ஆந்திரே பெசெத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித ஆந்திரே பெசெட்
பிறப்பு(1845-08-09)ஆகத்து 9, 1845
மொன்ட்-சான்-கிரெகோர், கியூபெக், கனடா
இறப்புசனவரி 6, 1937(1937-01-06) (அகவை 91)
மொண்ட்ரியால், கனடா
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை
அருளாளர் பட்டம்மே 23, 1982, புனித பேதுருவின் சதுக்கம், வத்திக்கான் நகர், by திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல்
புனிதர் பட்டம்அக்டோபர் 17, 2010, புனித பேதுரு சதுக்கம் by திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்
முக்கிய திருத்தலங்கள்புனித யோசேப்பு பேராலயம்
மொண்ட்ரியால், கியூபெக், கனடா
திருவிழாசனவரி 6 (ஐக்கிய அமெரிக்கா), சனவரி 7 (கனடா)

ஆந்திரே பெசெத் (André Bessette, 9 ஆகத்து 1845 – 6 சனவரி 1937), என்பவர் திருச்சிலுவை சபையின் அருட்சகோதரராவார். பிரெஞ்சு-கனேடிய கத்தோலிக்கரிடையே இவர் மிகவும் புகழ் பெற்றவர். புனித யோசேப்புவின் மீது இவருக்கிருந்த பக்தியும், அவரின் பரிந்துரையால் பல புதுமைகளை இவர் செய்தார் என நம்பப்படுகின்றது.[1]

இவரை வணக்கத்திற்குரியவர் என 1978இலும் அருளாளர் என 1982இலும் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் எறிவித்தார்.[2] 17 அக்டோபர் 2010இல் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் இவருக்கு புனிதர் பட்டமளித்தார்.[2][3]

பிறப்பு[தொகு]

கனடா நாட்டில் மன்ரேல் அருகில் உள்ள குவேபெக் என்னுமிடத்தில் 1845, ஆகஸ்ட் ஒன்பது அன்று பிறந்தவர் ஆல்பிரட் பெசத்தி. 12 பிள்ளைகளுள் எட்டாவதாகப் பிறந்த இவர் தமது 12-வது வயதில் பெற்றோரை இழந்து அனாதையானார். தத்துப்பிள்ளையாகச் சென்ற இவர் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வாழ்ந்த போது சிறுவயதில் கடுமையான வேலைகளைச் செய்து வயிறு வளர்த்தார். தீராத வயிற்று வலியால் துடித்த ஆல்பிரட் எந்த ஒரு வேலையிலும் நிலைத்து நிற்க முடியாமல் பல்வேறு வேலைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். தமது 25வது வயதில் கனடாவிற்கு திரும்பி வந்தார்.

திருச்சிலுவை சபையில் ஏற்ப்பு[தொகு]

குருமடத்தில் சேர ஆவல் கொண்ட ஆல்பிரட் அருள்பணியாளர் ஒருவர் கொடுத்த சிபாரிசு கடிதத்துடன் திருச்சிலுவை சகோதரர்களின் சபைக் கதவைத் தட்டினார். அக்கடிதத்தில் ‘நான் ஒரு புனிதரை அனுப்புகிறேன்’ என்று எழுதப்பட்டிருந்தது. அருள் சகோதரர்களால் இதை நம்ப முடியவில்லை. பயிற்சிகள் ஆரம்பமாயின. அன்றிலிருந்து ஆல்பிரட், தம் பெயரை அந்த்ரே என்று மாற்றிக் கொண்டார்.

திருச்சிலுவை சகோதரர்களின் முக்கியப் பணி ஆசிரியப்பணி. ஆனால் அந்த்ரே கொஞ்சம்கூட வாசிக்கவோ, எழுதவோ தெரியாதவராக இருந்தார். எனவே பயிற்சியளித்த தந்தையர்கள் ஐயம் கொண்டனர். அந்த்ரே பேராயரை நாடினார். புனித வளனார் மீது மிகுந்த பக்தியும், பற்றும் கொண்டிருந்த அந்த்ரே பேராயரின் விருப்பபடி முதல் வார்த்தைப்பாடு கொடுத்தார்.

முதல் பணித்தளமாக, மன்ரேலில் உள்ள நோட்ரே டாம் கல்லூரிக்கு அனுப்பினார்கள். அங்கு வாயிற்காப்பாளராக நியமித்தார்கள். இது ஏழு முதல் 12 வயதுடையவர்களுக்கான கல்விக்கூடம் ஆகும். இங்கு, கதவு திறந்துவிடுவது, விருந்தினர்களை வரவேற்பது, யாரைப் பார்க்க வருகிறார்களோ அவர்களை தேடிக் கண்டு பிடிப்பது, மாணவர்களைத் துயில் எழுப்புவது, கடிதம் விநியோகிப்பது போன்ற வேலைகளைச் செய்தார்.

புனித வளனார் மீது பக்தி[தொகு]

புனித வளனார் மீது மிகுந்த பக்தியுடன் திகழ்ந்ததுடன் புனிதரின் சுரூபம் அருகில் இருக்கும் விளக்கில் உள்ள எண்ணெயைப் பக்தர்களுக்குக் கொடுத்துச் சுகம் பெறச் செய்தார். மாணவர்களின் சிறந்த வழிகாட்டியாக இருந்தார்.

இக்கல்லூரிக்கு அருகில் ஒரு மலை இருந்தது. அதன் உயரத்தில் புனித வளனாருக்கு ஓர் ஆலயம் எழுப்ப ஆசைகொண்டார். இவர் தம்மிடம் இருந்த மிகச் சொற்ப பணத்தை ஒரு பெட்டியில் போட்டு மலையில் புனித வளனாருக்கு அருகில் வைத்து அதில் “அதில் புனித வளனாருக்கான நன்கொடை” என்று எழுதி வைத்தார். ஆண்டுகள் கடந்தன. மிகக் குறைவான தொகையே சேர்ந்திருந்தது. அதை வைத்து, 15 ஓ 18 அடி என்ற அளவில் சிறிய மரத்தால் ஆன கோவில் கட்டினார். மூன்று ஆண்டுகள் கழித்து முதலில் மேற்கூரை அமைத்தார். பிறகு சுற்றுச்சுவர் அதைத் தொடர்ந்து திருப்பயணிகள் தங்கி செபித்துச் செல்ல விடுதிகள் கட்டினார்.

புதுமை மனிதர்[தொகு]

பக்தர்களின் எண்ணிக்கையும், அவர்கள் எழுதும் கடிதமும் அதிகரித்தது. ஒரு மாதத்திற்கு 80,000 கடிதங்கள் கூட வந்தது. இவரை நோக்கி வந்த பலர் மன நலமும், உடல் நலமும் பெற்றுச் சென்றார்கள். புனித வளனார் மீதான பக்தி, ஏழை மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் மீதான உள்ளார்ந்த ஈடுபாடு என்பதே இவருடைய ஆன்மீகமாக இருந்தது. யாராவது இவரின் இச்சிறப்பைப் பற்றிப் புகழ்ந்தால், “நான் அறியாமையில் உள்ளவன். என்னைவிட யாராவது அதிக அறியாமையில் இருப்பாரென்றால் கடவுள் இந்நேரம் எனது இடத்தில் அவரை வைத்திருப்பார்” என்பார். புதுமைகளைக் குறித்து சிலாகித்தால், “வளனாரே சுகம் தருகிறார். நான் அவரின் சிறிய நாய்க்குட்டி அவ்வளவுதான்” என்று தன்னையே தாழ்த்திக் கொள்வார்.

தமது 90-ஆவது வயதில் முற்றிலும் நிறைவடையாத, திருத்தல கோவிலின் மேல் வளனாரின் திருவுருவை நிறுவ ஆசை தெரிவித்தார். மலைமீது ஏறமுடியாத நிலையில் புதிதாக நிறுவப்பட்ட சுரூபத்தைக் காண உடன் பணியாளர்கள் அந்த்ரேவை சுமந்து சென்றார்கள். கடைசிவரை முழுமையடைந்த ஆலயத்தைக் காணாமலேயே அந்த்ரே 1937, ஜனவரி ஆறாம் தேதி மரணம் அடைந்தார்.

அருளாளர் பட்டம்[தொகு]

திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் 1982, மே 23 அன்று அருளாளராக அறிவித்தார்.

புனிதர் பட்டம்[தொகு]

17 அக்டோபர் 2010இல் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் இவருக்கு புனிதர் பட்டமளித்தார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Meet the Miracle Man of Montreal". Archived from the original on 2016-09-14. பார்க்கப்பட்ட நாள் 9 டிசம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. 2.0 2.1 2.2 CBC News: "Brother André to become saint," பெப்ரவரி 19, 2010, accessed பெப்ரவரி 19, 2010
  3. 3.0 3.1 "Saint Brother André". பார்க்கப்பட்ட நாள் 9 டிசம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆந்திரே_பெசெத்&oldid=3859420" இலிருந்து மீள்விக்கப்பட்டது