சான் கோசுட்டர்லிட்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சான் மைக்கேல் கோசுட்டர்லிட்சு
John Michael Kosterlitz
பிறப்பு1942 (அகவை 81–82)
அபர்டீன், இசுக்காட்லாந்து
தேசியம்பிரித்தானியர்
கல்வி நிலையம்கேம்பிரிட்சு பல்கலைக்கழகம்
ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
குறிப்பிடத்தக்க விருதுகள்இயற்பியல் நோபல் பரிசு (2016)
இலார்சு ஆன்சாகர் பரிசு (2000)
இணையதளம்
https://vivo.brown.edu/display/jkosterl

சான் மைக்கேல் கோசுட்டர்லிட்சு (John Michael Kosterlitz) 2016 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை[1] தாவீது தூலீசு (David Thouless), தன்கன் ஃகால்டேன் ஆகியோருடன் சேர்ந்து வென்றார். இவர் பிரௌன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் பேராசிரியராக இருக்கின்றார். பிரித்தானியராகிய இவர் இடாய்ச்சுலாந்திலிருந்து வெளியே குடியேறிய இடாய்ச்சுலாந்திய இயூதப் பெற்றோர்களுக்குப் பிறந்தார். இவருடைய தந்தையார் ஃகான்சு வால்டர் கோசுட்டர்லிட்சு[2] முன்னோடியான உயிர்வேதியியலாளர். தாயார் ஃகான்னா கிரேசோர்னர் (Hannah Gresshorner)

சான் மைக்கேல் கோசுட்டர்லிட்சு கேம்பிரிட்சு பல்கலைக்கழகத்தில் கான்வில் மற்றும் கெயசுக் கல்லூரியில் (Gonville and Caius College) இளநிலைப் பட்டமும் (B.A), முதுநிலைப் பட்டமும் (M.A) பெற்றார். 1969 ஆண்டு ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் பிரேசனோசுக் கல்லூரியில் (Brasenose College) டி.ஃபில் (D.Phil.) என்னும் முனைவர்ப்பட்டம் பெற்றார். அதன் பின்னர் சில முதுமுனைவர் பதவிகளில் இருந்தபின்னர் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் 1974 இல் விரிவுரையாளராகச் சேர்ந்து பின்னர் இரீடராகவும் (Reader) இருந்தார். பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் தாவீது தூலீசு அவர்களுடனும் பின்னர் கார்னெல் பல்கலைக்கழகத்திலும் முதுமுனைவராக இருந்துள்ளார். 1982 முதல் அமெரிக்காவில் பிரௌன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் பேராசிரியராக இருக்கின்றார். பின்லாந்தில் உள்ள ஆல்டோ பல்கலைக்கழகத்தில் (Aalto University) வருகைதரு ஆய்வுப் பேராளாராக இருக்கின்றார்.

இவருடைய ஆய்வு இயற்பியலில் திண்மநிலைக் கொள்கைகளைப் பற்றியது. இருதிரட்சி (இரு பரிமாண)ப் பொருட்கள், ஒருதிரட்சிப் பொருள்கள் முதலானவற்றைப் பற்றியது இவருடைய ஆய்வு. குறிப்பாக நிலைமுக மாற்றம் (phase transitions), சீருறா அமையம் (random systems), ஒரே தற்சுழற்சியுடைய எதிர்மின்னி அணுக்கநிலை (electron localization), சீருறா நுண்காந்த உறைநிலை (spin glass), நிலைபெயர் நிகழ்ச்சிகளாகிய உருகுதல், உறைதல் ஆகியவை இவருடைய ஆய்வுத்துறையில் சேரும்.

கோசுட்டர்லிட்சு 1981 ஆம் ஆண்டு பிரித்தானிய இயற்பியல் கழகத்தின் மாக்சுவல் பதக்கமும் பரிசும் பெற்றார். 2000 இல் அமெரிக்க இயற்பியல் குமுகத்தின் இலார்சு ஆன்சாகர் பரிசை வென்றார்- குறிப்பாக இது கோசுட்டர்லிட்சு-தூலீசு நிலைமாற்றம் (Kosterlitz–Thouless transition) என்னும் கண்டுபிடிப்புக்காக. 1993 முதல் அமெரிக்க இயற்பியல் குமுகத்தின் பேராளராக (Fellow) இருக்கின்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Devlin, Hannah; Sample, Ian (2016-10-04). "British trio win Nobel prize in physics 2016 for work on exotic states of matter – live". the Guardian. பார்க்கப்பட்ட நாள் 2016-10-04.
  2. Anatomy of a Scientific Discovery: The Race to Find the Body's Own Morphine, by Jeff Goldberg, Skyhorse Publishing, Inc., 13 Dec 2013, Brain Soup

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்_கோசுட்டர்லிட்சு&oldid=2707887" இலிருந்து மீள்விக்கப்பட்டது