இருமுனை அயனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்பாக்சிலிக் அமிலப் பகுதி மற்றும் கார அமீன் பகுதி இரண்டையும் கொண்டுள்ள ஓர் அமினோ அமிலம். வலது புறத்திலுள்ள மாற்றியம் ஒரு இருமுனை அயனியாகும்
சல்பமிக் அமில மாற்றியன்கள், வலதுபுறத்தில் இருமுனை அயனியுடன்.

இருமுனை அயனி (zwitterions) என்பது உயிரியலில் இருபால் உயிரி என்பது போல வேதியியலில் இருமுனைப் பண்புகளையும் கொண்ட அயனிகள் இருமுனை அயனிகள் என்றழைக்கப்படுகின்றன. நேர்மின் சுமை, எதிர்மின் சுமை இரண்டையும் ஒருங்கே பெற்று நடுநிலை மின்சுமையுடன் இவ்வகை மூலக்கூறுகள் காணப்படுகின்றன. சில அயனிகள் ஒன்றுக்கு மேற்பட்ட பல மின்சுமைகளையும் பெற்று நடுநிலையுடன் காணப்படுவதும் உண்டு. மூலக்கூறுக்குள் வெவ்வேறு அமைவிடங்களில் இருமுனைகளைப் பெற்றுள்ள மூலக்கூறுகளிலிருந்து இருமுனை அயனிகள் முற்றிலும் மாறுபட்டுள்ளன. சில சந்தர்ப்பங்களில் இருமுனை அயனிகள் உள் உப்புகள் என்று அழைக்கப்படுகின்றன. [1]. எளிய ஈரியல்பு சேர்மங்களைப் போல நேரயனியாக மட்டும் அல்லது எதிரயனியாக மட்டும் உருவாகாமல் இருமுனை அயனிகள் ஒரேநேரத்தில் ஈரியல்பு அயனிகளாகவும் உருவாகின்றன. [2].

உதாரணங்கள்[தொகு]

அமினோ அமிலங்கள் ஈரியல்பு அயனிகளுக்கு நன்கு அறியப்பட்ட உதாரணமாகும். இச்சேர்மங்களில் அமோனியமும் கார்பாக்சிலேட்டு குழுவும் ஒருங்கே இடம்பெற்றுள்ளன. மூலக்கூறிடை அமிலக் கார வினையின் வழியாக இவை உருவாவதாக பார்க்கப்படுகின்றன. கார்பாக்சிலிக் அமிலத்தை அமீன் தொகுதி புரோட்டான் நீக்கம் செய்கிறது.

NH2RCHCO2H ⇌ NH+3RCHCO−

திண்மநிலையில் கிளைசீனின் ஈரியல்பு அயனிக்கட்டமைப்பு நியூட்ரான் விளிம்பு வளைவு அளவீடுகளில் உறுதிப்படுத்தப்படுகிறது [3]. குறைந்தபட்சம் சில அமினோ அமிலங்களிலாவது வாயுநிலையில் இந்த ஈரியல்பு அயனிக் கட்டமைப்பு காணப்படுகிறது [4].

அமினோ அமிலங்களுடன் கூடுதலாக, அமிலம் மற்றும் கார மையங்களைக் கொண்டிருக்கும் பல சேர்மங்கள் உள்ளன. இச்சேர்மங்களில் ஈரியல்பு அயனிகள் இடமாற்றியத்தை வெளிப்படுத்துகின்றன. பைசின் மற்றும் டிரைசின் போன்றவை உதாரணங்களாகும். இவை ஓர் அடிப்படை இரண்டாம்நிலை அல்லது மூன்றாம்நிலை அமீன் பகுதிகளுடன் கார்பாக்சிலிக் அமிலப் பகுதி ஒன்றையும் கொண்டுள்ளன. திண்ம சல்பமிக் அமிலம் இருமுனை அயனியாக இருக்கிறது என்பதை நியூட்ரான் விளிம்பு வளைய சோதனை வெளிப்படுத்துகிறது [5]. கார்பாக்சிலேட் மற்றும் அமோனியம் மையங்களைக் கொண்ட பல ஆல்க்கலாய்டுகள் இருமுனை அயனிகளாக காணப்படுகின்றன.

பல இருமுனை அயனிகள் நான்பகுதி அமோனியம் நேரயனிகளைக் கொண்டுள்ளன. N–H பிணைப்புகள் இல்லாததால் அமோனியம் மையம் இடமாற்றியத்தில் பங்கேற்க முடிவதில்லை. இத்தகைய நான்பகுதி அமோனியம் மையங்களைக் கொண்ட ஈரியல்பு அயனிகள் உயிரியலில் பொதுவாகவே காணப்படுகின்றன. மீன்களில் காணப்படும் பெட்டைன்கள் மின்பகுளியாகச் செயல்படுகின்றன. பாசுபோலிப்பிடுகளாக உருவாகும் மென்படலமும் ஈரியல்பு அயனிகளாகவே உள்ளன. இதன்விளைவாக எதிரயனியாக பாசுபேட்டும் நேரயனியாக அமோனியம் மையமும் அமைகின்றன [6].

மேற்கோள்கள்[தொகு]

  1. IUPAC Gold Book zwitterionic compounds/zwitterions
  2. "Definition of amphoteric" (2014), Chemicool. Retrieved 2016-06-14.
  3. Jönsson, P.-G.; Kvick, Å. (1972). "Precision neutron diffraction structure determination of protein and nucleic acid components. III. The crystal and molecular structure of the amino acid α-glycine". Acta Crystallogr. B 28 (6): 1827–1833. doi:10.1107/S0567740872005096. 
  4. Price, William D.; Jockusch, Rebecca A.; Williams, Evan R. (1997). "Is Arginine a Zwitterion in the Gas Phase?". J. Am. Chem. Soc. 119 (49): 11988–11989. doi:10.1021/ja9711627. பப்மெட்:16479267.  text
  5. R. L. Sass (April 1960). "A neutron diffraction study on the crystal structure of sulfamic acid". Acta Crystallogr. 13 (4): 320–324. doi:10.1107/S0365110X60000789. 
  6. Nelson, D. L.; Cox, M. M. "Lehninger, Principles of Biochemistry" 3rd Ed. Worth Publishing: New York, 2000. ISBN 1-57259-153-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருமுனை_அயனி&oldid=3093426" இலிருந்து மீள்விக்கப்பட்டது