ஒசூர் பத்தலப்பள்ளி காய்கறி சந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒசூர் பத்தலப்பள்ளி காய்கறி சந்தை என்பது தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டம் ஒசூரின் பத்தளப்பள்ளி பகுதியில் அமைந்துள்ள ஒரு காய்கறி சந்தையாகும்.

வரலாறு[தொகு]

ஒசூர் நகரில் இராயக்கோட்டை சாலையில் உள்ள வாரச் சந்தை வளாகத்தில் ஒசூர் நகராட்சியால் கட்டப்பட்ட எம்.ஜி.ஆர். மார்கெட் என்ற பகுதியில் காய்கறி மொத்த விற்பனை சந்தை செயல்பட்டு வந்தது. இந்த மார்கெட்டில் வணிகர்கள் நகராட்சி கடைகளை வாடகைக்கு எடுத்து வணிகம் செய்துவந்தனர். இந்நிலையில் 2000களின் துவக்கத்தில் தங்களுக்கு சொந்தமற்ற நகராட்சி கடைகளில் வணிகம் செய்வதில் உள்ள நிச்சயமற்றத் தன்மையாலும், உள்ளூர் சுமைத் தூக்கும் தொழிலாளர்களின் முரட்டுத்தனத்தாலும் இந்த இடத்திலிருந்து வெளியேறி தங்களுக்கு சொந்தமாக கடைகளை உருவாக்கவேண்டுமென கூட்டாக முடிவெடுத்தனர். இதனையடுத்து ஒசூர் கிருட்டிணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பத்தலப்பள்ளி என்ற இடத்தில் இடம் வாங்கி 2005 இல் தங்களுக்கான காய்கறி சந்தையை சொந்தமாகக் கட்டிக்கொண்டு சந்தையை ஒட்டு மொத்தமாக இடம்மாற்றிக் கொண்டனர்.

வணிகம்[தொகு]

இந்த சந்தையில் 200க்கும் மேற்பட்ட மொத்த வணிகர்கள் காய்கறி வணிகத்தில் ஈடுபடுகின்றனர். இந்த சந்தைக்கு தேன்கனிக்கோட்டை, தளி, கர்நாடகத்தின் மாலூர், ஆனேக்கல் ஆகிய வட்டங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இங்கு முட்டைக்கோசு, தக்காளி, பூக்கோசு, பீன்சு, பீட்ரூட், கேரட், வெள்ளரிக்காய், மிளகாய், வெங்காயம், உருளைக் கிழங்கு உட்பட பல்வேறு காய்கறிகள் மொத்த விற்பனை செய்யப்படுகின்றன. இங்கிருந்து தமிழகம் முழுவதும் மற்றும் கேரளத்திற்கும் காய்கறிகள் அனுப்பப் படுகின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஜோதி ரவிக்குமார் (சனவரி 2017). "பண மதிப்பு நீக்கத்துக்குப் பின்னர் பத்தளப்பள்ளி சந்தையில் காய்கறி விற்பனை 70 சதவீதம் வீழ்ச்சி". தி இந்து. doi:4.