ஓலர் தொகுப்பு முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓலர் தொகுப்பு முறை (Wohler synthesis) என்பது அம்மோனியம் சயனேட்டை யூரியாவாக மாற்றும் தொகுப்பு முறையாகும்.[1]

ஒரு கண்ணோட்டம்[தொகு]

இந்த வேதி வினையானது 1828 ஆம் ஆண்டில் பிரெடெரிக் ஓலர் என்பவரால் அம்மோனியம் சயனேட்டைத் தொகுப்பதற்காக செய்யப்பட்ட முயற்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வினையின் கண்டுபிடிப்பே நவீன கரிம வேதியியல் என்ற வேதியியலின் பெரும் பிரிவின் தொடக்கப் புள்ளியாகக் கருதப்படுகிறது.  ஓலரின் வினையானது அம்மோனியம் சயனேட்டை மாற்றம் செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும் இந்த உப்பு நிலைத்தன்மையற்ற ஒரு இடைநிலைப்பொருளாகவே தோன்றுகிறது.  ஓலர் இந்த தொகுப்பு முறை பற்றிய தனது அசலான அறிக்கையில், வெவ்வேறு வினைபடு பொருட்களைக் கொண்டு விளக்கமளித்துள்ளார். சமசயனிக் அமிலம் மற்றும் அமோனியாவின் இணைப்பு, வெள்ளி சயனேட்டு மற்றும் அம்மோனியம் குளோரைடு இவற்றின் இணைப்பு, காரீய சயனேட்டு மற்றும் அம்மோனியா இவற்றின் இணைப்பு மற்றும் இறுதியாக  பாதரச சயனேட்டு மற்றும் சயனேட்டிக் அம்மோனியா இவற்றின் இணைப்பு எனப் பலவகை இணை வினைபடுபொருட்களை ஓலர் பட்டியலிட்டிருந்தார்.[2]

இந்த வினையானது பொட்டாசியம் சயனேட்டு மற்றும் அம்மோனியம் குளோரைடு கரைசல்களை ஒன்றோடு ஒன்று சேர்ப்பதிலிருந்து தொடங்குகிறது.  இந்தக் கலவை முதலில் வெப்பப்படுத்தப்பட்டு பின்னர் குளிர்விக்கப்படுகிறது. இந்த வேதிமாற்றத்திற்கான கூடுதல் நிரூபணமாக ஆக்சாலிக் அமிலக் கரைசலானது சேர்க்கப்படும் போது யூரியா ஆக்சலேட்டு வெண்ணிற வீழ்படிவாக உருவாகிறது.[3]

இதே வினையானது காரீய சயனேட்டு மற்றும் அம்மோனியா ஆகியவற்றை வினைப்படுத்துவதன் மூலமாகவும் மாற்றுவழியில் நிகழ்த்தப்படலாம். உண்மையான ஓலர் தொகுப்பு முறை வினையானது ஒரு இரட்டை இடப்பெயர்ச்சி வினை வழிமுறையின்படி நிகழ்ந்து அம்மோனியம் சயனேட்டை உருவாக்குகிறது.

அம்மோனியம் சயனேட்டு அம்மோனியா மற்றும் சயனிக் அமிலமாக வேதிச் சிதைவு அடைகிறது. இவையே பின்னர் டாட்டாமெரிக் மாற்றியமாக்கத்தைத் தொடர்ந்த கருக்கவர் சேர்க்கை வினை நிகழ்ந்து யூரியாவைத் தருகிறது.

ஆக்சாலிக் அமிலத்துடனான அணைவாக்க வினை இந்த வினையை வேதியியற் சமநிலையை முடிவினை நோக்கி நகர்த்துகிறது.

ஓலர் தொகுப்பு முறையானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வினையாக உள்ளது. ஏனென்றால் கனிம வினைபடுபொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட முதல் கரிமச் சேர்மமாக யூரியா உள்ளது. இந்தக் கண்டுபிடிப்பானது, கரிமச் சேர்மங்கள் உருவாக்கப்படுவதற்கு உயிருள்ள பொருட்களில் உள்ள ஒரு வகையான சக்தியின் உதவி அவசியமாகத் தேவைப்படுகிறது என்ற உயிர் சக்தி கோட்பாlட்டினை (Vital force theory) தவறானது என நிரூபித்தது.  இந்த வினைக்குப் பிறகு கனிமச் சேர்மங்களுக்கும் கரிமச் சேர்மங்களுக்கும் இடையே ஒரு தெளிவான எல்லை எழுப்பப்பட்டது. 1799 ஆம் ஆண்டில் யூரியாவானது தொகுப்பு முறையில் தயாரிக்கப்படும் வரை உயிரியல் மூலங்களில ஒன்றான சிறுநீரில் இருந்து மட்டுமே யூரியா பிரித்தெடுக்கப்பட்டது. ஓலர் தனது வழிகாட்டியாக இருந்த பெர்சீலியசிடம் பின்வருமாறு கூறுகிறார்.[சான்று தேவை]

"I cannot, so to say, hold my chemical water and must tell you that I can make urea without thereby needing to have kidneys, or anyhow, an animal, be it human or dog".[சான்று தேவை]

கரிம வேதியியலானது இந்தத் தொகுப்பு முறை கண்டுபிடிக்கப்ட்ட 1828 இலிருந்தே தொடங்கப்பட்டது என்பது குறித்து வாதம் ஒன்று உள்ளது. அதாவது இதற்கு நான்காண்டுகளுக்கு முன்னதாகவே, அதாவது 1824 ஆம் ஆண்டிலேயே ஆக்சாலிக் அமிலமானது சயனோஜென் என்ற அதன் முன்னோடிச் சேர்மத்திலிருந்து ஓலராலேயே தயாரிக்கப்பட்டுள்ளது என்பதே அந்த வாதமாகும். உயிர் சக்தி கோட்பாடும் 1828 ஆம் ஆண்டோடு முடிந்து போகவில்லை எனவும், 1845 ஆம் ஆண்டில் கோல்ப் கனிம - கரிம மாற்றங்களை கார்பன் டை சல்பைடிலிருந்து அசிட்டிக் காடியாக மாற்றிக் காட்டியது வரை லீபிக் மற்றும் பாசுடியர் ஆகியோர் ஒருபோதும் உயிர் சக்தி கோட்பாட்டைத் தோற்றுப் போனதாக ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் பின்னரே உயிர் சக்திக் கோட்பாட்டை நம்பியவர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது என்றொரு வாதமும் உள்ளது. [சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

  1. ^ Friedrich Wöhler (1828). "Ueber künstliche Bildung des Harnstoffs". Annalen der Physik und Chemie 88 (2): 253–256. doi:10.1002/andp.18280880206. Bibcode: 1828AnP....88..253W. http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k15097k/f261.chemindefer. 
  2. ^ Wöhler's Synthesis of Urea: How Do the Textbooks Report It? Paul S. Cohen, Stephen M. Cohen J. Chem. Educ. 1996 73 883 Abstract பரணிடப்பட்டது 2008-05-12 at the வந்தவழி இயந்திரம்
  3. ^ A Demonstration of Wöhler's Experiment: Preparation of Urea from Ammonium Chloride and Potassium Cyanate Zoltán Tóth. J. Chem. Educ. 1996 73 539. Abstract பரணிடப்பட்டது 2008-05-16 at the வந்தவழி இயந்திரம்
  4. ^ Recreation of Wöhler's Synthesis of Urea: An Undergraduate Organic Laboratory Exercise James D. Batchelor, Everett E. Carpenter, Grant N. Holder, Cassandra T. Eagle, Jon Fielder, Jared Cummings The Chemical Educator 1/Vol .3,NO.6 1998

பன்னாட்டுத் தர தொடர் எண் 1430-4171 Online article பரணிடப்பட்டது 2006-09-30 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓலர்_தொகுப்பு_முறை&oldid=3580181" இலிருந்து மீள்விக்கப்பட்டது