அப்ரோடிட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்ரோடிட்
Αφροδίτη
(Afrodíti)
ஏதென்சு தேசிய தொல்பொருள் அருங்காட்சியகத்தில் உள்ள அப்ரோடைட்டின் சிலை
இடம்ஒலிம்பசு மலைச்சிகரம்
துணைஎப்பெசுடசு, ஏரெசு, பொசைடன், எர்மெசு, டயோனிசசு, அடோனிசு
பெற்றோர்கள்யுரேனசு[1] அல்லது சியுசு மற்றும் டையோன் [2]
சகோதரன்/சகோதரிசியுசின் அனைத்துப் பிள்ளைகள் அல்லது யுரேனசின் அனைத்துப் பிள்ளைகள்
குழந்தைகள்எரோசு,[3] போபோசு, டெய்மோசு, ஆர்மோனியா, அன்டெரோசு, இமெரோசு, எர்மாப்ரோடிடசு, ரோடோசு, யூனோமியா, டைச்சி

அப்ரோடிட் (Aphrodite, /æfrəˈdti/ (கேட்க) af-rə-DY-tee; கிரேக்கம்: Αφροδίτη) என்பவர் கிரேக்கப் பழங்கதைகளில் வரும் ஒரு பெண் கடவுள் ஆவார். இவர் காதல், அழகு, காமம் என்பவற்றுக்கான கடவுள் ஆவார். இவர் யுரேனசின் மகளாகக் கருதப்படுகிறார். சில கதைகளில் இவர் சியுசு மற்றும் டையோன் ஆகியோரின் மகள்[4] என்றும் கூறப்படுகிறது.

பிறப்பு[தொகு]

அப்ரோடைட்டு பிறந்ததாகக் கூறப்படும் பாறை.

அப்ரோடிட் சைப்ரசில் உள்ள பாஃபோசுவில் பிறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அங்கு இவர் பிறந்ததாகக் கூறப்படும் பாறை உள்ளது. இதன் காரணமாகவே சில கவிதைகளில் அப்ரோடிட் சைப்ரியன் என்று குறிப்பிடப்படுகிறார். ஓமர் தான் எழுதிய ஒடிசியில் அப்ரோடிட் சைத்தரியாவில் பிறந்தவர் என்னும் பொருளில் சைத்திரியன் என்று குறிப்பிட்டுள்ளார்.[5] யுரேனசு மற்றும் கையாவின் இணையால் பல வலிமையான அரக்கர்கள் பிறந்தனர். அவர்களை யுரேனசு பாதாள உலகமான டார்டரசில் அடைத்து வைத்தார். அவர்கள் பாதாளத்தில் இருந்து கொண்டு கையாவிற்கு துன்பம் தந்தனர். இதைத் தடுக்குமாறு கையா தன் மகன் குரோனசிடம் கேட்டுக்கொண்டார். இதனால் குரோனசு தன் கதிர் அறுவாள் மூலம் யுரேனசின் பிறப்புறுப்பை வெட்டி அதை கடலில் வீசியெறிந்தார். அப்போது அதில் இருந்து வெள்ளை நுரை பொங்கி வழிந்தது. அதன் மூலம் அப்ரோடிட் பிறந்தார். இதனாலேயே நுரையில் இருந்து வந்தவர் என்று பொருள் தரும் கிரேக்கச் சொல்லான அப்ரோடிட் என்ற பெயர் வந்தது.

கணவர் மற்றும் குழந்தைகள்[தொகு]

அப்ரோடிட் போர்க்கடவுள் ஏரெசு மீது காதல் கொண்டார். ஆனால் அப்ரோடிட் மிகவும் அழகாக இருந்ததால் அவரை அடைய கடவுள்களுக்குள் போர் நிகழுமோ என்று பயந்த சியுசு அவரை அழகற்ற எப்பெசுடசுவிற்குக் கட்டாய திருமணம் செய்து வைத்தார். ஆனால் அப்ரோடிட் திருமணமான பிறகும் பல ஆண் கடவுள்களுடன் உறவாடினார். மேலும் அவர் இறுதிவரை எப்பெசுடசுவுடன் உறவாடவில்லை. இதனால் விரக்தியடைந்த எப்பெசுடசு அவரை விட்டு பிரிந்தார்.

அப்ரோடிட், ஏரெசுடன் உறவாடியதன் மூலம் ஏரோசு, அன்ட்டேரோசு, போபோசு, டெய்மோசு, ஆர்மோனியா, அட்ரெசுடியா ஆகியோரும் அடோனிசுடன் உறவாடியதன் மூலம் பெரோ மற்றும் கொல்கோசு ஆகியோரும் எர்மெசுடன் உறவாடியதன் மூலம் டைச்சி மற்றும் எர்மாப்ரோடிட்டசு ஆகியோரும் பிறந்தனர்.

அப்ரோடிட் மற்றும் அடோனிசு[தொகு]

அப்ரோடிட்யின் காதலர்களுள் முக்கியமானவர் அடோனிசு. இவர் மைரா என்பவரின் மகன் ஆவார். மைரா தன் தந்தையான அரசன் சினிரசின் மீது பொருந்தாக் காமம் கொண்டு அவருடன் உறவாடினார். இதனால் அப்ரோடிட் மைராவை வெள்ளைப்போள மரமாக மாறும்படி சபித்தார். அவர் மரமாக இருந்த போதும் அடோனிசு என்ற மகனைப் பெற்றெடுத்தார். ஆனால் மரமாக இருந்த மைராவால் நகர முடியவில்லை. இதனால் அடோனிசு மேல் இரக்கம் கொண்ட அப்ரோடிட் அவனைப் பாதாள அரசி பெர்சிஃபோனிடம் கொடுத்து வளர்க்கக் கூறினார். அடோனிசு ஆடவனாக வளர்ந்த பிறகு அவன் மிகவும் அழகாக இருந்ததால் அவர்மீது பெர்சிஃபோன் காமம் கொண்டார். பிறகு ஒருநாள் அப்ரோடிட், பெர்சிஃபோனிடம் அடோனிசைத் தன்னிடம் கொடுத்துவிடுமாறு கூறுகிறார். ஆனால் அவரோ மறுத்துவிடுகிறார். இதனால் இருவருக்கும் சண்டை நடக்கிறது. இதற்குத் தீர்வாக சியசு அடோனிசிடம் வருடத்தில் நான்கு மாதங்கள் அப்ரோடிட்யுடனும் நான்கு மாதங்கள் பெர்சிஃபோனிடமும் மீதி நான்கு மாதங்கள் அவன் விரும்பியவருடன் வாழுமாறு கூறினார். அப்ரோடிட் மீது காதல் கொண்ட அடோனிசு அந்த மீதி நான்கு மாதங்களும் அவருடனே வாழ்ந்தார்.

வேட்டையாடுவதை விரும்பும் அடோனிசு ஒருநாள் ஒரு காட்டுப்பன்றியால் தாக்கப்பட்டு இறந்தார். சில கதைகளில், அப்ரோடிட் பல காலங்களாக அடோனிசுடன் வாழ்வதைக் கண்டு பொறாமை அடைந்த ஏரெசு அந்த காட்டுப்பன்றியை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு அங்கு வந்த அப்ரோடிட் அடோனிசின் உடலைப் பார்த்து கதறி அழுதார். அடோனிசின் இரத்தத் துளிகளுடன் அப்ரோடிட்யின் கண்ணீர்த் துளிகள் கலந்த போது அனிமோன் எனப்படும் ஒருவகை மலர்ச்செடி வளர்ந்தது. அடோனிசின் இறந்த நாளை அடோனியா என்ற துக்க நிகழ்வாக அனுசரிக்குமாறு கிரேக்க மக்களுக்கு அப்ரோடிட் கட்டளை இட்டதாகக் கூறப்படுகிறது. அடோனிசு இறந்த பிறகு பாதாள உலகம் சென்றார். இதனால் பெர்சிஃபோன் மகிழ்ந்தார். இதன் காரணமாக மீண்டும் அப்ரோடிட் மற்றும் பெர்சிஃபோன் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதற்குத் தீர்வாக சியுசு அடோனிசை ஆறு மாதங்கள் பெர்சிஃபோனுடனும் ஆறு மாதங்கள் அப்ரோடிட்டுடனும் வாழுமாறு கூறினார்.

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Aphrodite
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Hesiod, Theogony, 188
  2. Homer, Iliad 5.370.
  3. Eros is usually mentioned as the son of Aphrodite but in other versions he is born out of Chaos
  4. இலியட் (Book V)
  5. Homer, Odyssey viii. 288; Herodotus i. 105; Pausanias iii. 23. § 1; Anacreon v. 9; Horace, Carmina i. 4. 5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்ரோடிட்&oldid=2492810" இலிருந்து மீள்விக்கப்பட்டது