ஏ. ஜி. சுப்புராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


ஏ. ஜி. சுப்புராமன் (பிறப்பு: 30-09-1930: இறப்பு: 07-02-1986) இந்திய விடுதலை இயக்கத்தில் தனது தந்தை அ. எஸ். கோவிந்தராஜூலுவுடன் இணைந்து போராடியவர். 26 வயதில் மதுரை நகர் மன்றத் தலைவராக 1957 முதல் 1959 முடிய பணியாற்றும் போது, மதுரையில் பாதாள சாக்கடை திட்டத்தை விரிவுபடுத்தி, மதுரை அருகில் உள்ள அவனியாபுரத்தில் மதுரை நகராட்சி புல்பண்ணை வளர்க்கும் திட்டத்தை உருவாக்கியவர்

அரசியல்[தொகு]

இவர் இந்திய மக்களவைக்கு இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1]இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக 1980இல் மதுரை மக்களவைத் தொகுதியில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளாரை விட 69,195 வாக்குகள் கூடுதலாகப் பெற்று, ஏழாவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ராஜீவ் காந்தியின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஏ. ஜி. சுப்பராமன், இந்திராகாந்தி படுகொலைக்குப் பின்னர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில், 24 டிசம்பர் 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற எட்டாவது மக்களவைத் தேர்தலில், மீண்டும் இரண்டாம் முறையாக மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு, தன்னை எதிர்த்து நின்ற இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளர் என். சங்கரய்யாவை விட 1,73,011 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.

பணிகள்[தொகு]

சிறந்த கால்பந்தாட்ட வீரரான சுப்பராமன் மதுரை தமுக்கம் திடலில் மூன்று முறை தமிழ்நாடு மாநில அளவிலான கால்பந்து போட்டிகளை நடத்தியவர். மேலும் தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்கத்தின் தலைமைப் பதவியில் செயல்பட்டவர்.

இந்திய அரசின் சார்பாக, அகில இந்திய சமாதானத் தூதுக் குழுவுடன் ருசியா, சுவீடன் போன்ற நாடுகளுக்கு சென்று வந்தவர்.

மறைவு[தொகு]

மதுரை நகர் மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஏ. ஜி. சுப்பராமன் 7 பிப்ரவரி 1986இல், 56வது அகவையில் மாரடைப்பால் காலமானார். பின்னர் இவரது மகன் வழக்கறிஞர் ஏ. ஜி. எஸ். இராம்பாபு, மதுரை மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கியவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Subburaman, Shri A.G. Combined List of Members of Lok Sabha (I to XIII Lok Sabha)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._ஜி._சுப்புராமன்&oldid=3497448" இலிருந்து மீள்விக்கப்பட்டது