சேலம் இராமசாமி முதலியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேலம் இராமசாமி முதலியார்
சேலம் இராமசாமி முதலியார் அவர்களின் புகைப்படம்
பிறப்பு6 செப்டம்பர் 1852
சேலம்,
பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இறப்பு2 மார்ச்சு 1892(1892-03-02) (அகவை 39)
சென்னை,
பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
கல்விமதராஸ் மேல்நிலைப் பள்ளி,
பச்சையப்பன் பள்ளி,
மாநிலக் கல்லூரி, சென்னை
பணிவழக்கறிஞர்
அறியப்படுவதுஅரசியல்வாதி

இராமசாமி முதலியார் (6 செப்டம்பர் 1852 – 2 மார்ச் 1892) ஒரு இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி, இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஆவார்.

இளமையும் கல்வியும்[தொகு]

நாமக்கல்லில் வட்டாட்சியராக இருந்த சேலம் கோபாலசாமி முதலியாருக்கு மகனாக, சென்னை மாகாணத்தின் சேலத்தில் பிறந்தவர் ராமசாமி முதலியார். ராமசாமியின் பெரியப்பா வேதாச்சல முதலியார் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் ஒரு முக்கிய துபாசாக இருவந்தார்.

இவர் தமது ஆறாவது வயதில் சென்னையில் நாகலிங்க முதலியார் இல்லத்தில் தங்கி படித்தார். பாடத்துடன் தமிழ் இலக்கியங்களையும் கற்றார். உயர்க் கல்வியைச் சென்னை, மதராஸ் ஹைஸ்கூல் (இப்போது மாநிலக் கல்லூரி) பள்ளியில் பயின்றார். இங்கு பயின்றபோது பவர் ஐயர் என்பவர் அச்சிட்டு வெளியிட்ட, சீவகசிந்தாமணி நாமகள் இலம்பகம் பாடமாக இருந்தது. அப்போது சிந்தாமணியின் சிறப்பையும், சங்கநூல்களில் மேன்மையையும் அறிந்தார். பி.ஏ வரை தேர்ச்சிப் பெற்ற இவர் சட்டமும் பயின்றுள்ளார்.

தொழில்[தொகு]

1876 ஆம் ஆண்டு திருச்சி மாவட்ட முன்சீபாக பணிபுரிந்துள்ளார். 1882 இல் அப்பணியை விட்டு,சென்னையில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். பின் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ தமிழ்ப் பரிட்சைச் சோதகராக நியமிக்கப்பட்டார். 1885 இல் இங்கிலாந்தில் நடந்த தேர்தலில், இந்தியத் தேர்தலைப் பற்றி பேச சென்றார்.

தமிழ்ப் பணிகள்[தொகு]

இவர் 1880 ஆம் ஆண்டு கும்பகோணத்திற்குப் பணி மாற்றப்பட்டார். அப்போது உ.வே.சா விடம் நெருங்கிப் பழகினார். அவருக்குச் சங்க நூல்களைப் பற்றியும், காப்பியங்கள் பற்றியும் கூறினார். உ.வே.சா முதன்முதலாக இவரிடம் இருந்து சங்க நூல்களைப் பற்றி அறிந்துகொண்டார். உ.வே.சாவை சங்க நூல்களை அச்சிடும்படி தூண்டியவர் இராமசாமி ஆவார்.[1]

இந்திய விடுதலை இயக்க செயங்பாடுகள்[தொகு]

இராமசாமி 1882 முதல் அரசியல் செயல்பாடுகளில் கலந்துகொண்டார். சேலம் கலவர வழக்கில் இவரது தந்தையை பொய்யாக சிக்க வைக்க முயற்சி நடந்தது. 1885 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது, ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ஆட்சியாளர்களிடம் இந்தியர்களின் குறைகளை முன்வைக்க மூன்று பேர் கொண்ட தூதுக்குழுவின் ஒருவராக இராமசாவாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பேராளர்கள் இலண்டன், ஸ்வான்சீ, நியூகேஸில் அபான் டைன், அபெர்டீன், பர்மிங்காம், எடின்பர்க், அபெர்டீன் ஆகிய இடங்களுக்குச் சென்றனர். தாராளவாதத் தலைவர் வில்லியம் எவார்ட் கிளாட்ஸ்டோனின் உரையைக் கேட்பதற்காக அபெர்டீனுக்குச் செல்லும் வழியில் எடின்பரோவில் இராமசாமி தங்கினார். அதே நேரத்தில் ஜான் பிரைட் பர்மிங்காமில் ஆற்றிய உரையை தான் வாழ்க்கையில் கேட்டதிலேயே சிறந்ததாகக் கருதினார். நாட்டின் நிர்வாகத்தில் இந்தியர்களுக்கு அதிக இடத்தை வழங்குவதற்காக 1886 இல் ஒரு பொது சேவை ஆணையம் நியமிக்கப்பட்டது என்பது இராமசாமியின் தூதுக்குழுவின் ஒரு வெற்றியாக இருந்தது. இராமசாமி ஆணையத்தின் அதிகாரப்பூர்வமற்ற உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டார். இருப்பினும், ஆணையத்தின் இந்திய உறுப்பினர்கள் தங்களுக்குள் சண்டையிட்டதால் பெரியதாக ஒன்றும் சாதிக்க முடியவில்லை.

இந்திய தேசிய காங்கிரசு[தொகு]

இராமசாமி இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். மேலும் 1887 மெட்ராஸ் காங்கிரஸ் மற்றும் 1888 அலகாபாத் காங்கிரஸ் மாநாடுகளில் கலந்துகொண்டார். இராமசுவாமி முதலியார் 02- மார்ச்-1892 இல் தமது 40 ஆவது வயதில் இறந்தார்.[2]

உசாத்துணை[தொகு]

  1. டாக்டர். உ. வே. சா (2000). சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும். டாக்டர் உ.வே.சா நூல் நிலையம். 
  2. மயிலை சீனி. வேங்கடசாமி (1962). பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம். சென்னை. பக். 84 இம் மூலத்தில் இருந்து 2023-05-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230524105948/https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZMdl0Yy#book1/. பார்த்த நாள்: 2023-05-24.