கென்சோ தாங்கே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கென்சோ தாங்கே
1981 இல் அம்ஸ்டர்டாமில் கென்சோ தாங்கே
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1913-09-04)4 செப்டம்பர் 1913
ஒசாக்கா, சப்பான்
இறப்பு22 மார்ச்சு 2005(2005-03-22) (அகவை 91)
டோக்கியோ, சப்பான்
பாடசாலைடோக்கியோ பல்கலைக்கழகம்
பணி
கட்டிடங்கள்இரோசிமா அமைதி நினைவுப் பூங்கா, இசுக்கோப்ஜேக்கான திட்டம், டோக்கியோ ஒலிம்பிக் அரங்கங்கள், சென் மேரி பேராலயம்
விருதுகள்பிரிட்ஸ்கர் பரிசு, ஆர்,ஐ.பி.ஏ தங்கப் பதக்கம், ஏ.ஐ.ஏ தங்கப் பதக்கம், Order of Culture, Praemium Imperiale, Order of Sacred Treasures

கென்சோ தாங்கே (Kenzō Tange) ஒரு சப்பானியக் கட்டிடக்கலைஞரும், 1987 ஆம் ஆண்டில் கட்டிடக்கலைக்கான பிரிட்ஸ்கர் பரிசு பெற்றவரும் ஆவார். இவர் 20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான கட்டிடக் கலைஞர்களுள் ஒருவர். மரபுவழியான சப்பானியப் பாணிகளுடன் நவீனத்துவத்தையும் கலந்து வடிவமைக்கும் இவர் உலகின் எல்லாக் கண்டங்களிலும் முக்கியமான கட்டிடங்களை வடிவமைத்து உள்ளார். இவர் "மெட்டாபோலிச" இயக்கத்தின் செல்வாக்குள்ள ஆதரவாளரும் ஆவார். 1859 ஆம் ஆண்டை அண்டி அல்லது 1960களின் தொடக்கத்தில், பின்னர் தான் "அமைப்பியம்" என்று அழைத்த விடயம் பற்றிச் சிந்தித்ததாகத் தெரிவித்தார். "அமைப்பியம்" என்பது "டச் அமைப்பியம்" என அறியப்பட்ட ஒரு கட்டிடக்கலை இயக்கம்.

இளம் வயதிலேயே சுவிசுக் கட்டிடக்கலைஞரான லே கொபூசியேயின் செல்வாக்குக்கு உட்பட்ட தாங்கே, 1949 இல், இரோசிமா அமைதி நினைவுப் பூங்காவின் வடிவமைப்புக்கான போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் பன்னாட்டு அங்கீகாரத்தைப் பெற்றார். 1950களில் இவர் சி.ஐ.ஏ.எம் (CIAM - Congres Internationaux d'Architecture Moderne) இல் உறுப்பினராக இருந்தார். ஆனாலும் இவர் அதன் இளைஞர் குழுவான "குழு 10" இல் அவர் இணையவில்லை.

நகரவியம் தொடர்பான அவரது பல்கலைக் கழகக் கல்வியினால், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான மீள்கட்டுமானத் திட்டங்களைக் கையாளுவதற்கான சாதக நிலையை அவர் பெற்றார். டோக்கியோ, இசுக்கோப்சே ஆகிய நகரங்களின் மீள்கட்டுமானத்துக்கான இவரது ஆலோசனைகளும் ஆராயப்பட்டன. தாங்கேயின் வேலைகள், உலகம் முழுவதிலும் உள்ள ஒரு தலைமுறைக் கட்டிடக்கலைஞர்கள் மீது செல்வாக்குச் செலுத்தியது.

தொடக்க காலம்[தொகு]

1913 ஆம் ஆண்டு செப்டெம்பர் 4 ஆம் தேதி சப்பானில் உள்ள ஒசாக்காவில் பிறந்த தாங்கே, தனது இளமைக் காலத்தை ஹன்கோ, சாங்காய் ஆகிய சீன நகரங்களில் கழித்தார். அவருடைய உறவினர் ஒருவரின் இறப்பைத் தொடர்ந்து அவரது குடும்பம் சப்பானுக்குத் திரும்பியது. பசும் புற்றரைகளையும், செங்கற்களையும் கொண்ட அவர்களது சாங்காய் வசிப்பிடத்துக்கு முரண்பாடான வகையில், தாங்கே குடும்பத்தினர், சப்பானின் சிக்கோக்குத் தீவில் உள்ள இமாபாரி என்னும் இடத்தில் அமைந்திருந்த புல்லால் வேய்ந்த கூரையுடன் கூடிய பண்ணை வீடொன்றில் வாழத் தொடங்கினர்.[1]

இடைத்தரக் கல்வியை முடித்துக்கொண்ட தாங்கே, 1930 இல் உயர்நிலைப் பள்ளியில் சேர்வதற்காக இரோசிமாவுக்குச் சென்றார். இங்கே தான் முதலில் அவர் சுவிசு நவீனத்திவக் கட்டிடக்கலைஞர் லீ கொபூசியேயின் வேலைகளைப் பற்றி அறிந்தார். வெளிநாட்டுக் கலை ஆய்விதழ் ஒன்றில் சோவியத் மாளிகையின் வரைபடங்களைப் பார்த்த தாங்கே, ஒரு கட்டிடக் கலைஞர் ஆவதற்குத் தீர்மானித்தார். உயர்நிலைப் பள்ளியில் சித்தி பெற்றிருந்தாலும், கணிதத்திலும், இயற்பியலிலும் அவரது பெறுபேறுகள் போதியதாக இல்லாததால், மதிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு எழுதவேண்டியிருந்தது. இரண்டு வருடங்கள் இதற்கான முயற்சிகளை அவர் மேற்கொண்டிருந்தார். அதேவேளை, மேற்கத்திய மெய்யியல் குறித்தும் அவர் விரிவாக வாசித்தார். சப்பானிய அரசாங்கம் இராணுவ சேவையில் சேர இளைஞர்களைக் கட்டயப் படுத்தியபோது அதில் இருந்து தப்புவதற்காக நிகோன் பல்கலைக்கழகத்தில் திரைப்படத் துறையில் சேர்ந்தார். ஆனாலும் அவர் விரிவுரைகளுக்கு ஒழுங்காகச் சென்றதில்லை.[1]

1935 ஆம் ஆண்டு அவர் விரும்பியபடியே டோக்கியோ பல்கலைக்கழகத்தின் கட்டிடக்கலைத் துறையில் சேர்ந்து கற்கத் தொடங்கினார். தாங்கே, அங்கே இடெட்டோ கிசிடா, சோசோ உச்சிடா ஆகியோரிடம் கட்டிடக்கலைக் கல்வியைக் கற்றார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Stewart (1987), p. 170
"https://ta.wikipedia.org/w/index.php?title=கென்சோ_தாங்கே&oldid=2925796" இலிருந்து மீள்விக்கப்பட்டது