சவூதி அரேபியாவின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சவூதி அரேபியாவின் வரலாறு, இன்றைய வடிவத்தில் உள்ள ஒரு நாட்டின் வரலாறாக 1744 இல் தொடங்குகிறது. எனினும், இப்பகுதியில் மனிதரின் வரலாறு இற்றைக்கு 20,000 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. உலகு தழுவிய தாக்கங்களைக் கொடுத்த இரண்டு நிகழ்வுகள் உலக வரலாற்றில் இரண்டு தடவைகள் இப்பகுதியில் நிகழ்ந்துள்ளன. ஒன்று, இப்பகுதி 77ஆம் நூற்றாண்டில் இசுலாமின் தொட்டிலாக உருவானதுடன், இது இசுலாமிய ரசீதுன் கலீபகத்தின் தலைமையிடமும் ஆனது. இரண்டாவது, 20 ஆம் நூற்றாண்டில் எண்ணெய் வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், இப்பகுதி முக்கியமான பொருளாதார, புவிசார் அரசியல் வகிபாகத்தைக் கொண்டிருக்கும் அளவுக்கு முன்னேறியது.

பிற காலங்களில் இப்பகுதி பொதுவாக அறியப்படாத ஒரு பகுதியாகவே இருந்து வந்துள்ளது. எனினும், ஒவ்வொரு இசுலாமியரதும் வாழ்க்கைக் காலத்தில் ஒரு தடவையாவது மக்காவுக்கு மேற்கொள்வதற்கு ஹஜ் பயணம் மேற்கொள்ளவேண்டும் என விதிக்கப்பட்டுள்ளதால் ஏழாம் நூற்றாண்டில் இருந்து, மக்கா, மதீனா போன்ற நகரங்கள் முசுலிம் உலகுக்கு மிக உயர்ந்த ஆன்மீக முக்கியத்துவம் கொண்டவையாக விளங்கின.[1]

இதன் வரலாற்றின் பெரும்பாலான காலங்களில் பல பழங்குடித் தலைவர்கள் இப்பகுதியின் பல இடங்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். மத்திய அரேபியாவில் உள்ள நிசாத் பகுதியில் அல் சவூத் முக்கியத்துவம் குறைந்த பழங்குடி ஆட்சியாளர்களாக உருவாகினர். பின்வந்த 150 ஆண்டுகளில் அல் சவூத் ஆட்சிப் பரப்பு கூடிக் குறைந்த வண்ணம் இருந்தது. எனினும், 1902 க்கும், 1927 க்கும் இடையில் அல் சவூத் தலைவர் அப்துலசீசு தொடர்ச்சியான பல போர்களை நடத்தி நிலப்பகுதிகளைக் கைப்பற்றி 1930 இல் சவூதி அரேபிய இராச்சியத்தை நிறுவினார். 1930 இலிருந்து 1953 இல் அவர் இறக்கும்வரை அப்துலசீசு எல்லா அதிகாரமும் கொண்டவராக சவூதி அரேபியாவை ஆண்டுவந்தார். அதன் பின்னர் அவரது ஆறு மகன்கள் ஒருவர்பின் ஒருவராக சவூதி அரேபியாவை ஆண்டனர். அப்துலசீசுக்கு அடுத்ததாகப் பதவிக்கு வந்த சவூத் அரச குடும்பத்துக்குள் எழுத்த எதிர்ப்புக்களினால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். அதன் பின்னர் 1964 இல் பதவிக்கு வந்த பைசல், 1975 இல் அவரது மருமகன் ஒருவரால் கொல்லப்படும்வரை பதவியில் இருந்தார். இவர் காலத்தில் எண்ணெய் வளம் அளித்த செல்வத்தினால், நாடு வளர்ச்சியடைந்ததுடன், நவீனமயமானது. இக்காலப் பகுதியில் 1973 இன் எண்ணெய் நெருக்கடியில் சவூதி அரேபியா ஆற்றிய பங்கும், பின்னர் ஏற்பட்ட எண்ணெய் விலை உயர்வும், நாட்டின் அரசியல் முக்கியத்துவத்தையும், செல்வத்தையும் பெருமளவு அதிகரித்தது. பைசலைத் தொடர்ந்து பதவிக்கு வந்த காலித்தின் ஆட்சிக் காலத்தில் எதிர்ப்புக்களின் முதல் பெரிய அடையாளங்கள் வெளிப்பட்டன. 1979 இல் இசுலாமியத் தீவிரவாதிகள் மக்காவில் உள்ள பெரிய பள்ளிவாசலைத் தற்காலிகமாகக் கைப்பற்றியிருந்தனர். 1982 இல் பாகித் அரசரானார். இவருடைய ஆட்சிக் காலத்திலேயே சவூதி அரேபியா உலகின் மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தி நாடானது. எனினும், நாடு அமெரிக்காவுடன் கூட்டு வைத்துக்கொண்டதாலும், பின்னர் 1991 இன் வளைகுடாப் போர்க்காலத்திலும் உள்நாட்டில் குழப்பங்கள் அதிகமாகின. 2000களின் தொடக்கத்தில், ஆட்சியை எதிர்க்கும் இசுலாமியத் தீவிரவாதிகள், தொடரான பயங்கரவாதத் தாக்குதல்களை நாட்டில் நடத்தினர். 2005 ஆம் ஆண்டில் அப்துல்லா அரசரானார். நாட்டின் பல நிறுவனங்களை நவீனமயப்படுத்துவதற்காக இவர் பல மென்மையான சீர்திருத்தங்களைச் ஏற்படுத்தினார். அத்துடன் மக்களின் அரசியல் பங்கெடுப்பையும் இவர் ஓரளவு அதிகரித்தார். 2015 இல் பதவியேற்ற சல்மான் பல சீர்திருத்தங்களைச் செய்துவருகிறார்.

இசுலாமுக்கு முற்பட்ட அரேபியா[தொகு]

அரேபியத் தீவக்குறையில் இற்றைக்கு 63,000 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உண்டு.[2][3] தொல்லியல் பல முற்கால நாகரிகங்களை வெளிக்கொணர்ந்துள்ளது. அரேபியத் தீவக்குறையின் கிழக்குப் பகுதியில் இருந்த தில்முன் நாகரிகம், எஜாசின் வடக்கில் தமுட், தீவக்குறையில் நடுப்பகுதியில் கின்டா இராச்சியம், அல்-மகர் நாகரிகம் என்பன இவற்றுள் அடங்குகின்றன. அரேபிய வரலாற்றில் அறியப்பட்ட முந்திய நிகழ்வுகள் தீவக்குறையில் இருந்து அயற்பகுதிகளுக்கான புலப்பெயர்வு ஆகும்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. [1] "Hajj Explained" in Al Arabia News 03 Oct 2014 by Shounaz Meky
  2. "Early humans settled in Arabia". usatoday. பார்க்கப்பட்ட நாள் 12 November 2016.
  3. Saudi Embassy (US) Website பரணிடப்பட்டது 4 மார்ச்சு 2016 at the வந்தவழி இயந்திரம் retrieved 20 January 2011
  4. Philip Khuri Hitti (2002), History of the Arabs, Revised: 10th Edition