எஸ். சி. சி. அந்தோனிப்பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். சி. சி. அந்தோனிப்பிள்ளை
S. C. C. Anthony Pillai
வடக்கு மதராசு மக்களவை உறுப்பினர்
பதவியில்
1957–1962
பின்னவர்பெ. சீனிவாசன்
சூளை தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1952–1957
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1914-04-27)27 ஏப்ரல் 1914
யாழ்ப்பாணம், இலங்கை
இறப்பு16 ஆகத்து 2000(2000-08-16) (அகவை 86)
சென்னை, இந்தியா
துணைவர்டோனா கரோலைன் ரூபசிங்க குணவர்தனா (இ. சூலை 6, 2009, கொழும்பு)
முன்னாள் கல்லூரி
  • இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரி
  • கிங்சு கல்லூரி, இலண்டன்

செபஸ்தியான் சிரில் கான்ஸ்டன்டைன் அந்தோனிப்பிள்ளை (Sebastian Cyril Constantine Anthony Pillai, ஏப்ரல் 27, 1914 – ஆகத்து 16, 2000) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்தியத் தொழிற்சங்கவாதியும், அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

அந்தோனிப்பிள்ளை 1914 ஏப்ரல் 27 இல் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் பிறந்தார்.[1] இவரது தந்தை எஸ். அந்தோனிப்பிள்ளை.[2] இவரது குடும்பம் இந்தியாவில் திருநெல்வேலியைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்கர்கள் ஆவர்.[2] அந்தோனிப்பிள்ளை யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியில் கல்வி கற்றார்.[2] இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் சேர்ந்து வரலாற்றில் பட்டம் பெற்றார்.[2][3] பின்னர் இலண்டன் கின்சுக் கல்லூரியில் படித்தார். இலண்டனில் இந்தியா லீக் என்ற அமைப்பிலும், இலங்கை மாணவர்களின் மார்க்சிய படிப்புக் கழகத்திலும் முக்கிய உறுப்பினராக இருந்தார்.[2]

அந்தோனிப்பிள்ளை 1939 இல் கரோலைன் குணவர்தனா என்பவரைத் திருமணம் புரிந்தார்.[2][4] இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் (மகேந்திரன், ரஞ்சித், நளின் ரஞ்சன், சுரேஷ்குமார்) உள்ளனர்.[1][4]

பணி[தொகு]

அந்தோனிப்பிள்ளை லங்கா சமசமாஜக் கட்சி என்ற மார்க்சியக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினர் ஆவார்.[2] இலண்டனில் இருந்து 1938 இல் இலங்கை திரும்பிய பின்னர் மீண்டும் இக்கட்சியில் சேர்ந்தார்.[2] கட்சித் தோழர்களிடையே டோனி என அழைக்கப்பட்ட அந்தோனிப்பிள்ளை சிங்கள மொழி அறியாதவராக இருந்ததமையால், கட்சித் தலைவர் லெஸ்லி குணவர்தன அவரது உடன்பிறப்பான கரோலைன் என்பவரிடம் சிங்கள மொழிப் பயிற்சிக்காக டோனியை அனுப்பினார்.[4][5] அந்தோனிப்பிள்ளையும், கரோலைனும் காதலர்களாகிப் பின்னர் திருமணமும் செய்தனர்.[4][5]

மலைநாட்டுத் தமிழ் தோட்டத் தொழிலாளர்களிடையே கட்சித் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக சமசமாசக் கட்சி தலைமையகம் அந்தோனிப்பிள்ளையையும், கரொலைனையும் நாவலப்பிட்டிக்கு அனுப்பியது.[2][4][5] பிரித்தானியத் தோட்ட முதலாளிகள் தொழிற்சங்க நடவடிக்கைகளை வன்முறைகள் மூலம் அடக்கி வந்த காலகட்டம் அது.[4][5] 1939 இல் இரண்டாம் உலகப் போர் வெடித்த போது சமசமாசக் கட்சி "இரண்டாவது ஏகாதிபத்தியப் போர்" என்ற வகையில் அதனை எதிர்த்து வந்தது.[6][7] 1939/40 காலப்பகுதியில் இக்கட்சி பல வேலை நிறுத்தங்களை மேற்கொண்டதை அடுத்து 1940 இல் இக்கட்சி தடை செய்யப்பட்டது. கட்சித் தலைவர்கள் கொல்வின் ஆர். டி சில்வா, பிலிப் குணவர்தனா, என். எம். பெரேரா, எட்மண்ட் சமரக்கொடி ஆகியோர் 1940 சூன் மாதத்தில் கைது செய்யப்பட்டனர்.[7][8][9] ஆனாலும், 1940-41 காலப்பகுதியில், அந்தோனிப்பிள்ளை, கரொலைன், அவரது சகோதரர் ரொபர்ட் குணவர்தனா ஆகியோர் தொடர்ந்து போக்குவரத்து, துறைமுகத் தொழிலாளர்களிடையே வேலை நிறுத்தங்களை ஒழுங்குபடுத்தினர்.[2][4][5]

1942 ஏப்ரலில், சிறை ஊழியர்கள் சிலரின் உதவியுடன் கட்சித் தலைவர்கள் சிறையில் இருந்து தப்பினர். கொல்வின் ஆர். டி சில்வா, என். எம். பெரேரா ஆகியோர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றனர். எட்மண்ட் சமரக்கொடி இலங்கையில் தலைமறைவாகினார்.[8][9] 1942 சூலையில் அந்தோனிப்பிள்ளை உட்பட சில தலைவர்கள் மீன்பிடிப் படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றனர்.[4][5] பெரும்பாலானோர் மும்பை செல்ல, அந்தோனிப்பிள்ளை மதுரையில் தங்கி இந்திய, இலங்கை, பர்மிய போல்செவிக்-மார்க்சியக் கட்சியில் இணைந்தனர்.[2][4][5] அந்தோனிப்பிள்ளை இக்கட்சியின் மத்திய குழு உறுப்பினராக 1944 முதல் 1948 வரை இருந்து பணியாற்றினார்.[2] 1942 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை மதுரையில் கட்சி உறுப்பினர்கள் நடத்தினர்.[4][5]

1943 இல் அந்தோனிப்பிள்ளை சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.[2][4][5] 1944 இல் மதராஸ் தொழிலாளர் ஒன்றியத்தின் தலைவரானார்.[1] காவல்துறையினர் தேடி வந்த நிலையில், அந்தோனிப்பிள்ளை தனது குடும்பம், மற்றும் இலங்கைத் தோழர்கள் சிலருடன் தேனாம்பேட்டையில் ஒரு வீட்டில் தங்கியிருந்தார்.[4][5] இந்நிலையில் கரோலைன் தனது இரு மகன்களுடன் கொழும்பு திரும்பினார்.[4][5] அந்தோனிப்பிள்ளையும் அவரது தோழர்களும் தலைமறைவாக இருந்த நிலையில், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு "அரசுக்கு எதிரான பிரசுரங்கள்" வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டாண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.[4][5]

1946 இல் சிறையில் இருந்து விடுதலை பெற்ற பின்னர் அந்தோனிப்பிள்ளை இலங்கை திரும்பினார்.[2][4][5] சில நாட்களில் அவர் தனது குடும்பத்துடன் மீண்டும் தமிழ்நாடு திரும்பி மதராசு தொழிலாளர் ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.[4][5] 1947 மார்ச் மாதத்தில் வேலை நிறுத்தங்களை ஒழுங்கு செய்தமைக்காக அவரும் ஏனைய தொழிற்சங்கத் தலைவர்களும் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.[4][5] இவர்களது விடுதலையை வேண்டி ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.[4][5] அந்தோனிப்பிள்ளை ஆந்திரப் பிரதேச சிறைச்சாலை ஒன்றுக்கு மாற்றப்பட்டார். மதராசு தொழிலாளர் ஒன்றியத்தை 1947 சூன் மாதத்தில் அரசு தடை செய்தது.[4] வேலை நிறுத்தங்களும் கைவிடப்பட்டன.[4]

அந்தோனிப்பிள்ளை தொழிற்சங்கத் தலைவராக 1946 முதல் 1975 வரையும் பின்னர் 1983 ஆம் ஆண்டிலும் இருந்து பணியாற்றினார்.[2] 1948 இல் இந்திய ஓவர்சீசு வங்கியின் தொழிலாளர் ஒன்றியத்தை ஆரம்பித்து அதன் தலைவராகவும் இருந்து பணியாற்றினார்.[2] 2000 ஆம் ஆண்டு வரை இவர் அகில இந்திய துறைமுகத் தொழிலாளர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராகவும், துணைத் தலைவராகவும் இருந்தார்.[2][4] அகில இந்திய போக்குவரத்துப் பணியாளர்களின் ஒன்றியத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.[2][4] சென்னைத் துறைமுகத்தின் அறங்காவலர்களில் ஒருவராக 1954 முதல் 2000 ஆம் ஆண்டு வரை இருந்துள்ளார்.[1][2] தனது வாழ்நாளில் 200 இற்கும் அதிகமான தொழிற்சங்கங்களைத் தலைமையேற்று நடத்தியுள்ளார்.[2]

1948 இல் இந்திய, இலங்கை, பர்மிய போல்செவிக்-மார்க்சியக் கட்சி இந்திய சோசலிசக் கட்சியுடன் இணைந்ததை அடுத்து அந்தோனிப்பிள்ளையும் அக்கட்சியில் சேர்ந்தார்.[2] 1948 முதல் 59 வரை சென்னை மாநகராட்சியில் உறுப்பினராக இருந்தார்.[2][4][5] சென்னை, சூளை சட்டமன்ற உறுப்பினராக 1952 முதல் 1957 வரை இருந்தார்.[1][2] 1956 இல் லோகியா சோசலிஸ்டுக் கட்சியில் சேர்ந்தார்.[2] 1957 முதல் 1962 வரை வட சென்னை மக்களவைத் தொகுதியின் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] 1961 இல் தமிழ்த் தேசியக் கட்சியில் சேர்ந்தார்.[2] 1964 இல் தமிழ்த் தேசியக் கட்சி இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்ததை அடுத்து அந்தோனிப்பிள்ளையும் காங்கிரசில் சேர்ந்தார்.[2] அந்தோனிப்பிள்ளை 1967 தேர்தலில் வடசென்னைத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[2] இந்திய தேசிய காங்கிரசு பிளவடைந்த போது அந்தோனிப்பிள்ளை காமராசரின் நிறுவன காங்கிரசு கட்சியில் இணைந்தார்.[2]

அந்தோனிப்பிள்ளை 2000 ஆம் ஆண்டு ஆகத்து 16 இல் சென்னையில் தனது 86வது அகவையில் காலமானார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Trade union leader Anthony Pillai dead". பிசினஸ் லைன். 17 ஆகத்து 2000. http://www.thehindubusinessline.com/2000/08/17/stories/141744rf.htm. 
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 2.16 2.17 2.18 2.19 2.20 2.21 2.22 2.23 2.24 2.25 2.26 2.27 2.28 "Encyclopedia: An". Marxists Internet Archive.
  3. Ceylon University College Prospectus 1936–37. Ceylon University College. 1936. பக். 41. http://noolaham.net/project/66/6594/6594.pdf. 
  4. 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 4.10 4.11 4.12 4.13 4.14 4.15 4.16 4.17 4.18 4.19 4.20 4.21 4.22 Erwin, C. W. (16 மார்ச் 2009). "The Ceylonese who stirred Madras Labour". Madras Musings. http://madrasmusings.com/Vol%2018%20No%2023/the-ceylonese-who-stirred-madras-labour.html. 
  5. 5.00 5.01 5.02 5.03 5.04 5.05 5.06 5.07 5.08 5.09 5.10 5.11 5.12 5.13 5.14 5.15 5.16 Ervin, Charles Wesley (11 டிசம்பர் 2008). "Tribute to a 100-year-old pioneer socialist". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-opinion/tribute-to-a-100yearold-pioneer-socialist/article1392937.ece. 
  6. Fernando, Meryl (27 சனவரி 2002). "Shunned power for principles". தி ஐலண்டு (இலங்கை) இம் மூலத்தில் இருந்து 2017-01-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170117112846/http://www.island.lk/2002/01/27/featur06.html. 
  7. 7.0 7.1 "Birth Anniversary : Edmund Samarakkody - stormy petrel of revolution". டெய்லி நியூசு. 19 ஏப்ரல் 2002. http://archives.dailynews.lk/2002/04/19/fea06.html. 
  8. 8.0 8.1 Fernando, Amaradasa (5 சனவரி 2002). "Edmund Samarakkody kept faith to the last". தி ஐலண்டு (இலங்கை) இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304060651/http://www.island.lk/2002/01/05/featur02.html. 
  9. 9.0 9.1 Botejue, Vernon (5 சனவரி 2011). "Edmund Samarakkody's 18th Death Anniversary: Politician and trade union leader". டெய்லி நியூசு. http://archives.dailynews.lk/2011/01/05/fea06.asp.