வேட்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேட்கை (Appetite) உணவு உண்பதற்கான வேட்கையாகும்; இது சிலநேரங்களில் பசியாலும் ஏற்படுவதுண்டு. பசியற்ற போதிலும் சுவைமிக்க உணவுகள் வேட்கையைத் தூண்டக்கூடும். அனைத்து உயிரிய உயிரினங்களிலும் வேட்கை நிலவுகின்றது. வளர்சிதை மாற்றத் தேவைகளுக்கேற்ப உணவு உட்கொள்வதைச் சீர்படுத்த வேட்கை பயனாகின்றது. செரிமானக் குழாய், கொழுப்பிழையம், மனித மூளை இவற்றிடையேயான நெருங்கிய கூட்டிணைவு மூலம் இது கட்டுப்படுத்தப்படுகின்றது. வேட்கை ஒவ்வொருவரின் நடத்தையுடனும் நெருங்கிய தொடர்புள்ளதாக உள்ளது. மனவழுத்தத்தினால் வேட்கையின் அளவு கூடுவதும் உணவு உண்பது அதிகரிப்பதும் வழமையாகும். குறைவான வேட்கையுணர்வு பசியின்மை எனவும், கூடிய வேட்கையுணர்வு மிகுபசி (அல்லது "அதிணேவு") எனவும் அறியப்படுகின்றன. கட்டுப்பாடற்ற வேட்கை பசியற்ற உளநோய், மிகுதியாக உண்டு வாந்தியெடுத்தல், (bulimia nervosa), உடல் மெலிவுச் சீர்கேடு, மீதூண், மிகை உண்ணல் குறைபாடு ஆகியவற்றிற்கு காரணமாக அமைகின்றது.

உடலியக்கக் காரணிகள்[தொகு]

வெற்று வயற்றுடன் இருக்கும் போது உண்ணல் துவங்குவதாக கேனன், வாசுபர்ன் என்பவர்கள் (1912) முன்மொழிந்தனர். வெற்று வயிற்றின் சுவர்கள் ஒன்றுடன் ஒன்று உரசுவதால் பொதுவாக "பசி கூர்வலி" என்று பொதுவாக அறியப்படும் வலியை ஏற்படுத்துவதாக அவர்கள் பரிந்துரைத்தனர். இருப்பினும் அறுவை சிகிச்சை மூலம் வயிறு நீக்கப்பட்ட நோயாளிகளுக்கும் பசி கூர்வலி ஏற்படுவதால் இது காரணமல்ல என இங்கில்பிங்கர் நிறுவினார் (1944). (புற்றுநோய் அல்லது பெரும் வயிற்றுப் புண் காரணமாக இவர்களது வயிறு நீக்கப்பட்டு உணவுக்குழல் நேரடியாக சிறுகுடலுடன் இணைக்கப்பட்டிருந்தன.) வயிறில்லாததால் இந்த நோயாளிகள் அடிக்கடி உணவு உட்கொள்ள வேண்டியிருந்தாலும் அவர்களது பசியுணர்வும் திருப்தியுணர்வும் வழமையாகவே இருந்தது.

உடலின் ஊட்டச் சத்துக்களின் சேமிப்பு குறையும் போது பசி ஏற்படுவதாக கருதப்பட்டது. நமது உயிரணுக்களுக்கான முதன்மை உணவாக குளூகோசும் (சர்க்கரை) கொழுப்பமிலங்களும் உள்ளன. செரிமானத் தொகுப்பில் உணவிருப்பின் இந்த ஊட்டச்சத்துக்கள் குருதியில் உறிஞ்சப்பட்டு உயிரணுக்களுக்கு வழங்கப்படுகின்றன. ஆனால் சில நேரங்களில் செரிமானத் தொகுதி வெறுமையடைகின்றது; ஒவ்வொருநாள் காலையிலும் நாம் எழுந்திருக்கும்போது இத்தொகுதியில் உணவு எதுவும் இருக்காது. இவ்வாறு வெறுமையடையும்போது உடலின் உயிரணுக்களுக்கு உணவுவழங்க இந்த ஊட்டச்சத்துக்கள் எங்காவது சேமிக்கப்பட்டிருக்க வேண்டும். உண்மையில் இரண்டு சேமிப்பகங்கள் உள்ளன: குறுங்காலத்திற்கு ஒன்றும் நெடுங்காலத்திற்கும் ஒன்றுமாக இரண்டுள்ளன. குறுங்கால சேமிப்பகம் மாவுச்சத்தையும் நெடுங்கால சேமிப்பகம் கொழுப்பையும் சேமிக்கின்றன.

தனிநபரின் வேட்கைத் தூண்டலுக்கு பல காரணிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் முதன்மையானவை பாலினமும் வயதும் ஆகும்; பெண்களுக்கு ஆண்களை விட வேட்கை தணிதல் கூடுதலாக உள்ளது, வயது ஏற ஏற வேட்கை குறைகின்றது. புகைப்பழக்கம் உள்ளவர்களும் சினைமுட்டை வெளியேற்றும் பெண்களும் குறைவான வேட்கை உணர்வை உணர்கின்றனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Gregersen, NT; Møller, BK; Raben, A; Kristensen, SRT; Holm, L; Flint, A; Astrup, A (2011). "Determinants of appetite ratings: The role of age, gender, BMI, physical activity, smoking habits, and diet/weight concern". Food & Nutrition Research 55. doi:10.3402/fnr.v55i0.7028. பப்மெட்:21866221. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேட்கை&oldid=3399137" இலிருந்து மீள்விக்கப்பட்டது