பகுரைனில் பெண்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பகுரைனில் பெண்கள்
பாரம்பரிய திருமண உடையில் ஒரு பகுரைனியப் பெண்
பாலின சமனிலிக் குறியீடு
மதிப்பு0.258 (2012)
தரவரிசை45th
தாய் இறப்புவீதம் (100,000க்கு)20 (2010)
நாடாளுமன்றத்தில் பெண்கள்18.8% (2012)
உயர்நிலைக் கல்வி முடித்த பெண் 25 அகவையினர்74.4% (2010)
பெண் தொழிலாளர்கள்39.4% (2011)
உலகளாவிய பாலின இடைவெளிக் குறியீடு[1]
மதிப்பு0.6334 (2013)
தரவரிசை112th out of 136

பகுரைனில் பெண்கள் (Women in Bahrain) பொதுவாக பிற அரபு நாடுகளை விட பகிரங்கமாக பொதுப்பணிகளில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். நன்கு படித்தவர்களாக உள்ளனர். அதிகமான பகுரைன் பெண்கள் முக்கிய தொழில்களில் உயர் பதவிகளை வகிக்கின்றனர். பெண்களுக்கான சமூக அமைப்புகள் மற்றும் மகளிர் அமைப்புக்களில் பங்கேற்று செயலாற்றுகின்றனர். வாக்களிக்கும் உரிமை இவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட நான்கில் ஒரு பகுதிப் பெண்கள் வீட்டுக்கு வெளியில் வந்து வேலை செய்யும் பெண்களாக உள்ளனர்[2]

உடை, தோற்றம் மற்றும் நடத்தை[தொகு]

பொது இடங்களில் சில பகுரைனியப் பெண்கள் தலைக்குப் போர்வை அணிபவர்களாக இருந்தாலும் பெரும்பாலானோர் முற்றிலுமாக முக்காடு அணிவதில்லை[2]. யெல்லாபியா என்ற நீண்ட, தளர்வான ஆடை, உள்ளிட்ட பாரம்பரிய உடைகளை வீட்டிலும் பணிபுரியும் இடங்களிலும் அணியும் பாணி பகுரைனியப் பெண்களால் விரும்பப்படுகிறது.கூந்தலை சிறிதளவு மறைக்கும் வகையிலான முட்டாசிமா பாணி அல்லது முழுமையாக தலைமுடியை மறைக்கும் முகாயிபா பாணி இரண்டையும் இவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவ்விரு ஆடை அணியும் முறைகளைத் தவிர நிகாப் எனப்படும் பகுதியாக முகத்தை மறைக்கும் ஆடை அணியும் முறையும் முடானாகிபா எனப்படும் முழுவதுமாக முகத்தை மறைக்கும் நடைமுறையும் இவர்களால் பின்பற்றப்படுகிறது. இளம் பெண்களும் முதியவர்களும் வழக்கமாக முகத்திரை அணிவதை வெளிப்படையாகக் காணமுடிகிறது. கூடுதல் அலங்காரங்களாகக் கருதப்படும் நகப்பூச்சு, வாசனை திரவியங்கள் அல்லது கவனத்தை ஈர்க்கும் இன்னபிற அலங்காரங்களின் பயன்பாடு பொது இடங்களில் விரும்பப்படுவதில்லை. குறிப்பாகப் பகுரைனியப் பெண்கள், குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்கள் தவிர அந்நியர்களை, குறிப்பாக ஆண்களைப் பார்த்து புன்னகைப்பதை பகுரைனியப் பண்பாடு ஊக்குவிப்பதில்லை[3]

சமூக ஈடுபாடுகள்[தொகு]

கருப்பு உடையணிந்த நான்கு பகுரைனியப் பெண்கள் ஒரு கல் வாயிலை நோக்கி நடக்கிறார்கள்

1960 கள் போன்ற கடந்த காலத்தில், பகுரைன் பெண்கள் தங்கள் கணவர்களின் தொழிலையே நம்பியிருந்தனர். ஒரு மீனவனுக்கு வாழ்க்கைத் துணையாகும் பெண் அவனுடைய மீன் வணிகத்திற்கு உதவியாக மீன்களைத் தூய்மைப்படுத்துவது, மீன்களை விற்பது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். இதே போல ஒரு விவசாயியை திருமணம் செய்து கொள்ளும் பெண் விவசாய நிலத்தில், சந்தைப் பொருட்களை உற்பத்தி செய்வதில் அவனுக்கு உதவியாளாகச் செயல்பட்டனர். நகரங்கள் மற்றும் மாநகரங்களில், பகுரைனியப் பெண்கள் பாரம்பரியமாக குழந்தைகள் பார்த்துக்கொள்வது மற்றும் வீட்டைப் பராமரிப்பது போன்ற வேலைகளை கடமையாக நினைத்து செய்து வந்தனர். பணக்கார பகுரைன் பெண்கள், பொதுவாக, அவர்களுக்காக அன்றாட வேலைகளை செய்யும் வேலைக்காரர்களை கட்டளையிட்டு வேலைவாங்கிக் கொண்டிருந்தனர், பகுரைன் பெண்கள் கூடுதலாக பாரம்பரிய பூந்தையல் தொழிலில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருந்தனர். பகுரைனியப் பெண்களின் பூந்தையல் வேலைப்பாட்டுத் திறமை பகுரைன் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலித்து நாட்டிற்குப் புகழ் சேர்க்கிறது எனலாம்[4]

கடந்த முப்பது வருட காலங்களில், பகுரைன் பெண்கள் சமுதாயத்தில் தங்களுடைய வழக்கமான மரபுமுறைகளில் இருந்து விடுபடத் தொடங்கியுள்ளனர். கல்வி, மருத்துவம், செவிலியர் பயிற்சி, சுகாதாரம் தொடர்பான இதரப்பணிகள், நிதிமுதலீடு , எழுத்தர் வேலைகள், ஒளி சாதனங்கள் உற்பத்தி, வங்கி தொழில், மற்றும் கால்நடை அறிவியல், போன்ற பல்வேறு துறைத் தொழிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு மற்றவர்கள் மத்தியில் இயல்பாக தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்[3].

முன்மாதிரிகள்[தொகு]

அமெரிக்காவின் பிரன்சுவிக்கில் வந்த சமயப்பரபாளர்கள், எகிப்து மற்றும் லெபனானில் இருந்து புலம்பெயர்ந்த ஆசிரியைகள் குழுவினர் பகுரைன் பெண்களின் கல்வி முக்கியத்துவம் மற்றும் நவநாகரிகப் பார்வைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தினர். அல்-கதிசா அல்-குப்ரா என்ற பெண்களுக்கான முதலாவது மதச்சார்பற்றப் பள்ளி 1928 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கெய்ரோ, எகிப்து, பெய்ரூட், லெபனான் நகரங்களில் படித்த பகுரைனியப் பெண்கள் குழு 1950களில் பகுரைனில் ஆசிரியர்களாகவும் பள்ளி முதல்வர்களாகவும் பணியேற்றனர். மருத்துவமனை சார்ந்த செவிலியர் பள்ளி 1959 ஆம் ஆண்டில், சுகாதார அறிவியல் கல்லூரியுடன் திறக்கப்பட்டது. இக்கல்லூரி பகுரைன் பெண்கள் செவிலியர்கள் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பினைக் கொடுத்தது. எகிப்து, பெய்ரூட், யோர்டான் போன்ற நாடுகளுக்குச் சென்று பகுரைன் பெண்களால் மருத்துவம் மற்றும் மருத்துவம் தொடர்புடைய கல்வியைப் பெற முடிந்தது. இதனால் இவர்கள் துறைத் தலைவர்களாகவும், மருத்துவக்கல்லூரி முதல்வர்களாகவும், பல்கலைக்கழகப் பேராசிரியர்களாகவும் முன்னேற்றமடைந்துள்ளனர்[3].

கல்வி[தொகு]

பெண்களுக்கு கல்வியளிக்கும் வசதியை அளித்த முதலாவது வளைகுடா நாடாக பகுரைன் 1928 இல் மாறியது. இதே போல 1965[3] ஆம் ஆண்டில் பெண்களுக்கான சமூகநல அமைப்புக்கள் தொடங்கிய முதல் வளைகுடா நாடு என்ற பெருமையும் பகுரைனுக்கு கிடைத்தது. 2005 ஆம் ஆண்டில், இராயல் மகளிர் பல்கலைக்கழகம் என்ற முதலாவது தனியார், அனைத்துலகப் பல்கலைக்கழகம் பெண்கள் கல்விக்காக பகுரைனில் அர்ப்பணிக்கப்பட்டது[5]

ஓட்டுரிமை[தொகு]

அக்டோபர் 2002 இல் நடைபெற்ற பகுரைன் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பகுரைன் பெண்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் இதே ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு திருத்தம், பகுரைனியப் பெண்களை முழு உரிமை கொண்ட பெண்களாக அங்கீகரித்தது. வளைகுடா கூட்டமைப்பு நாடுகளில் இவ்வுரிமையை அளித்த இரண்டாவது நாடு என்ற பெருமையும் பகுரைனுக்குக் கிடைத்தது[6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "உலகாய பாலின இடைவெளி அறிக்கை 2013" (PDF). World Economic Forum. pp. 12–13.
  2. 2.0 2.1 "Women in Bahrain". Archived from the original on 26 மே 2011. பார்க்கப்பட்ட நாள் 29 May 2011.
  3. 3.0 3.1 3.2 3.3 McCarthy, Julanne. "Bahrain (Al-Bahrayn)". Archived from the original on 24 மே 2011. பார்க்கப்பட்ட நாள் 29 May 2011.
  4. "Workshop: Nasaej (Traditional Embroidery), Workshop Owner: Bahrain Young Ladies Association". Archived from the original on 15 ஜூன் 2011. பார்க்கப்பட்ட நாள் 29 May 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "About RUW". பார்க்கப்பட்ட நாள் 29 May 2011.
  6. "In Bahrain, Women Run, Women Vote, Women Lose" New York Times
  7. ""History" and "Bahrain, officially Kingdom of Bahrain"". பார்க்கப்பட்ட நாள் 29 May 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுரைனில்_பெண்கள்&oldid=3673576" இலிருந்து மீள்விக்கப்பட்டது