட்டியக் கலையை அரங்கக் கலையாக்கிய பெருமை கொண்ட தஞ்சை நால்வருள் இவரும் ஒருவராவார்.[1]

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

தஞ்சை மராட்டிய மன்னர் இரண்டாம் துளஜா (1763-1787) காலம் முதல் அவைக் கலைஞர்களாக இருந்து இசை, நாட்டியப் பணியினை ஆற்றி வந்தார்களின் மரபில் வந்தவர். தஞ்சை நாட்டிய ஆசிரியர் சுப்பராயனின் மூத்த மகனானக சின்னையா 1802 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் உடன் பிறந்தவர்களான பொன்னையா, சிவானந்தம், வடிவேலு ஆகியோரும் புகழ்வாய்ந்த நட்டுவாங்கனாராக விளங்கினர்.

இசைக் கல்வி[தொகு]

தஞ்சை சின்னையாவும் அவரது சகோதரர்களும் முத்துசுவாமி தீட்சிதரிடம் இசை கற்றக, தஞ்சை சரபோஜி மன்னர் ஏற்பாடு செய்தார். இசைப் பயிற்சியோடு தமிழ், தெலுங்கு, வடமொழிகளிலும் பயிற்சி பெற்றனர். இச்சகோதரர்களின் இசை அரங்கேற்றம் மராட்டிய அரசவையில் சரபோஜி மன்னன் முன்பு நடைபெற்றது.

நாட்டியப்பணி[தொகு]

சின்னையா தன் சகோதரர்களுடன் இணைந்து பரதநாட்டியத்திற்குரிய அடிப்படை பயிற்சி முறைகளை வகைப்படுத்திக் கொடுத்தார். அவை, தட்டு அடைவு, நாட்டு அடைவு, குதித்து மெட்டு அடைவு, மெட்டடைவு, நடை அடைவு, அருதி அடைவு, முடிவடைவு என பத்தாக வகுத்து, ஒவ்வொன்றும் 12 பேதங்கள் வீதம் 120 அடவுகளாக வகைப்படுத்தினர். அடைவிற்குப் பிறகு கற்கக்கூடிய அலாரிப்பு, ஜதீசுரம், சப்தம், பதவர்ணம், சுரஜதி, பதம், ஜாவளி போன்ற நாட்டிய வகைகளை உருவாக்கி அவற்றை இரு மாணவிகளுக்குக் கற்பித்து முத்துசாமி தீட்சிதர் முன்னிலையில் அரங்கேற்றினர். இவற்றைக் கண்ட தீட்சிதர் இவர்களுக்கு “சங்கீத சாகித்திய பரத சிரேஷ்டம்” என்ற பட்டம் வழங்கினார்.

மைசூர் அரசவையில்[தொகு]

தஞ்சை மன்னரிடம் ஏற்பட்ட மனவருத்தத்தால், சின்னையா தன் சகோதரர்களுடன் இணைந்து திருவாங்கூருக்குச் சென்றனர். பிறகு மைசூர் மன்னர் இவரை அழைத்ததன் பேரில் மைசூர் சென்று ஸ்ரீசாமராஜ உடையார் அரசவையில் அவைக் கலைஞராக விளங்கினார். இவர் அங்கு வாழ்ந்த காலத்தில் சாமுண்டீஸ்வரியின் மீதும், சாமராஜ உடையார் மீதும் கீர்த்தனைகள், தானவர்ணங்கள், சுவரஜதிகள், பதவர்ணங்கள், தில்லானாக்கள், ஜாவளிகள் ஆகியவற்றை இயற்றினார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தஞ்சை நால்வர் வழி நாட்டிய இசை மரபு". புத்தக அறிமுகம். தமிழ்ப் பல்கலைக் கழகம். பார்க்கப்பட்ட நாள் 5 அக்டோபர் 2017.
  2. முனைவர் செ. கற்பகம். "தஞ்சை நால்வர் – சின்னையா". கட்டுரை. http://www.tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 5 அக்டோபர் 2017. {{cite web}}: External link in |publisher= (help)