வழுவமைதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு மனிதன் தன் கருத்தை வெளிப்படுத்த முயற்சிக்கும்போது இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும். அவ்வாறின்றி இலக்கணமுறையுடன் பேசுவதும் எழுதுவதும் வழாநிலை எனப்படும். இலக்கண முறையின்றிப் பேசினாலும் எழுதினாலும் கூட சில இடங்களில் இலக்கணமுடையதைப்போல வழாநிலையாக ஏற்றுக்கொள்ளும் முறைக்கு வழுவமைதி என்று பெயர்.

வழுவமைதி வகைகள்[தொகு]

திணை வழுவமைதி, பால் வழுவமைதி, இடவழுவமைதி, காலவழுவமைதி, , மரபுவழுவமைதி என வழுவமைதி ஐந்து வகைப்படும்.

1. திணைவழுவமைதி[தொகு]

உயர்திணை எழுவாய் அஃறிணைப் பயனிலையையும், அஃறிணை எழுவாய் உயர்திணைப் பயனிலையையும் கொண்டு முடியும் சில இடங்கள் வழக்காக அமையும் போது அது பெரியா மொலை

என்று கொள்ளப்படுகிறது.

உயர்திணை தொடர்ந்த பொருண்முத லாறும் அதனொடு சார்த்தி னத்திணை முடிபின.[1]

சான்று[தொகு]

1. பசுவை என் அம்மை வந்தாள் என்று கூறுவது திணைவழுவமைதி.

உயர்திணைப் பெயரும் அஃறிணைப் பெயரும் சேர்ந்து எழுவாயாக வரும் பொழுது, முடிக்கும் சொல்லை சிறப்பு, மிகுதி, இழிவு என்னும் காரணங்களால் ஏதேனும் ஒரு திணையின் பயனிலையைக் கொண்டு முடிப்பதும்  திணை வழுவமைதி ஆகின்றன.

திணைபால் பொருள்பல விரவின சிறப்பினும் மிகவினு மிழிபினு மொருமுடி பினவே..[2] 1. நம்பியும் காளையும் சென்றனர். (இங்கு நம்பி உயர்திணை, காளை அஃறிணை இரு திணைகளும் விரவி வரும் போது உயர்வு கருதி சென்றனர் என்னும் உயர்திணைச் சொல் பயனிலைவந்தது. 2.யானை, குதிரை, தேர், காலாள் படை வந்தன - மிகுதி கருதி அஃறிணைப் பயனிலை வந்தது. 3. முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா - இழிவு கருதி அஃறிணைப் பயனிலை வந்தது.

2. பால்வழுவமைதி[தொகு]

மகிழ்ச்சி, உயர்வு, சிறப்பு, கோபம், இழிவு ஆகிய காரணங்களால் எழுவாயும் பயனிலையும் பால் மயங்கி வந்தாலும் பால் வழுவமைதியாக ஏற்றுக்கொள்ளப் படுகின்றன.

சான்று[தொகு]

1. மகிழ்ச்சியின் காரணமாக தன்மகளை “வாடா, செல்லம்” என்று ஆண்பால் விளி கொண்டு அழைப்பது. 2. மாமா வந்தார். உயர்வு கருதி பலர்பால் பயனிலை வந்தது. 3. இருநோக்கு இவளுண்கண் உள்ளது (குறள் : 1091) என்னும் குறளில் ‘இரு நோக்கு’ என்னும் பலவின்பால் எழுவாய், ‘உள்ளது’ என்னும் ஒன்றன்பால் வினைமுற்றைக் கொண்டு முடிந்தது. இவ்வாறு ஒருமையும் பன்மையும் மயங்கி வந்தாலும் பால்வழுவமைதியாகும். ஒருமையின் பன்மையும் பன்மையின் ஒருமையும் ஓரிடம் பிறவிடம் தழுவலும் உளவே [3]

3. இட வழுவமைதி[தொகு]

தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடங்களில் வெவ்வேறு இடங்கள் கலந்து வரும் போது ஏதாவது ஓர் இடத்திற்குரிய பயனிலையைக் கொண்டு முடிதல் இடவழுவமைதி ஆகும்.

சான்று[தொகு]

1. நானும் நீயும் செல்கிறோம். (தன்மை ஒருமை, முன்னிலை ஒருமை ஆகிய இடங்கள் தன்மைப் பன்மை இடத்தைக் கொண்டு முடிந்தது. 2. அவனும் நீயும் செல்கிறீர்கள்.(படர்க்கை ஒருமை, முன்னிலை ஒருமை இடங்கள் முன்னிலைப் பன்மை இடத்தைக் கொண்டு முடிந்தது. 3. நானும் அவனும் செல்கிறோம்.( தன்மை ஒருமை,படர்க்கை ஒருமை ஆகிய இடங்கள் தன்மைப் பன்மை இடத்தைக் கொண்டு முடிந்தது.

4. கால வழுவமைதி[தொகு]

முக்காலங்களையும் ஒன்றை வேறொன்றாகக் கூறுவது வழுவமைதி ஆகும். விரைவு, மிகுதி, தெளிவு என்னும் மூன்று காரணங்களுக்காகவும் இக்காரணங்கள் இல்லாமலும் காலங்கள் மயங்கி வந்தாலும் வழுவமைதியாக ஏற்றுக்கொள்ளப்படும்.

சான்று[தொகு]

1. நண்பா விரைந்துவா என்று அழைக்குமிடத்து, வீட்டினுள் இருப்பவன் “இதோ வந்துவிட்டேன்” என்று கூறுவது.(எதிர்காலத்தில் கூறவேண்டியதை விரைவு கருதி இறந்தகாலத்தில் கூறுகிறான். 2. நாளை சென்னை செல்கிறேன். (உறுதியாகச் செல்லவிருப்பதால் தெளிவு கருதி எதிர்காலப்பெயர் நிகழ்கால த்தைக் கொண்டு முடிந்தது) 3. சிறுவயதில் இங்குதான் விளையாடுவோம். (இறந்தகாலம் எதிர்காலப்பயனிலையைக் கொண்டு முடிந்தது) 4. வெள்ளி தோறும் கோவிலுக்குப் போவோம். (முக்காலமும் நடைபெறும் தொழில் இறந்தகாலத்தைக் கொண்டு முடிந்தது) முக்காலத்திலும் தொடர்ந்து தன் தொழிலைச் செய்யும் பொருள்களை நிகழ்காலத்தில் குறிப்பிடுவதும் கால வழுவமைதி ஆகும். (எ.டு) கதிரவன் கிழக்கில் தோன்றுகிறது.

5. மரபு வழுவமைதி[தொகு]

முன்னோர் ஒரு பொருளை எச்சொல்லால் வழங்கினரோ அவ்வாறே வழங்குவது மரபு ஆகும். மரபுத்தொடர்கள் மயங்கி வரினும் மரபுவழுவமைதியாக் கொள்ளப்படும்.

சான்று[தொகு]

1. கத்தும் குயிலோசை எந்தன் காதினில் வந்து விழவேண்டும். குயில் கூவும் என்பதே மரபு. பாரதி கத்தும் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். பெரும்புலவர் பாரதி என்பதால் மரபுவழுவமைதியாகக் கொள்ளப்பட்டது.

2.இயற்கைப் பொருளை இத்தன்மை உடையது எனக் கூறுவது மரபு வழுவமைதியாகும். (எ.டு) மழை பொழியும். மழை என்றாலே அது நீர் பொழியும் தன்மை உடையது என்பது விளங்கும். தன்மைகளை வெளிப்படக் கூறுதல் ‘மிகைபடக் கூறுதல்’ ஆகும். அவ்வாறு கூறுதல் வழுவாயினும் அறிஞர் அவ்வாறு கூறிவருவதால் வழுவமைதி ஆயிற்று. காரண முதலா ஆக்கம் பெற்றும் காரணம் இன்றி ஆக்கம் பெற்றும் ஆக்கம் இன்றிக் காரணம் அடுத்தும் இருமையும் இன்றியும் இயலும் செயும்பொருள் [4]

வெளியிணைப்புகள்[தொகு]

  1. நன்னூல் -சூத்திரம் 377
  2. நன்னூல் -சூத்திரம் 378
  3. நன்னூல் -சூத்திரம் 380
  4. நன்னூல் -சூத்திரம் 405
"https://ta.wikipedia.org/w/index.php?title=வழுவமைதி&oldid=3734330" இலிருந்து மீள்விக்கப்பட்டது