தாயத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன்னர் சார்லமேன் அணிந்திருந்த தாயத்து

தாயத்து[1], (talisman) தங்கம், வெள்ளி அல்லது செப்புத் தகட்டால் ஆன நீள் உருண்டை வடிவத்தில் அமைந்திருக்கும் மந்திரத் தாயத்து ஆகும். இதனை தீய சக்திகளிடமிந்து தங்களை காத்துக் கொள்வதற்காக இடுப்பில் அல்லது கழுத்தில் அணிவர்.

கன்னியாகுமரி மாவட்டப் பகுதிகளில் பொதுவாக உடலில் கட்டும் காப்பு எனப்படும் தாயத்துக்களை எல்லாமே தாலி என்பது வழக்கம்.[2]

சங்கத் தமிழ் இலக்கியங்களிலும், அதர்வண வேதத்திலும், இந்துக்கள் தாயத்துக்களைப் பயன்படுத்திய செய்திகள் கூறப்ப்பட்டுள்ளது.

தற்காலத்தில் அனைத்து சமயத்தவரும் தங்களின் வேத மந்திரங்களால் செபிக்கப்பட்ட தாயத்துக்களைக் கருப்புக் கயிற்றால் கைகளிலும், கழுத்திலும் அணிந்துகொள்கின்றனர். குழந்தைகளின் அரைஞாண் கயிறுகளில் கட்டப்படும் தாயத்தில், தொப்புள்கொடியின் ஒரு சிறு துண்டு வைக்கப்படுகிறது.

இலக்கியக் குறிப்புகள்[தொகு]

ரட்சை என்றும் பந்தனம் என்றும் காப்பு என்றும் அழைக்கப்படும் தாயத்து, ஒரு காலத்தில் தாலி என்று அழைக்கப்பட்டது. சிறுவர்களுக்கும் மணமானவர்களுக்கும் தாலி கட்டப்பட்டது. சிறுவர்கள் ஐம்படைதாலியில் விஷ்ணுவின் ஐந்து சின்னங்களான சங்கு, சக்ரம், வாள், வில்,கதை ஆகிய சின்னங்கள் பொறிக்கப்பட்டதால் குழந்தைகளை தீய சக்திகள் அண்டாது என்று தமிழர்கள் நம்பினர்.

குறிஞ்சி நிலக் குறவர்கள் மற்றும் காடுகளில் வாழ்வோர் புலிப் பல், புலி நகம் ஆகியவற்றால் ஆன தாலிகளை அணிந்தனர்.

ஐம்படைத் தாலி பொன்னுடைத் தாலி என் மகன் — அகம்.54;
தாலி களைந்தன்றும் இலனே — புறம்.77[3]

பி. டி. சீனிவாச ஐயங்கார் எழுதிய தமிழர் வரலாறு (1930) என்னும் நூலில் புலிப்பல் தாயத்தே பிற்காலத் தங்கத் தாலிக்கு வழி செய்தது என்று வாதாடுகிறார். குறுஞ்சி நிலப் பெண்களும் இதை அணிந்தனர் என்பார்.

சங்க காலத்திற்கு பிந்தைய இலக்கியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை (3-135, 7-56), பெரியபுராணம் ஆகியவற்றில் சிறுவர்களுக்கான தாயத்து மற்றும் புலிப் பல் தாயத்து குறித்தான விவரங்கள் உள்ளது.

சிந்து சமவெளியில் தாயத்து[தொகு]

சிந்து சமவெளியில் கிடைத்த ஸ்வஸ்திகா சின்னங்கள், சிந்து சமவெளி மக்கள் பயன்படுத்திய தாயத்துகள் எனக் கருத இடம் உண்டு. உலகம் முழுதும் பண்டைய கலாசாரங்களில் ஸ்வஸ்திகா சின்னம் காணப்பட்டாலும் இந்தியாவில் இருந்தே இது சென்றதை உணரமுடிகிறது. வட இந்தியாவின் இந்துக்களின் திருமண அழைப்பிதழ்களிலும், கடைகள், வணிக நிறுவனங்களிலும் ‘’ஸ்வஸ்திகா’’ சின்னத்தைப் பொறித்து வருகின்றனர்.

பிற சமூகங்களில் தாயத்தின் பயன்பாடு[தொகு]

18ம் நூற்றாண்டின் ஒரு கிறித்துவரின் தாயத்து

யூதர்கள், அரேபியர்கள் மற்றும் கிறித்தவர்கள் தீய சக்திகளிடமிருந்து விடுபடவும், பயம் தெளியவும், எதிர்களை வெற்றி கொள்ளவும் வேத மந்திரங்களினால் ஓதப்பட்டு எழுதிய தாயத்துக்களையும், சிலுவைகளையும், தாலிஸ்மேன்[4] [5] எனும் பெயரில் அணிந்திருந்தனர்.[6]

தாயத்து அணிவதன் பயன்[தொகு]

தாயத்துகள் அணிவதால் மனதிற்கும், உடலுக்கும் பாதுகாப்பு தருவதோடு, அதிர்ஷ்டத்தையும் தரும் என்றும் நம்பினர். மேலும் தீய சக்திகள், பேய், பிசாசுகளை அண்ட விடாது என்றும், பயத்தைப் போக்கவும், எதிரிகளை வெல்லவும் அவை உதவும் என்றும் நம்பினர். [7] அதர்வண வேத மந்திரங்கள் இதனை தெளிவுபடுத்துகிறது.

துவக்க காலத்தில் பனை ஓலைச் சுருளில் மந்திர, தந்திர எந்திரங்களை வரைந்து அணிந்தனர். பனை மரத்துக்கு வட மொழியில் தால என்று பெயர். இதில் இருந்தே தாலி, தாலிஸ்மேன் (ஆங்கிலச் சொல்) போன்ற சொற்கள் கிளைத்திருக்கலாம்.

கோயில்களில்[தொகு]

காஞ்சி காமாட்சியம்மன், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயில்களில் அம்மனுக்கு தாடங்கப் பிரதிஷ்டை என்ற பெயரில் அம்மனுக்கு ((தாள்+அங்கம்= தாடங்கம் என்னும்)) காதணி அணிவிக்கப்படுகிறது.

கிரகண காலத்தில்[தொகு]

சந்திர, சூரிய கிரகண காலங்களில் எந்த நட்சத்திரங்கள், ராசிகள் பாதிக்கபடுகின்றனவோ, அந்த ராசிக் காரர்களுக்கு பனை ஓலையில் எழுதப்பட்ட மந்திர ஓலையை பட்டம் கட்டும் வழக்கம் அந்தணர் வீடுகளில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. தாயத்து
  2. தாலப்பொலி: ஒருகடிதம், ஜெயமோகன்
  3. இந்தியப் பண்பாடும் தமிழரும், பக்கம் 297/298 ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் (மதுரை எஸ். ஆர்.கே), 1971ம் ஆண்டு வெளியீடு.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-11-08. பார்க்கப்பட்ட நாள் 2017-10-01.
  5. "Henry George Liddell, Robert Scott, A Greek-English Lexicon, τελέω". Perseus.tufts.edu. பார்க்கப்பட்ட நாள் 2017-04-19.
  6. Gonzalez-Wippler, Migene (2001). Complete Book Of Amulets & Talismans. Lewellyn Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-87542-287-X. 
  7. Campo, Juan E. (2009). Encyclopedia of Islam. New York: Facts On File. பக். 40. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1438126964. https://archive.org/details/encyclopediaofis0000camp. 

வெளி இணைப்புகள்[தொகு]

  • Forshaw, Peter (2015) 'Magical Material & Material Survivals: Amulets, Talismans, and Mirrors in Early Modern Europe’, in Dietrich Boschung and Jan N. Bremmer (eds), The Materiality of Magic. Wilhelm Fink.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாயத்து&oldid=3710884" இலிருந்து மீள்விக்கப்பட்டது