டி. ஏ. ஜெயலட்சுமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டி. ஏ. ஜெயலட்சுமி
பிறப்புதிருமலைராயன் பட்டணம், தமிழ்நாடு
இறப்பு2012 (அகவை 85)
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுநடிகை

டி. ஏ. ஜெயலட்சுமி (T. A. Jayalakshmi, இறப்பு: 2012) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட, நாடக மற்றும் நாட்டிய நடிகை ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

ஜெயலட்சுமி தமிழ்நாடு, காரைக்காலை அடுத்த திருமலைராயன் பட்டணத்தில் முதலியார் வகுப்பில் பிறந்தார்.[1] தனது மூன்றாவது அகவையிலேயே தாயையும், உடன்பிறந்த ஒரே தம்பியையும் இழந்தார். இந்த அதிர்ச்சியைத் தாங்காமல் தந்தையும் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். ஜெயலட்சுமி தனது பாட்டியாரின் ஆதரவில் வளர்ந்தார். ஏழு வயதில் பரத நாட்டியத்தை தனது சிற்றப்பாவிடம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். திருமலைராயன் பட்டணத்தில் இருந்து சிறிது காலம் சிதம்பரத்தில் ஆறாம் வகுப்பு வரை படித்து விட்டு மீண்டும் தனது ஊருக்குத் திரும்பினார்.[1]

அச்சமயத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து சபாரத்தினம் பிள்ளை என்பவர் அங்கு வந்து குடியேறினார். அவர் சிறுமி ஜெயலட்சுமி மீது அபிமானம் கொண்டு தனது குழந்தையென மதித்து வளர்த்து வந்தார். தனது எட்டாவது வயதில் தஞ்சாவூரில் தஞ்சை ஆட்சியர் முன்னிலையில் நடனமாடிப் பரிசு பெற்றார். தொடர்ந்து பல இடங்களில் நடனமாட சந்தர்ப்பம் கிடைத்தது. ஜெயலட்சுமிக்கு 12 வயதாகும் போது, சபாரத்தினம் பிள்ளை யாழ்ப்பாணத்திற்குத் திரும்பி விடவே ஜெயலட்சுமி மீண்டும் பாட்டி வீட்டிலேயே வளர வேண்டியதாயிற்று.[1] அந்நேரத்தில் வழுவூர் பி. இராமையா பிள்ளை சென்னையில் இருந்து அங்கே வந்திருந்தார். அவர் ஜெயலட்சுமியை தன்னுடன் சென்னைக்கு அழைத்து வந்து ஜுப்பிட்டர் பிக்சர்சாரிடம் அறிமுகப்படுத்தினார். அச்சமயம் அவர்கள் கண்ணகி (1942) திரைப்படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். இதற்கு ராமையா பிள்ளையே நடன ஆசிரியராக இருந்தார். மாதவி வீட்டில் கோவலன் முன்னிலையில் அதிரூபமான பெண் உமக்கேற்பவே நடப்பாள், அழைத்து வரவா சுவாமி என்ற பதத்திற்கு பாவம் பிடிப்பது போல ஆடும் பாத்திரத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது.[1]

அடுததாக, குபேர குசேலா, கன்னட ஹரிச்சந்திரா, பிரபாவதி ஆகிய படங்களில் நடனமாடினார். ஜகதலப் பிரதாபன் (1944) திரைப்படத்தில் உப நடிகையாகத் தோன்றி நடித்தார். தொடர்ந்து ஹரிதாஸ் (1944) திரைப்படத்தில் கங்காதேவியாகவும், சௌ சௌ (1945) படத்தில் செவிலியாகவும், ஸ்ரீ வள்ளி (1945) படத்தில் மெல்லியாகவும் தோன்றி நடித்தார்.[1]

அதன் பின்னர் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் என். எஸ். கே நாடகக் குழுவில் இணைந்து நாடகங்களில் நடித்தார்.[2] இழந்த காதல், கிருஷண லீலா, மனோகரா ஆகிய நாடகங்களில் சிறப்பாக நடித்து புகழ் பெற்றார். ஒரு முறை நாடகம் பார்க்க வந்திருந்த ஏ. வி. மெய்யப்பச் செட்டியார் தனது நாம் இருவர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை ஜெயலட்சுமிக்கு வழங்கினார். இப்படம் அவருக்கு நட்சத்திரப் பதவியை வழங்கியது.[1]

நாம் இருவருக்குப் பிறகு பைத்தியக்காரன் (1947) படத்தில் நடனமாடினார். பிழைக்கும் வழி (1948) படத்தில் கதாநாயகியாக நடித்தார். தொடர்ந்து பாரிஜாதம், நவஜீவனம் ஆகிய படங்களில் நடித்தார்.[1]

நடித்த திரைப்படங்கள்[தொகு]

விருதுகள்[தொகு]

டி. ஏ. ஜெயலட்சுமிக்கு தமிழக அரசு 1967 ஆம் ஆண்டில் கலைமாமணி விருது வழங்கிக் கௌரவித்தது.

மறைவு[தொகு]

நடிகை டி. ஏ. ஜெயலட்சுமி 2012 ஆம் ஆண்டில் தனது 85வது அகவையில் காலமானார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 ராஜாராம் (அக்டோபர் 1948). "நாட்டிய ரம்பா டி. ஏ. ஜெயலட்சுமி". பேசும் படம்: பக். 7-15. 
  2. கு. சா. கிருஷ்ணமூர்த்தி (நவம்பர் 2015). தமிழ்நாடக வரலாறு. Mukil E Publishing. https://books.google.com.au/books?id=L8L-CgAAQBAJ&pg=PT213&lpg=PT213&dq=%22%22%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%8F.%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%22&source=bl&ots=l2Ra8R4Ooz&sig=jrbKXbeWWW-Ls-ghrDdJpUKJDZM&hl=en&sa=X&ved=0ahUKEwi8wsXNq5XYAhWClZQKHW96BLsQ6AEIMDAB#v=onepage&q=%22%22%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%8F.%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%22&f=false. 
  3. "2012 இல் உதிர்ந்த பூக்கள்". தினகரன் (இலங்கை). 8 சனவரி 2013 இம் மூலத்தில் இருந்து 2017-12-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171219053938/http://archives.thinakaran.lk/2013/01/08/?fn=f1301085. பார்த்த நாள்: 19-12-2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._ஏ._ஜெயலட்சுமி&oldid=3486471" இலிருந்து மீள்விக்கப்பட்டது