நீலாயதாட்சி அம்மன் கோவில், நாகப்பட்டினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீலாயதாட்சி அம்மன் கோவில், நாகப்பட்டினம்
ஆள்கூறுகள்:10°45′59″N 79°50′33″E / 10.7663°N 79.8426°E / 10.7663; 79.8426
பெயர்
பெயர்:நீலாயதாக்ஷி அம்மன் கோவில்
அமைவிடம்
அமைவு:நாகப்பட்டினம், தமிழ்நாடு
ஏற்றம்:40.24 m (132 அடி)
கோயில் தகவல்கள்
மூலவர்:நீலாயதாக்ஷி அம்மன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை

நீலாயதாக்ஷி அம்மன் கோவில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் நாகைக்காரோணம் என்கின்ற நாகப்பட்டினம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள சப்தவிடங்க தலங்களில் ஒன்றாகும்.[1] இந்த ஸ்ரீ நீலாயதாக்ஷி சமேத ஸ்ரீ காயாரோகணேஸ்வரர் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவஸ்தலம்.[2] இக்கோயிலின் மூலவர் காயாரோகணேசுவரர்[3] ஆக இருப்பதால், இக்கோயில் ஒரு சிவன் கோயில் ஆகும். இந்த கோவில் மதுரை மீனாக்ஷி அம்மன், காஞ்சி காமாக்ஷி அம்மன் மற்றும் காசி விசாலாக்ஷி அம்மன் கோவில்களை போல நீலாயதாக்ஷி அம்மன் கோவில் என்று தான் அழைக்கப்படுகிறது.[4]

இக்கோயிலின் மூலவர் – ஸ்ரீ காயாரோகணேஸ்வரர் (ஆதிபுராணர்), அம்பாள் –ஸ்ரீ நீலாயதாக்ஷி (கருந்தடங்கண்ணி), ஸ்ரீ தியாகராஜர் (சுந்தரவிடங்கர்),  நடனம் – தரங்க நடனம். சப்தவிடங்கத் தலங்களில் இரண்டாவது தலம். கடற்கரை வீசி நடனம் – பாராவாரதரங்க நடனம் (கடலில் அலை ஆடுவது போல்).

தலமரம் – மாமரம்,  தீர்த்தம் – புண்டரீக தீர்த்தம், தேவ தீர்த்தம்,  புராண பெயர் - நாகை காரோணம்.

இக்கோயில் அமைந்துள்ள இடத்தின் தற்போதைய பெயர் - நாகப்பட்டினம், மாவட்டம் - நாகப்பட்டினம், மாநிலம் - தமிழ்நாடு.

பாடியவர்கள்[தொகு]

சம்பந்தர் - தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 82-ஆவது தலம்.

  • சோழ மன்னர்களின் தலைநகரங்களுள் ஒன்றாக விளங்கிய தலம். 
  • புண்டரீக முனிவரை இறைவன் தன் மேனியில் ஆரோகணம் செய்து கொண்ட தலம். 
  • சிறப்பு மூர்த்தியாக நாகாபரணப் பிள்ளையாரும் அருள்புரியும் தலம். 
  • இத்தலத்து விருட்சமான மாமரம், இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று சுவைகளுடன் இருக்கிறது. இம்மரம் கோயிலின் தென்கிழக்கு பிரகாரத்திலிருந்து பார்க்கும்போது, நந்தி வடிவில் தோற்றமளிக்கிறது

தல சிறப்பு[தொகு]

  • இக்கோயில் முகப்பிலுள்ள விநாயகர், உடலில் நாகத்தை ஆபரணமாக சூடி, தலைக்கு மேலே, மற்றொரு நாகம் குடை பிடித்தபடி இருக்க அதன் கீழே காட்சி தருகிறார். எனவே இவர், "நாகாபரண விநாயகர்" என்று அழைக்கப்படுகிறார். நாகதோஷம் உள்ளவர்கள் இவருக்கு, ராகு காலத்தில் பாலாபிஷேகம் செய்வித்து வேண்டிக்கொள்கிறார்கள். ராகு, கேது பெயர்ச்சியின்போது இவருக்கு விசேஷ பூஜைகளும் நடக்கிறது.
  • கோயில்களில் நாய் வாகனத்துடன் காட்சி தரும் பைரவர், இங்கு சிம்ம வாகனத்துடன் காட்சி தருகிறார். புண்டரீக தீர்த்தக்கரையில் இவரது சன்னதி இருக்கிறது. புண்டரீகர், சிவனை வழிபட்டபோது, காசியின் கங்கை தீர்த்தம் இங்கு பாதாளத்திலிருந்து பொங்கியது. அப்போது, கங்கைக்கரையில் உள்ள பைரவரும், இங்கு எழுந்தருளினார். இவரே இங்கு, "காலசம்ஹார பைரவராக" அருளுகிறார். இவருக்கு பின்புறம் சிம்ம வாகனம் இருக்கிறது. காலனை (எமன்) சம்ஹாரம் செய்த சிவனே, இங்கு பைரவர் வடிவில் அருளுவதாக ஐதீகம். இவர் எமனுக்குரிய தென்திசையை நோக்கியிருப்பதால், ஆயுள் பலம் கிடைக்க இவரிடம் வேண்டிக்கொள்ளலாம். இவர் உக்கிரமானவராக காட்சி தருவதால், சாந்தமாக்க எதிரில் இரண்டு விநாயகர்களை ஒரு சன்னதியில் பிரதிஷ்டை செய்துள்ளனர். 
  • பிரகாரத்தில் எட்டு கரங்களில் ஆயுதங்களுடன், "அஷ்டபுஜ பைரவர்', அஷ்டபுஜ காளிக்கும் சன்னதி இருக்கிறது.
  • எண்திசைகளுக்கு அதிபதிகளான அஷ்டதிக் பாலகர்கள், இங்கு சிலை வடிவில் காட்சி தருகின்றனர். 
  • நான்கு தந்தங்கள் கொண்ட, இரண்டு யானைகள் அபிஷேகம் செய்தபடி இருக்க, இரு கால்களையும் தொங்கவிட்டபடி உள்ள கஜலட்சுமியையும் இங்கு தரிசிக்கலாம். 
  • சுவாமி கோஷ்டத்தில் 8 சீடர்களுடன் தட்சிணாமூர்த்தி இருக்கிறார்.
  • சுவாமி சன்னதி முன்மண்டபத்தின் மேல் பகுதியில் 12 ராசி சக்கரம் உள்ளது. 
  • மாசி மகத்தன்று, சிவன் கடலுக்குச் சென்று, தீர்த்தமாடும் வைபவம் நடக்கும். 
  • இங்குள்ள ஆறுமுகர் சிலை, திருவாசியுடன் சேர்த்து 12 கரங்களில், ஆயுதங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. 
  • பிரகாரத்தில் அதிபத்த நாயனார், வல்லப கணபதி, அகோர வீரபத்ரர், ஆத்மலிங்கம், பிள்ளையார், பழநியாண்டவர், இடும்பன் சந்நிதிகள் உள்ளன.
  • ராஜதானி மண்டபத்தில் விநாயகர், வள்ளி-தெய்வயானையுடனான மயில் மீதமர்ந்த பெரிய மூர்த்தமான ஆறுமுகர், காசி விஸ்வநாதர், பைரவர் முதலானோரின் சந்நிதிகள் உள்ளன. 
  • துவாரபாலகர்களின் அருகில் ஒருபுறம் விநாயகரும், மற்றொருபுறம் அதிகார நந்தியும் உள்ளனர். 
  • உள்பிரகாரத்தில் சூரியன், அறுபத்துமூவர், மாவடிப்பிள்ளையார், வெண்ணெய்ப்பிரான், அருணாச்சலேஸ்வரர், பைரவர், கஜலக்ஷ்மி முதலானோரின் சந்நிதிகள் உள்ளன. 
  • நவக்கிரகங்கள் அனைத்தும் (மூன்று வரிசையாக) சிவனாரை நோக்கியவாறு மேற்கு நோக்கியிருக்கிறவாறு அமைந்துள்ளன. 
  • சண்டிகேஸ்வரர் சன்னதி, கோஷ்டத்தை ஒட்டி இல்லாமல் பிரகாரத்திலிருந்து விலகியுள்ளது.
  • சனைச்சரன் சந்நிதி 
  • நடராஜர் சபை 
  • பிட்சாடனர், சிவகாமி அம்மையுடனான நடராஜர், காட்சி நாயகர் முதலானோரின் உற்சவ மூர்த்தங்கள் 
  • மூலவர் பெரிய பாணத்துடன் கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் திருக்காட்சி தருகின்றனர் 
  • மூலவரின் பின்புறம் தனி மாடத்தில் சிவனார், அம்மை மற்றும் கந்தருடன் அமர்ந்த கோலமான சோமாஸ்கந்தர் திருவடிவம் உள்ளது 
  • அம்பிகை, இத்தலத்தில் திருமணப்பருவத்திற்கு முந்தைய கன்னியாக, 'யவ்வன பருவ' கோலத்தில் காட்சி தருகிறார். எனவே ஆடிப்பூர விழா இங்கு வெகு விமரிசையாக நடக்கிறது.
  • அம்பாள் எதிரிலுள்ள நந்தி தன் கழுத்தை முழுமையாக திருப்பி, சிவன் சன்னதியை பார்த்தபடி இருக்கிறது. நந்தியின் இடது கண் சிவனையும், வலக்கண் அம்பிகையையும் பார்த்தபடி அமைக்கப்பட்டிருப்பது சிறப்பான அமைப்பு. எனவே, இந்த நந்தியை "இரட்டைப் பார்வை நந்தி' என்று அழைக்கிறார்கள். கண் தொடர்பான நோய்கள் நீங்க, இந்த நந்தியிடம் வேண்டிக்கொள்ளலாம்.
  • மூலவர் சந்நிதிக்குப் பக்கத்தில் தியாகராஜர் சந்நிதி சிறப்புடன் அமைந்துள்ளது. இத்தலத்தில் வைகாசி விசாக விழாவின்போதும், மார்கழி திருவாதிரையன்றும் சுவாமியின் வலது கை மற்றும் பாதத்தை தரிசிக்கும்படியாக அலங்காரம் செய்கிறார்கள். இந்த இரண்டு நாட்கள் மட்டுமே தியாகராஜரின் இந்த கோலத்தை தரிசிக்க முடியும். விழாவின்போது இவர் அலைபோல முன்னும், பின்னுமாக வீசியவாறு நடனமாடி வருவார். 
  • கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர், பிட்சாடனர் முதலியோர் திருக்காட்சி
  • வைகாசி விசாக திருவிழா மிகவும் பிரசித்தம்.

சிறப்பு[தொகு]

  • அதிபத்த நாயனாருக்கு சிவனார் அருள் செய்த விழா ஆவணி மாதத்தில் நடக்கிறது. அதிபத்த நாயனார் வாழ்ந்த இடம் – செம்படவர்சேரி – தற்போது நம்பியாங்குப்பம் என்று அழைக்கப்படுகிறது 
  • ஆதிசேஷன் வழிபட்ட தலம் 
  • சக்திபீடங்களில் ஒன்றான தலம் 
  • இது சிவன் கோவில் ஆனாலும், மக்கள் நீலாயதாக்ஷி அம்மன் கோயில் என்றே அழைக்கின்றனர் 
  • கயிலையும், காசியும் போல இத்தலமும் முக்திமண்டபத்துடன் திகழ்கிறது 
  • சப்தரிஷிகளுக்கும் சிவனார் சோமாஸ்கந்தராய் காட்சியளித்த தலம் 
  • சாலிசுக மன்னனுக்கு கல்யாண கோலம் காட்டும் பஞ்சக்குரோச யாத்திரையாகிய சப்தஸ்தான விழா நடைபெறுகிறது 
  • தசரதன் சனீஸ்வரரை  பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம் 
  • அம்பாள், முருகன், திருமால், அகத்தியர், வசிஷ்டர், முசுகுந்தன், அரசகேசரி, விசித்திரகவசன், விரூரகன், பத்திரசேனன், பாற்கரன், மித்திரன், காளகண்டன், சண்டதருமன் முதலியோர் வழிபாட்டு அருள்பெற்ற தலம் 
  • வைகாசியில் திருக்கல்யாண விழா, ஆடிப்பூரம், சிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை முதலான உற்சவங்கள். 
  • கோயில்களில் திருவிழாவின் போது, சுவாமி மாடவீதிகளைச் சுற்றிவிட்டு கோயிலுக்குத் திரும்பிவிடுவார். ஆனால், இக்கோயிலில் இங்கிருந்து கிளம்பும் சுவாமி, நாகையைச் சுற்றியுள்ள பொய்கைநல்லூர், பொறவாச்சேரி, சிக்கல், பாலூர், வடகுடி, தெத்தி, நாகூர் என ஏழு ஊர்களுக்குச் சென்றுவிட்டு கோயிலுக்குத் திரும்புகிறார். சாலிச மகாராஜா இந்த ஏழு தலங்களில் சிவபூஜை செய்தபின்பு, சிவன் இங்கு திருமணக்கோலத்தில் காட்சி தந்தார். இதன் அடிப்படையில், சுவாமி 7 ஊர்களைச் சுற்றி வருகிறார்.
  • செய்த பாவத்திற்கு மன்னிப்பும், முக்தியும் கிடைக்க வழிபடவேண்டிய தலம் 
  • சிவன் கோயில்களில் பிரதோஷத்தின்போது, சிவன் ரிஷப வாகனத்தில் செல்வது வழக்கம். ஆனால் இக்கோயிலில் மோகினி வடிவில் பெருமாளும் புறப்பாடாகிறார். பிரதோஷ வேளைக்கு முன்பாக, பெருமாளின் மோகினி அவதாரம் நிகழ்ந்ததால், பிரதோஷத்தன்று மோகினி வடிவில் பெருமாள் புறப்பாடாகிறார். இவரை பிரதோஷத்தின்போது மட்டுமே தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் சிவனாரின் மூலஸ்தானத்திற்குள் வைத்துவிடுகின்றனர்.

அழுகுணி சித்தர்[தொகு]

  • அழுகுணி சித்தரின் ஜீவசமாதி இக்கோயிலில் உள்ளது. வைகாசி விசாகத்தன்று இவருக்கு யாகம் மற்றும் விசேஷ பூஜைகள் நடத்தப்படுகிறது. பவுர்ணமிதோறும் பாயச நைவேத்யம் படைத்து, விசேஷ பூஜை செய்து வழிபடுகின்றனர்.

* இத்தலத்தில் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சௌந்தரராஜ பெருமாள் கோயில், நாகநாதர் கோயில், அழகியநாதர் கோயில், அமரநந்தீசர் கோயில், கைலாசநாதர் கோயில், விஸ்வநாதர் கோயில், மேலைக்காயாரோகணர் கோயில், மிகவும் சிறப்பு வாய்ந்த ஸ்ரீ நெல்லுக்கடை மாரியம்மன் கோவில், காளியம்மன் கோவில், முதலான ஆலயங்களும் இத்தலத்தில் உள்ளன.

திருநாகை திருக்காயாரோகண சுவாமி திருக்கோயிலில் நீலாயதாக்ஷி அம்மனுக்கு ஆடிப்பூரம் (பூரம் கழித்தல்)[தொகு]

நீலாயதாக்ஷி அம்மனுக்குஆடிப்பூரம் கொடி ஏற்றுவதிலிருந்தே களை கட்ட ஆரம்பிக்கும். விழா ஆரம்பநாள் முதல் காலையிலும், இரவிலும் அம்மன் வித விதமான அலங்காரத்துடனும், வித விதமான வாகனங்களுடனும், பரிவாரத்துடன் நகரில் ஊர்வலம் வரும் காட்சி அற்புதமாக இருக்கும்.அம்மன் முன்னும் பின்னும் நாதஸ்வர கலைஞ்ர்களும்,ஓதுவார்களும் வாசித்தபடி, ஓதியபடி வருவர். நான்கு வீதிகளிலும் மேடை அமைத்து கச்சேரி நடக்கும். இரவில் கச்சேரி நடந்து ஸ்வாமி கோவிலை திரும்ப அடைய விடிகாலை ஆகி விடும்.கச்சேரியை கேட்க பக்கத்து ஊர்களிலிருந்தெல்லாம் ஜனங்கள் வந்து விடிய விடிய கேட்டு செல்வார்கள். அவரவர் வீட்டு கல்யாணம் போல காலை,மாலை என்னேரமும் கோவிலில் திரளாக கூட்டம்! மக்கள் தங்கள், தங்கள் வீட்டு வாசல் முன் நீர் தெளித்து கோலமிட்டு விமரிசையாக வரவேற்பர். ஆடிப்பூரம் அன்று காலை அம்மன் அலங்காரமாக கோவில் பிரகாரத்தில் வரும்போது AKC நடராஜன் க்ளாரினெட் வாசிப்பார். அம்மன் வசந்த மண்டபத்தில் ஊஞ்சலில் அமர்ந்து காக்ஷி தருவாள் நீலாயதாக்ஷி அம்மனின் பின்னலங்காரம் மிக விசேஷமாக இருக்கும். அதைக் காணும் விதத்தில் சுற்றிவர கண்ணாடிகள் வைக்கப்படும். ஆடிப்பூரம் கழிப்பு காலை 1 மனிக்குள் முடியும். இரவில் வாண வேடிக்கைகள் நடக்கும். ஆடிப்பூரத்தன்று இரவு ஸ்ரீ நீலாயதாக்ஷி அம்மன் வெண்மைநிற ஜரிகை புடைவையை அணிந்து, பின்னால் அழகிய ஜடை தரித்து ஜெகஜோதியாய் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பீங்கான் ரதத்தில் ஊர்வலம் வருவார். பார்க்க பார்க்க அலுக்காத ஸ்வரூபம். அவர் அழகிய உருவை ரதத்தில் காண ஆயிரம் கண் வேண்டும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. ராஜலக்‌ஷ்மி, நாகை (2023-02-19). "புகழ்பெற்ற கோயிலில் வெடிகுண்டு மிரட்டல்....நாகையில் பரபரப்பு". tamil.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2023-10-12.
  2. "அருள்மிகு நீலாயதாட்சி சமேத காயாரோகணேஸ்வரர் கோயில், நாகப்பட்டினம் - Hindu temple - Nagapattinam - Tamil Nadu". yappe.in. பார்க்கப்பட்ட நாள் 2023-10-12.
  3. "Kayaroganeswarar Temple : Kayaroganeswarar Kayaroganeswarar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-10-12.
  4. மாலை மலர் (2020-10-12). "நீலாயதாட்சி சமேத காயாரோகணேஸ்வரர் திருக்கோவில்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-10-12.

வெளி இணைப்புகள்[தொகு]