வுட்ரோஸ் நடவடிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வுட்ரோஸ் நடவடிக்கை (Operation Woodrose) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் புளூஸ்டார் நடவடிக்கையைத் தொடர்ந்த மாதங்களில் "பரவலாகக் கிளர்ச்சி வெடிக்காமல் தடுக்கும்" பொருட்டு இந்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையாகும்.[1] நாட்டின் மிகப்பெரிய சீக்கிய அரசியல் கட்சியான அகாலி தளத்தின் அனைத்து உறுப்பினர்களையும் கைது செய்ததோடு, மாணவர் அமைப்பான அனைத்து இந்திய சீக்கிய மாணவர் சங்கத்தையும் தடை செய்தது.[1] மேலும், கிராமப்புறங்களில் இந்திய இராணுவம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளில் ஆயிரக் கணக்கான சீக்கியர்கள், பெரும்பாலும் இளைஞர்கள், விசாரணைக்கென காவலில் எடுக்கப்பட்டு, கடும் வதைக்கு ஆளாக்கப்பட்டனர்.[1] இந்நடவடிக்கைக்குப் பின், ஒரு சிறுபான்மை சமூகத்தை ஒடுக்கும் பொருட்டு "கொடுமையான சட்டதிட்டங்களை" மத்திய அரசு கையாண்டதாகக் கடுமையாக விமரிசிக்கப்பட்டது.[1]

நடவடிக்கையின்போது அப்பாவி குடிமக்கள் எனக் கருதப்படுவோர் உட்பட ஆயிரக் கணக்கான சீக்கிய இளைஞர்கள் சுற்றிவளைக்கப்பட்டனர். இச்செயல் மாநிலத்தில் சீக்கிய இளைஞர்களை அடியோடு களையும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்தர்ஜீத் சிங் ஜைஜீ வெளியிட்டக் கணக்கீட்டின்படி இந்தக் காலகட்டத்தில் நிகழ்த்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் விளைவாக ஏறத்தாழ பத்து இலட்சம் பேர் காணாமல் போனதாகவோ கொல்லப்பட்டதாகவோ அறிவிக்கப்பட்டது.[2] கூட்டுப் புலனாய்வு குழுவினைச் சேர்ந்த சங்கத் சிங் கூற்றுபடி, நடவடிக்கை தொடங்கிய முதல் நான்கு முதல் ஆறு வாரங்களுக்குள் கிட்டத்தட்ட பத்து இலட்சம் இளைஞர்கள் காவலில் வைக்கப்பட்டனர், மேலும் அதிலும் பலரைப் பற்றிய தகவல் அறியப்படவில்லை.[3] அவர் மேலும் இருபதாயிரம் இளைஞர்கள் பாக்கித்தானுக்குச் சென்றதாகவும் குறிப்பிடுகிறார்.[3]

இந்நடவடிக்கையைச் சட்டப்பூர்வமாக்க வேண்டி, பஞ்சாப் மற்றும் சண்டிகர் மாநிலங்களை 'கலவரப் பகுதிகள்' என இந்திய அரசு பஞ்சாப் மற்றும் சண்டிகர் கலவரப் பகுதிச் சட்டம் 1983 ஐ இயற்றி அறிவித்தது.[4] அதோடு இராணுவப் படை (பஞ்சாப் மற்றும் சண்டிகர்) சட்டம் 1983 இயற்றியதன்மூலம் இராணுவத்திற்குப் பொதுமக்கள் எவரையும் காவலில் எடுக்கவும் கைது செய்யவும் வகை செய்யும் அதிகாரத்தை வழங்கியது.[5] இச்சட்டம் பணி ஆணை பெற்ற, பெறாத மற்றும் பிடியாணை பெற்ற அனைத்து அதிகாரிகளுக்கும், "பொது ஒழுங்கைக் காக்கும் பொருட்டு போதுமானதாகத் தான் கருதியவளவு எச்சரித்தப் பின்பு உயிர்ச்சேதம் விளைவிக்கும் அளவிற்குச் சுடவோ, வேறு எந்த வன்மையான முறையினைக் கையாளவோ" அதிகாரம் வழங்கியது. மேற்கூறிய அதிகாரிகள் "பிடியியல் குற்றம் புரிந்தவரையோ அல்லது அத்தகைய குற்றம் புரிந்திருக்கக் கூடும் என்பதற்கான நியாயமான சந்தேகத்திற்கு உள்ளானவரையோ பிடியாணை இன்றி கைது செய்யலாம்" என்றும் இச்சட்டம் அனுமதித்தது.

தீவிரவாதிகளென சந்தேகிக்கப்படுவோரை விசாரித்து தண்டனை வழங்க, தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் (சிறப்பு நீதிமன்றங்கள்) சட்டம் 1984 இன்[6] கீழ் விரைவு நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன.[7]

பஞ்சாப் காவல்துறை தலைவரான கே.பி.எஸ்.கில் இச்செயல்பாடுகள் "உள்நாட்டுக் கலவரத்தில் இராணுவத்தின் தலையீட்டால் நேரும் பழம் குறைகளால் பாதிக்கப்பட்டுள்ளன" என்றும் இந்திய இராணுவம் "குருட்டுத்தனமாக" நடந்து கொண்டதாகவும் கூறினார்.[8]

ஆட்கள் மற்றும் ஆயுதக் கடத்தல்களைத் தடுக்கும் பொருட்டு பாக்கித்தான் எல்லையை அடைக்கும் பொறுப்பில் நியமிக்கப்பட்ட படைத்தலைவர் ஜம்வால், பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் தீவிரவாதிகளை ஒடுக்குமாறு உத்தரவு பெற்ற படைத்தலைவர் ஆர்.எஸ். தயால் ஆகியோரது மேற்பார்வையில் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.[9]

சான்றாதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வுட்ரோஸ்_நடவடிக்கை&oldid=2764754" இலிருந்து மீள்விக்கப்பட்டது