சுண்ணாம்பு நீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுண்ணாம்பு நீர்

சுண்ணாம்பு நீர் (Limewater) என்பது கால்சியம் ஐதராக்சைடின் நீர்த்த கரைசலுக்கான பொதுப்பெயர் ஆகும். கால்சியம் ஐதராக்சைடு, Ca(OH)2, நீரில் மிக மிகக் குறைவாகக் (1.5 கி/லி at 25 °C[1]) கரையும் தன்மை பெற்றதாகும். தூய சுண்ணாம்பு நீருானது தெளிவான, நிறமற்ற, இலேசான மண்ணின் மணமுடைய, காரக்கசப்புச் சுவையுடையதாகும். சுண்ணாம்பு என்பது காரத்தன்மையுள்ள கனிமம் என்பதோடு தொடர்புடையதாகும்.

சுண்ணாம்பு நீரானது, நீரில் கால்சியம் ஐதராக்சைடை நன்கு கலக்கி, அதிகப்படியான, கரையாத நிலையில் உள்ள கால்சியம் ஐதராக்சைடை வடிகட்டி பிரித்தெடுப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. அதிகப்படியான கால்சியம் ஐதராக்சைடானது கரைக்கப்படும் போது, பால் போன்ற வெண்மை நிறத்தை வெளிப்படுத்தும் தொங்கல் கரைசல் கிடைக்கிறது. இதன் காரணமாக இக்கரைசல் சுண்ணாம்புப் பால் என்ற பொதுப் பெயரைக் கொண்டுள்ளது. சுண்ணப்பால் என்பது சுண்ணாம்பின் தெவிட்டிய கரைசல் ஆகும். இதன் காரகாடித்தன்மைச் சுட்டெண் 12.4 ஆகும். இக்கரைசல் இயல்பில் காரத்தன்மை கொண்டது.

வேதியியல்[தொகு]

ஐதரோகுளோரிக் அமிலம் மற்றும் கால்சியம் கார்பனேட் சோதனை (இடது பக்க சோதனைக் குழாய்)

சுண்ணாம்பு நீர் உள்ள சோதனைக் குழாயில் கார்பனீராக்சைடைச் செலுத்தும் போது தெளிந்த சுண்ணாம்பு நீர் பால் போல் மாறுகிறது. இதற்குக் காரணம் சுண்ணாம்பு நீரில் உள்ள கால்சியம் ஐதராக்சைடானது கார்பனீருாக்சைடுடன் வினைப்பட்டு கால்சியம் கார்பனேட்டு வீழ்படிவைத் தருகிறது. இதன் காரணமாக, கரைசலானது பால் போன்ற நிறமுடைய கால்சியம் கார்பனேட்டுத் துகள்களைத் தனது தொங்கல் கரைசலில் கொண்டுள்ளது:

Ca(OH)2(aq) + CO2(g) → CaCO3(s) + H2O(l)

அதிக அளவில் CO2 ஆனது சேர்க்கப்பட்டால், பின்வரும் வினையானது நிகழ்கிறது:

CaCO3(s) + H2O(l) + CO2(g) → Ca(HCO<sub id="mwMQ">3</sub>)<sub id="mwMg">2</sub>(aq)

கால்சியம் பைகார்பனேட்டானது நீரில் கரையக்கூடிய தன்மை உடையதாதலால், பால் போன்ற நிறம் காணாமல் போகிறது.

பயன்பாடுகள்[தொகு]

மேலே சொன்ன வேதியியல் பண்பானது, வாயு நிலையில் உள்ள மாதிரிகளில் கார்பனீராக்சைடு உள்ளதா? இல்லையா? என்பதைப் பள்ளி ஆய்வகங்களில் கண்டறியப் பயன்படுத்தப்படுகிறது. கார்பனேடேசன் என்றழைக்கப்படும் சர்க்கரை சுத்திகரிப்பிலும் பயன்படுகிறது.

தொழிற்துறை[தொகு]

தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கந்தக டைஆக்சைடு உள்ளிட்ட கழிவு வாயுக்களை, சுண்ணாம்பு நீரினுள் குமிழிகளிடச் செய்வதன் மூலம் சுத்திகரிக்கலாம். இந்த முறையல் நச்சுத் தன்மையுள்ள கந்தக டைஆக்சைடானது வீா்படிவாக பிரித்தெடுக்கப்படுகிறது.

Ca(OH)2(aq) + SO2(g) → CaSO3(s) + H2O(l)

நீர் மேலாண்மை[தொகு]

நீரின் கடினத்தன்மையை நீக்குவதற்கு சுண்ணாம்பினால் மென்மையாக்குதல் என்ற செயல்முறை பயன்படுத்தப்படுகிறது. மாநகராட்சி கழிவு நீர் மேலாண்மை நிலையங்களில் உள்ள அமிலத்தை நடுநிலையாக்கும் காரணியாகவும் பயன்படுகிறது.

கலைகள்[தொகு]

சுதை ஓவியத்தில் சுண்ணாம்பு நீரானது நிறங்களைக் கரைப்பதற்குரிய கரைப்பானாகப் பயன்படுகிறது. வரலாற்று ரீதியாக இது வண்ணப்பூச்சுகளுக்கான நிறமம் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. ´Solubility of Inorganic and Metalorganic Compounds - A Compilation of Solubility Data from the Periodical Literature´, A. Seidell, W. F. Linke, Van Nostrand (Publisher), 1953
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுண்ணாம்பு_நீர்&oldid=2750032" இலிருந்து மீள்விக்கப்பட்டது