அழகக்கோனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அழகேசுவரன் அமைத்த திறல்திகழ்பதி - ஜெயவர்த்தனபுரம்

அழகக்கோனார் அல்லது அழகக்கோன் (சிங்களம்: அளகக்கோனார, அளகேஸ்வர[1]) மத்தியகால இலங்கை அரசியலில் முக்கியமான வகிபாகத்தைக் கொண்டிருந்த நிலக்கிழார் குடும்பமாகும்.இவர்கள் சேரநாட்டை அல்லது தமிழகத்தின் காஞ்சியை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது.[2] பொ.பி 13ஆம் நூற்றாண்டளவில் இலங்கை வந்த அழகக்கோன் குடும்பத்தினர் இங்கேயே தங்கியதுடன் முக்கியமான அரசுசூழ் மதியாளர்களாகவும் விளங்கினர்.[3] இப்பரம்பரையில் வந்த ஒரு அழகக்கோனே, இலங்கையின் இன்றைய தலைநகரான ஜெயவர்த்தனபுரக்கோட்டையை அமைத்தான். யாழ்ப்பாண அரசிடமிருந்து வரி வசூலிக்க வரும் அதிகாரிகளை முறியடிக்கவே, இக்கோட்டை அவனால் அமைக்கப்பட்டது. இவ்வம்சத்தின் அரசியல் ஆதிக்கமானது, 1411இல், ஹான் சீன கடற்படையதிகாரி செங் ஹேயால், அப்போதிருந்த அழகக்கோன் மன்னன் ஆறாம் விஜயபாகு பணயக்கைதியாகப் பிடித்துச்செல்லப்பட்டதோடு முடிவுக்கு வந்தது[4][5]

கொடிவழி வரலாறு[தொகு]

நிசங்க அழகக்கோன் எனப்பட்ட முதலாவது அழகக்கோன், தென்னிந்தியா மீதான முகலாயப் படையெடுப்பை அடுத்து, வஞ்சீபுரம் அல்லது காஞ்சிபுரம் என்ற இடத்திலிருந்து இலங்கை வந்து குடியேறியதாக பழைய வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன.'[6] [2][7] வணிக பலத்தைக் கொண்டிருந்த காரணத்தால், விரைவிலேயே தமது அரசியல் ஆதிக்கத்தை நிரூபித்த அழகக்கோன், உள்ளூர் கம்பளை இராசதானியுடன் மிக இறுக்கமான தொடர்புகளைப் பேணலாயினான்.[6] அதற்காக அவன் பௌத்தத்தைத் தழுவிக்கொண்டதாகவும் சொல்லப்படுகின்றது.[6]

அரசியல் செல்வாக்கு[தொகு]

கம்பளை அரசின் மீதான யாழ்ப்பாண அரசின் வெற்றியைப் பாடும் கோட்டகமைக் கல்வெட்டு

யாழ்ப்பாண அரசின் அபரிமிதமான வளர்ச்சியால், 1350களில் தென்னிலங்கைச் சிற்றரசுகள் அதற்கு திறை செலுத்திக்கொண்டிருந்தன. அப்போது நிசங்கனின் மூன்றாம் தலைமுறையில் வந்த அழகேஸ்வரன், கம்பளை மன்னன் மூன்றாம் விக்கிரமபாகுவுக்கு அமைச்சனாக விளங்கியதுடன், ஆரியச் சக்கரவர்த்திகள் இலகுவில் நெருங்கமுடியாத பலம்வாய்ந்த கோட்டையொன்றை களனி கங்கைக்குத் தெற்கே இருந்த சதுப்பு நிலத்தில் அமைத்தான்.[8] "வெற்றிதிகழ்பதி" (ஜெயவர்த்தனபுரம்) என அதற்குப் பெயர் சூட்டிய அழகேஸ்வரன், யாழ். அரசுக்கு திறையளிக்க மறுத்ததுடன், 1369இல், அவன் மீது படையெடுத்த ஆரியச்சக்கரவர்த்தியின் படையை, சிலாபம், நீர்கொழும்பு ஆகிய இடங்களில் முறியடித்து வென்றான். ஆரியச்சக்கரவர்த்தியின் படை, அடுத்து ஆண்ட ஐந்தாம் புவனேகபாகுவின் ஆட்சியில் மீண்டும் கம்பளை மீது படையெடுத்ததுடன், மாத்தளைப்பகுதியில் அது தோற்கடிக்கப்பட்டது. அதேநேரத்தில் தெமட்டகொடை, பாணந்துறை ஆகியவற்றில் கடல்வழித் தாக்குதல் நடாத்திய ஆரியச்சக்கரவர்த்தியின் படை, அழகேஸ்வரனால் தோற்கடிக்கப்பட்டது.[9] எனினும், யாழ்ப்பாண அரசர் கோட்டகமையில் பொறித்த கல்வெட்டு அவர்களது வெற்றியைப் பறைசாற்றுவதால், இப்போரின் முடிவு குழப்பகரமாகவே இன்றும் இருக்கின்றது.[10][11] எவ்வாறெனினும், அழகேஸ்வரனின் மதிநுட்பம் கூடியவிரைவிலேயே அவன் அரசாட்சிக்கு வருமளவு அவனுக்கு வலிமையைத் தந்தது.[5][12]

மறைவு[தொகு]

விஜயபாகு அழகக்கோனை சிறைப்பிடித்த சீனப்பெருவீரன் செங் ஹே.

அழகேஸ்வரன் இறந்தபின்னர், அவனது குடும்பத்தார் மத்தியில் ஆட்சி தொடர்பான போட்டி நிலவியது. ஐந்தாம் புவனேகபாகுவின் ஒன்றுவிட்ட சகோதரன் குமரன் அழகேஸ்வரன் 1386 -87 இடையே கம்பளையை ஆண்டதுடன், அவனை அடுத்து 1387 முதல் 1391 வரை, வீர அழகேஸ்வரன் ஆட்சியில் அமர்ந்திருந்தான்.[13] 1392இலிருந்து வரை இறைகமையிலிருந்து ஆண்ட இரண்டாம் வீரபாகு அரசியல் செல்வாக்கு பெற்றுவந்தான். வணிகர்களின் உதவியுடன் அவனை ஆட்சியிலிருந்து அகற்றிய வீர அழகேஸ்வரன், 1397இல் ஆட்சிக்கு வந்ததுடன், ஆறாம் விஜயபாகு என்ற பெயரில் தென்னிலங்கையை ஆண்டு வரலானான். இலங்கைக்கு 1411இல் வருகை தந்த சீன கடற்படை அதிகாரி செங் ஹேயை மூர்க்கமாக எதிர்த்தது, அவனது ஆட்சிக்கு உலை வைத்தது. கோட்டைப்பகுதியில் சிங்களப்படைக்கும் சீனப்படைக்கும் இடையில் இடம்பெற்ற சிறுபோரில் பணயக்கைதியாகப் பிடிக்கப்பட்ட விஜயபாகு, சீனாவுக்கு சிறையெடுக்கப்பட்டதுடன், அங்கு மன்னிப்பளித்து விடுவிக்கப்பட்டான். எனினும் இச்சம்பவம் அழகக்கோன் வம்சத்துக்கு பெரும் சரிவை ஏற்படுத்தியதுடன், அவர்களது அரசியல் வல்லமையையும் சிங்கள இலங்கையில் முற்றாக இல்லாதொழித்தது.[2][14]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Paranavitana, History of Ceylon, p.296
  2. 2.0 2.1 2.2 de Silva, A History of Sri Lanka, p.138
  3. Paranavitana, History of Ceylon, p.295
  4. de Silva, A History of Sri Lanka, p.136
  5. 5.0 5.1 de Silva, A History of Sri Lanka, p.137
  6. 6.0 6.1 6.2 de Silva, A History of Sri Lanka, p.86
  7. "Kotte: The capital of the Sinhalese Kings from the early 15th to the late 16th century". Asiff Hussein. Archived from the original on 5 December 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-11-19.
  8. Paranavitana, History of Ceylon, p.299
  9. Paranavitana, History of Ceylon, p.300
  10. "From Devundera to Dedigama". S. Pathiravithana. Archived from the original on 6 November 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-11-19.
  11. Rasanayagm, Ancient Jaffna, p.364
  12. "JAYAWARDHANAPURA: THE CAPITAL OF THE KINGDOM OF SRI LANKA". G. P. V. Somaratne. Archived from the original on 16 October 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-11-19.
  13. Paranavitana, History of Ceylon, p.301
  14. "Sri Lanka: A Country Study". Russell R. Ross and Andrea Matles Savada. பார்க்கப்பட்ட நாள் 2007-02-26.

உசாத்துணைகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அழகக்கோனார்&oldid=3586016" இலிருந்து மீள்விக்கப்பட்டது