அடையாள அணிவகுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு அடையாள அணிவகுப்பு

அடையாள அணிவகுப்பு (Identity parade) என்பது கொலை, கொள்ளை, பலாத்காரம் உள்ளிட்ட கொடிய குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்காக காவல்துறையால் செய்யப்படும் நடைமுறை ஆகும். கைது செய்யப்பட்டிருப்பவர் உண்மையிலேயே அந்த நிகழ்வில் ஈடுபட்டார் என்பதை சாட்சிகள் அல்லது பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டு உறுதிசெய்யவும், உண்மையான குற்றவாளிகளைத்தான் கைது செய்திருக்கிறோம் என்பதை புலன் விசாரணை அதிகாரி உறுதிப்படுத்திக் கொள்ளவும் அடையாள அணிவகுப்பு செய்யப்படுகிறது. அடையாள அணிவகுப்பு மட்டுமே ஒருவரை குற்றவாளியாக உறுதிசெய்துவிட போதுமானதாக ஆகாது என்றாலும் வழக்கு விசாரணையில் இது முதன்மையான சாட்சியமாக எடுத்துக் கொள்ளப்படும்.

அடையாள அணிவகுப்பு நடைமுறை

ஒரு கொடுஞ் செயல் நிகழும்போது, அதனால் பாதிக்கப்பட்டவர்களும், அதை நேரில் பார்த்தவர்களும் குற்றவாளியை அடையாளம் காட்ட முடியும் என காவல்துறை விசாரணை அதிகாரி கருதினால், அடையாள அணிவகுப்பு நடத்துவதற்கான கோரிக்கையை தலைமை குற்றவியல் நீதிபதிக்கு (சிஜேஎம்) மனுவாக கொடுப்பார்.[1] குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதும் தாமதமின்றி அடையாள அணிவகுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதால், இந்த கோரிக்கை மனுவை உரிய காலத்துக்குள் தாக்கல் செய்வார்கள்.

அடையாள அணிவகுப்பு கோரி அதிகாரியால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை குற்றவியல் நீதிபதி ஆய்வுசெய்து, வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்றத்தைத் தவிர்த்து வேறொரு நீதிமன்றத்தின் நீதிபதிக்கு அடையாள அணிவகுப்பு நடத்த ஆணை பிறப்பிப்பார். அவர், சிறையில் அடையாள அணிவகுப்பு நடத்த ஏற்பாடு செய்யுமாறு சிறைக் கண்காணிப்பாளருக்கு தகவல் அனுப்புவார். அடையாள அணிவகுப்புக்கு வரவேண்டும் என சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு அழைப்பாணை அனுப்பப்படும்.

சிறைக்கண்காணிப்பாளர் குறிப்பிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவரை போலவே உடல்வாகு கொண்ட கைதிகளாக குறைந்தது எட்டு பேரை தேர்வு செய்வார். ஒரே சாயல் கொண்ட கைதிகள் தேவை என்பதால் பெரும்பாலும் மத்திய சிறைகளில்தான் அடையாள அணிவகுப்பு நடத்தப்படும். சிறையில் நீதிபதி முன்னிலையில் அணிவகுப்பு நடக்கும்போது, அவர் முன்னிலையில் குறிப்பிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நபரும் அவரது சாயல் கொண்ட வேறு எட்டு கைதிகளும் என அனைவரும் வரிசையாக நிறுத்தப்படுவார்கள்.[2] சாட்சி வரிசையில் நிற்பவர்களைப் பார்த்து, வழக்கில் சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளியை கையால் தொட்டு அடையாளம் காட்டலாம் அல்லது, வரிசையில் இத்தனையாவது நபராக நிற்பவர் என்று நேருக்கு நேர் நின்று கை நீட்டி நீதிபதியிடம் காட்டவேண்டும். சாட்சி விரும்பினால் தன் முகத்தை மறைத்துக் கொள்ளலாம். சாட்சி அடையாளம் காட்டிய பிறகு, கைதிகள் அனைவரையும் அழைத்துச் சென்று வேறு உடைகளை மாற்றி மீண்டும் அழைத்துவந்து இடம் மாற்றி நிற்கவைத்து, மீண்டும் சாட்சி குற்றவாளியை அடையாளம் காட்ட வேண்டும். இவ்வாறு மொத்தம் மூன்று முறை அணிவகுப்பு நடத்தப்பட்டு, மூன்று முறையும் அடையாளம் காட்ட வேண்டும்.

ஒன்றுக்கு மேற்பட்ட சாட்சிகள் இருந்தால் அவர்களுக்கும் இதேபோல தனித்தனியாக அணிவகுப்பு நடத்தப்படும். ஒருவர் அடையாளம் காட்டுவதை மற்ற சாட்சிகள் பார்க்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். அணிவகுப்பு முடியும்வரை ஒரு சாட்சி மற்ற சாட்சியிடம் கலந்து பேசவும் முடியாது. ஒரு வழக்கில் மூன்று சாட்சிகள் இருந்து அதில் ஒரு சாட்சி குழப்பமான முடிவை தெரிவித்து, மற்ற இரண்டு சாட்சிகளும் ஒரே நபரையே குற்றவாளியாக அடையாளம் காட்டினால், அதுவே சாட்சியமாக எடுத்துக்கொள்ளப்படும். இரண்டு பேர் குழப்பமான முடிவை தெரிவித்தால், விசாரணையின்போது அவர்கள் அளிக்கும் வாக்குமூலத்தைப் பொருத்து சாட்சியம் எடுத்துக்கொள்ளப்படும். அடையாள அணிவகுப்பு முடிந்ததும், இந்த அடையாள அணி வகுப்பு தன் முன்னிலையில் சுதந்திரமாக நடத் தப்பட்டது. சாட்சிகள் தாங்களாகவே வந்து சாட்சியம் அளித்தனர் என நீதிபதியால் சான்றளிக்கப்படும். நீதிபதி சான்றளித்த நகலை குற்றப்பத்திரிகையுடன் இணைப்பர்.

அணிவகுப்பின்போது, சம்பந்தப்பட்ட கைதி ஏதாவது கருத்து தெரிவித்தால் அதையும் நீதிபதி பதிவுசெய்வார். பின்னர் இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வரும்போது அடையாள அணிவகுப்பின்போது இருந்த நீதிபதியும் சாட்சியமாக விசாரிக்கப்படுவார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "சுவாதி கொலை வழக்கு: கொலையாளியை அடையாளம் காண புழல் சிறையில் அணிவகுப்பு". ஒன் இந்தியா. 21 சூலை 2013. பார்க்கப்பட்ட நாள் 13 சூலை 2016.
  2. "புழல் சிறையில் அடையாள அணிவகுப்பு: சுவாதியின் தந்தையும், கடைக்காரரும் குற்றவாளியை அடையாளம் காட்டினர்". தி இந்து தமிழ். 13 சூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 13 சூலை 2016.
  3. குள.சண்முகசுந்தரம் (13 சூலை 2016). "முக்கிய குற்ற வழக்குகளில் அடையாள அணிவகுப்பு நடத்துவது ஏன், எப்படி?". தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 13 சூலை 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடையாள_அணிவகுப்பு&oldid=3729658" இலிருந்து மீள்விக்கப்பட்டது