யாகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாகன்சிலை

யாகன் (Yagan; அண். 1795 – 11 சூலை 1833) என்பவர் நூங்கர் இன ஆத்திரேலியப் பழங்குடிப் போர் வீரர் ஆவார். ஆர்க்கிபால்ட் பட்லர் என்ற விவசாயியின் ஊழியரான எரின் என்ட்விசில் எனபவரைக் கொன்ற குற்றத்திற்காக, உள்ளூர் அதிகாரிகளால் யாகன் தேடப்பட்டார். பட்லரின் மற்றொரு பணியாளரான தாமஸ் சிமெட்லி, உருளைக்கிழங்கு மற்றும் கோழிகளைத் திருடிக்கொண்டிருந்த நூங்கர் மக்கள் குழுவைச் சுட்டு, அவர்களில் ஒருவரைக் கொன்றதற்கான பழிவாங்கும் செயலாக என்ட்விசிலை யாகன் கொன்றார்.[1][2] யாகனை உயிருடனோ அல்லது இறந்த நிலையிலோ பிடித்துத் தருபவருக்கு அன்றைய ஆத்திரேலிய அரசு பணப் பரிசை அறிவித்தது. வில்லியம் கீட்ஸ் என்ற இளம் குடியேறி யாகனைச் சுட்டுக் கொன்றார். நூங்கர் இன மக்களால் யாகன் ஒரு பழம்பெரும் நபராக கருதப்படுகிறார்.[3][4]

யாகன் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, அவரது தலையை அகற்றிய குடியேறிகள் அரசிடம் பரிசைப் பெற்றனர். பின்னர், அவரது உடலை இலண்டனுக்கு அனுப்பி, அங்கு அது "மானுடவியல் ஆர்வமாகக்" காட்சிப்படுத்தப்பட்டு இறுதியில் லிவர்பூல் நகரில் உள்ள ஓர் அருங்காட்சியகத்திற்கு வழங்கப்பட்டது. ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக அவரது தலை சேமித்து வைக்கப்பட்டு, இறுதியில் 1964 இல் லிவர்பூலில் உள்ள ஒரு குறிக்கப்படாத கல்லறையில் மற்ற எச்சங்களுடன் புதைக்கப்பட்டது.[5] பல ஆண்டுகளாக, சமயக் காரணங்களுக்காகவும், யாகனின் பாரம்பரியப் புகழின் காரணமாகவும், நூங்கர் மக்கள் யாகனின் தலையைத் திருப்பி அனுப்பும்படி கேட்டனர். புதைக்கப்பட்ட இடம் 1993 இல் அடையாளம் காணப்பட்டது; அதிகாரிகள் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தலையை ஆத்திரேலியாவுக்கு திருப்பி அனுப்பினர். நூங்கர் சமூகத்தினருக்குப் பொருத்தமான இறுதி இளைப்பாறும் இடம் பற்றிய விவாதத்திற்குப் பிறகு, யாகனின் தலை சூலை 2010 இல், அவர் இறந்து 177 ஆண்டுகளுக்குப் பிறகு, மேற்கு ஆத்திரேலியாவில் உள்ள சுவான் பள்ளத்தாக்கில் ஒரு பாரம்பரிய விழா மூலம் அடக்கம் செய்யப்பட்டது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. N. Green, Broken Spears: Aborigines and Europeans in the southwest of Australia, Perth p. 79. Also Hallam and Tilbrook, p. 333
  2. "Depositions: Taken Before the Lieutenant Governor and Executive Council at Perth". The Perth Gazette. 25 May 1833. 
  3. Ken Colbung (1996). Yagan: The Swan River "Settlement". Australia Council for the Arts. 
  4. "Yagan". South West Aboriginal Land & Sea Council. Archived from the original on 19 April 2013.
  5. Aboriginal warrior Yagan is finally laid to rest after 170 years, Liverpool Echo, 12 July 2010
  6. Warrior reburied 170 years after death, Australian Geographic, 12 July 2010, archived from the original on 23 June 2013
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாகன்&oldid=3639911" இலிருந்து மீள்விக்கப்பட்டது