கனடா பசுபிக் தொடருந்துப் பாதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கனடா பசுபிக் தொடருந்துப் பாதை (Canadian Pacific Railway) என்பது, 1881ல் நிறுவப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் கொண்ட முதல் வகுப்புத் தொடருந்துப் பாதை ஆகும். 1969க்கும் 1996க்கும் இடையே இது "சி.பி ரெயில்" என அழைக்கப்பட்டது. இந்தத் தொடருந்துப் பாதை "கனேடிய பசிபிக் ரெயில்வே லிமிட்டெட்" நிறுவனத்திற்குச் சொந்தமானது. இந்த நிறுவனம், 2001ல் இடம்பெற்ற நிறும மறுசீரமைப்புக்குப் பின்னர் கனடா பசுபிக் தொடருந்துப் பாதையின் சட்டபூர்வ உரிமையாளர் ஆனது. அல்பர்ட்டாவில் உள்ள கல்கரியில் தலைமையகத்தைக் கொண்டுள்ள இந்த நிறுவனம், கனடாவிலும், ஐக்கிய அமெரிக்காவிலும் அமைந்துள்ள 20,000 கிமீ (12,500 மைல்) நீளமான பாதையைச் சொந்தமாகக் கொண்டுள்ளது. இப்பாதை மொன்றியலில் இருந்து வான்கூவர் வரைக்கும், பின்னர் வடக்கு நோக்கி எட்மண்டன் வரையும் செல்கிறது. இந்தத் தொடருந்துப்பாதை வலைப்பின்னல், ஐக்கிய அமெரிக்காவில் உள்ள மினியாப்போலிசு, மில்வாக்கி, டிட்ராயிட், சிக்காகோ, நியூயார்க் நகரம் ஆகிய நகரங்களுக்கும் பயன்படுகிறது.