பிரிவேனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரிவேனா என்பது, இலங்கையில் புத்த மதகுருமாருக்கான கல்வியை வழங்கும் நிறுவனங்களைக் குறிக்கும். பழைய காலத்தில் சாதாரண மக்கள் இடைநிலைக் கல்வியையும், உயர் கல்வியையும் பெற்றுக்கொள்வதற்கும் பிரிவேனாக்கள் உதவின. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிய பிரிவேனாக் கல்விமுறை இன்றும் இலங்கையில் இருந்து வருகிறது. தற்போது இலங்கையின் கல்வி அமைச்சு பிரிவேனாக்களை நடத்தி வருகிறது. இளம் பிக்குகள் குருநிலைக்கு உயர்த்தப்படுமுன் பிரிவேனாக்களில் பயிற்சி பெறுகின்றனர்.

பெயர்[தொகு]

"பிரிவேனா" என்னும் சிங்களச் சொல் "பரிவேனா" என்னும் பாளிச் சொல்லில் இருந்து பிறந்ததாகத் தெரிகிறது. "பரிவேனா" என்னும் சொல் பாளி மொழியில் பௌத்த குருமாரின் வாழிடங்களைக் குறிக்கும்.

வரலாறு[தொகு]

கி.பி முதலாம் நூற்றாண்டில் மகா விகாரையும், அபயகிரி விகாரையும் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இலங்கையில் பிரிவேனாக்களின் வரலாறு தொடங்குகிறது. இதன் பின்னர் தொடர்ந்துவந்த அரசர்களின் காலங்களிலும் பல பிரிவேனாக்கள் நிறுவப்பட்டன. இந்தியாவில் நாளந்தா போன்ற பௌத்த உயர்கல்வி நிறுவனங்கள் இருந்தன. காலப்போக்கில் பௌத்தமும், பௌத்த மரபுக் கல்வியும் ஏறத்தாழ அழிந்துபோய்விட்டன. ஆனாலும், இலங்கையில் பிரிவேனாக் கல்விமுறை தொடர்ந்து வருகிறது. முற்காலத்தில் துறவிகளுக்கும் சாதாரண மக்களுக்கும் தனித்தனியான பாடத்திட்டங்கள் இருந்தன. சாதாரண மக்களுக்குப் பெரும்பாலும் தொழில்சார்ந்த பாடங்கள் கற்பிக்கப்பட்டன. துறவிகள் மொழிகள், மதம், மெய்யியல், வரலாறு, பொருளியல், புவியியல் ஆகிய பாடங்களைப் படித்தனர்.[1]

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சிக் காலங்களில் கரைநாட்டுப் பகுதிகளில் புத்த மதம் ஒடுக்கப்பட்டதால் அப்பகுதிகளில் பிரிவேனாக் கல்வி பாதிக்கப்பட்டது. ஆனாலும், கண்டி இராச்சியம் போர்த்துகேயர், ஒல்லாந்தர் ஆட்சிகளுக்கு ஆட்படாமல் தப்பியதால் பிரிவேனாக்கள் அரச ஆதரவுடன் அங்கே வளர்ச்சியடையக் கூடியதாக இருந்தது.

தற்காலம்[தொகு]

தற்காலத்தில் இலங்கையில் மூன்று மட்டங்களில் பிரிவேனாக்கள் உள்ளன. தொடக்கநிலைக் ("மூலிக்க") கல்வி ஐந்து ஆண்டுகளை உள்ளடக்குகின்றது. இந்த நிலையில் பாளி, சமசுக்கிருதம், சிங்களம், ஆங்கிலம், திரிபிடகக் கல்வி, கணிதம் ஆகிய ஆறு பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. அடுத்த ("மகா") நிலையில் முன்னர் கற்ற ஆறு பாடங்களுடன் மெய்யியல், மதங்களின் வரலாறு, மொழியியல், ஆயுர்வேதம், சோதிடம் ஆகிய பாடங்களையும் கற்பிக்கின்றனர். அடுத்தது பல்கலைக்கழக மட்டத்திலான பிரிவேனாக் கல்வி. தற்போது இலங்கையில் 794 பிரிவேனாக்களில் 62,000 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்..[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. The Pirivena System of Buddhist Education in Sri Lanka, Global Buddhistdoor 20-01-2017 அன்று பார்க்கப்பட்டது
  2. The Pirivena System of Buddhist Education in Sri Lanka, Global Buddhistdoor 20-01-2017 அன்று பார்க்கப்பட்டது
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிவேனா&oldid=2176211" இலிருந்து மீள்விக்கப்பட்டது