படைத்தோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

படைப்போன் அல்லது படைப்புக்கடவுள் (பொதுவாக படைப்பாளன்) என்று அறியப்படுபவர், உலகைப் படைத்ததாக வெவ்வேறு சமயங்களில் நம்பப்படும் இறைவன் ஆவார். ஓரிறைக்கொள்கை கொண்ட நெறிகளில், அந்த ஏக இறைவனே படைப்பாளன். ஏனைய சமயங்கள், சர்வவல்லமை படைத்த படைப்பாளனான தங்கள் முழுமுதல் இறைவனுக்கு அடங்கி நடப்பவராக ஒரு படைப்புக்கடவுளைக் கூறுகின்றன.[1]

ஓரிறைக்கொள்கை[தொகு]

சொராட்டிரிய நெறி, யூதம், கிறிஸ்தவம், இசுலாம், சீக்கியம் முதலிய நெறிகள், பிரபஞ்சமானது, கடவுளின் படைப்பால் தோன்றியவை என்ற உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றன.

அதேனியம்[தொகு]

எகிப்தியப் பழம் வரலாற்றில், பாரோ அகேநாதன், மற்றும் அரசி நெஃபர்டீட்டீஆகியோரால் பொ.மு 1330 அளவில் அதேனிய நெறி உருவானது. அவர்கள், அகேதேதன் எனும் புத்தம்புது நகரில், ஏக படைப்பாள இறைவனான அதேனுக்கு ஒரு ஆலயம் எழுப்பினார்கள். பாரோவின் தந்தை எகிப்தியப் பல்லிறைகளில் ஒருவராக, அதின் எனும் தெய்வத்துக்கு அதிக முன்னுரிமை கொடுத்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பாரோவின் மறைவுக்குப் பின், அதீனியம் எகிப்திலிருந்து மறைந்தது. உலகின் ஓரிறை வழிபாடுகளில் மிகப்பழமையானதாக, அதீனியத்தைக் கொள்வது சில ஆய்வாளர்களின் வழக்கம்.

யூதம்[தொகு]

யூதர்களின் தொடக்கநூலின் முதல் இரு அத்தியாயங்களில் கூறப்படும் இரு கதைகளில், படைப்பு விளக்கப்பட்டுள்ளது.[2] (எபிரேய மூலநூலில் அத்தியாயப் பிரிவினைகள் உண்மையில் இல்லை.) 1:1 இலிருந்து 2:3 வரையான தொடக்கநூலின் பகுதியில், " படைப்பின் ஆறு நாட்களும் அங்கு காலையும் மாலையும் இருந்தது. முதல் மூன்று நாட்களில் அந்தப்பிரிவுகள் இருந்தது; முதனாள் ஒளியிலிருந்து இருளைப் பிரித்தது; இரண்டாம் நாள் நீரை மேலும் கீழும் பிரித்தது. மூன்றாம் நாள், கடலை நிலத்திலிருந்து பிரித்தது." என்று துவங்கி, அடுத்த மூன்று நாட்களும் எவ்வாறு அவை குடியேற்றம் பெற்றன என்று அந்த வர்ணனை விரிவடைகின்றது.[3]

கிறித்துவம்[தொகு]

படைப்பு தொடர்பான எபிரேய விவிலியத்தின் மிகப்பழைய கருத்து அலெக்சாண்டிரியாவின் பைலோவிடமிருந்து (பொ.பி 59) பெறப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. அரிசுட்டாட்டில் சொல்கின்ற முதற்காரணி என்பதோடு, எபிரேய படைப்புக்கடவுளான யாவேயை ஒப்பிடுகின்றார் பைலோ.[4] ஹெலனிய மெய்யியல் காலத்தில் ஒன்றுமில்லாத சூனியத்திலிருந்து "முதற்காரணி" உலகைப்படைத்தது எனும் கோட்பாடு புகழ்பெறலாயிற்று.மரபார்ந்த உரையாளர்கள், கிறித்துவம், யூதத்திலிருந்து படைப்புக்கொள்கையைப் பெற்றிருக்கக்கூடும் என்று கருதினாலும்,[5] புதிய ஏற்பாட்டிலுள்ள எபிரேயம் 11:3 முதலான வரிகள், திருவெளிப்பாடு 4:11முதலியன கிறித்துவத்தின் தனித்துவமான படைப்புக் கொள்கையை விவரிப்பதாக சிலர் நம்புகிறார்கள்.

இஸ்லாம்[தொகு]

இசுலாம் சொல்வதன் படி, அரேபிய ஆண்டவன் அல்லாஹ், எல்லாம் வல்ல, எல்லாம் அறிந்த இறைவன். இசுலாம் இறைவனை ஒருமைப்பொருளாக தவ்ஹீது முன்வைப்பதில் இறுக்கமான நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றது. திருக்குரானின் படி, படைப்பானது, இறைவனின் திருவருளால் நடப்பது. மனுக்குலத்தைப் பரிசோதிப்பதற்கே உலகமானது படைக்கப்படுகிறது.[6] [7] சோதனையில் வெல்பவர்கள் சுவனத்தைப் பெறுகிறார்கள்.[8] மேலும் இஸ்லாமிய நம்பிக்கையின் படி, இறைவன் சுவனங்களுக்கு மேலும், படைப்புகளுக்கு மேலும் விளங்குகின்றான்.[9] மேலும், படைப்பில் அவன் எதையும் ஒத்திருப்பவனும் அல்லன்.[10]

சீக்கியம்[தொகு]

சீக்கியம் நம்புவதன் படி, படைப்பாளனான ஏக இறைவன், வகேகுரு என்று அறியப்படுகின்றான். அவன் உருவமோ காலமோ நோக்குநிலையோ அற்றவன். எனவே நிரங்கன், அகாலன், அலகா நிரஞ்சன் என்றெல்லாம் புகழப்படுகின்றான்.

பஹாய்[தொகு]

பகாய் சமயம் சொல்கின்ற படைப்பிறை, எல்லா இருப்பையும் படைத்த படைக்கப்படாத பருபொருள்.[11] அறியமுடியாத அடையமுடியாத என்றுமுள்ள எங்குமுள்ள பரம்பொருள் இறைவன். அவன் உருவமே படைப்பில் பிரதிபலிக்கப்படுகின்றது எனவே, பகாய் நம்பிக்கையாளன், படைப்பை, படைத்தோனுக்காக நேசிக்கவேண்டியவனாகின்றான்.[12]

இந்து[தொகு]

இந்து சமயத்தின் கிளைகளான சைவத்திலும், வைணவத்திலும், முழுமுதலுக்கு வேறான படைப்பிறை ஒன்று உண்டு. உதாரணமாக இருநெறியிலும் சிவனும், திருமாலும் அனைத்தையும் படைக்கின்றனர் எனும் போதும், படைப்போனாக பிரம்மா எனும் கடவுள் விளங்குகின்றார்.[13]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. (2004) Sacred Books of the Hindus Volume 22 Part 2: Pt. 2, p. 67, R.B. Vidyarnava, Rai Bahadur Srisa Chandra Vidyarnava
  2. Alter 1981, ப. 141.
  3. Ruiten 2000, ப. 9-10.
  4. Yonge, Charles Duke (1854). "Appendices A Treatise Concerning the World The Works of Philo Judaeus: the contemporary of Josephus. London: H. G. Bohn". Cornerstonepublications.org. Archived from the original on 28 செப்டெம்பர் 2015.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  5. Collins, C. John, Genesis 1-4: A Linguistic, Literary, and Theological Commentary (Phillipsburg, NJ: P&R Publishing, 2006), 50ff.
  6. Qur'an [21:16], Sahih International Translation
  7. Qur'an [67:2], Muhsin Khan Translation
  8. Qur'an [78:31], Yusuf Ali Translation
  9. Qur'an [2:29], Muhsin Khan Translation
  10. Qur'an [42:11], Sahih International Translation
  11. Hatcher 1985, ப. 74
  12. Smith 2008, ப. 111
  13. Nandalal Sinha {1934} The Vedânta-sûtras of Bâdarâyaṇa, with the Commentary of Baladeva. p. 413

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=படைத்தோன்&oldid=3587426" இலிருந்து மீள்விக்கப்பட்டது