பஞ்சாப் கிளர்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பஞ்சாப் கிளர்ச்சி (Punjab insurgency) இந்திய மாநிலமான பஞ்சாபில் 1970களின் இறுதியில் தொடங்கிய கிளர்ச்சியாகும்; காலிஸ்தான் கோரிக்கையாளர்கள் உள்ளிட்ட சில சீக்கியர்கள் கிளர்ந்தெழுந்தனர். இந்தக் கிளர்ச்சிக்கான அடிப்படைக் காரணங்கள் மிகவும் சிக்கலானவை. முதன்மைக் காரணங்களாக சீக்கியத்திற்கும் பஞ்சாபி மொழிக்கும் போதிய அங்கீகாரம் வழங்காததும் 1947இலிருந்து ஆட்சியிலிருந்த இந்தியக் காங்கிரசு அரசின் அக்கறையின்மையும் ஆகும். பஞ்சாபின் அனைத்துப் பள்ளிகளும் பஞ்சாபி மாணவர்களுக்கு இந்தி கற்பித்ததால் பெற்றோர்களும் சமூகத் தலைவர்களும் கவலையுற்றனர்.[1]

மொழிப் பிரச்சினைக்குத் தீர்வுகாணவும் பஞ்சாபின் அலுவல்மொழியாக பஞ்சாபியை மீளமைக்கவும் பஞ்சாப் தனிமாநில இயக்கம் துவங்கப்பட்டது; பஞ்சாப் தனிமாநில இயக்கத்தை ஏப்ரல் 14, 1955 அன்று அரசு தடை செய்தது.[2] இந்தக் காலகட்டத்தில் சீக்கியர்கள் பெரும் கேலிகளுக்கும் துன்பங்களுக்கும் ஆளாயினர்; அமைதிவழியில் போராடியவர்களும் அப்பாவி சமயப் பயணிகளும் தடிகளாலும் கற்களாலும் அடிக்கப்பட்டனர்; பலர் கைதாயினர், கோயில்களில் தேடுதல் வேட்டை நடந்தது.[3] 1965ஆம் ஆண்டு இந்திய-பாக்கித்தான் போருக்குப் பின்னர் 1966இல் பஞ்சாபி மொழி இறுதியாக அலுவல்மொழியாக அங்கீகரிக்கப்பட்டது; கிழக்குப் பஞ்சாப் இமாச்சலப் பிரதேசம், புதிய மாநிலமான அரியானா மற்றும் தற்போதைய பஞ்சாபாகப் பிரிக்கப்பட்டது.[4]

இருப்பினும் இது அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணவில்லை; சீக்கிய சமூகத்தினர் இந்தியாவிலிருந்து விலகியே இருப்பதாக உணர்ந்தனர். தங்கள் அனைத்துக் கோரிக்கைகளையும் இந்திய அரசுக்கு தெரிவித்தனர்; 1973இல் சீக்கியர்கள் அனந்த்பூர் சாகிப் தீர்வை முன்வைத்தனர்.[5] இந்தத் தீர்மானத்தில் சமய பிரச்சினைகளும் அரசியல் பிரச்சினைகளும் அடையாளப்படுத்தப்பட்டிருந்தன. சீக்கியத்தை அங்கீகரிப்பதிலிருந்து இந்திய ஒன்றியத்தின் அனைத்து மாநிலங்களும் நடுவண் அரசின் அனுமதியை எதிர்நோக்காது மாநில அளவிலான கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தை வழங்குவது வரை இதில் முன்மொழியப்பட்டிருந்தது. அனந்த்பூர் தீர்மானத்தை அரசு நிராகரித்தது; இதனால் சமயத் தலைவர் ஜர்னையில் சிங் பிந்தரன்வாலா அகாலி தளத்துடன் இணைந்து 1982இல் காலிஸ்தான் இயக்கத்தை தொடங்கினர்; அனந்த்பூர் தீர்மானத்தை நிறைவேற்றுமாறு அமைதிப் பேரணிப் போராட்டம் நடத்தினர்.ஆயிரக்கணக்கான மக்கள் இந்த இயக்கத்தில் இணைந்தனர். இந்த் தீர்மானம் ஏற்கப்பட்டால் நீர்ப்பாசனத்திற்கு கூடுதல் நீர் கிடைக்கும் என்றும் சண்டிகர் பஞ்சாபிற்கு மீளவும் தரப்படும் என்றும் இவர்கள் நம்பினர்.[6] காங்கிரசு அரசு இத்திரள் போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்க முயன்றது; காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.[7] இரண்டரை மாத காலத்தில் பாதுகாப்புப் படையினர் 30,000க்கும் கூடுதலான சீக்கியர்களை கைது செய்தனர்.[8] இதன்பிறகு பிந்த்ரன்வாலா ஆயுதப் புரட்சியே பெரும்பான்மை பஞ்சாபி மக்களுக்கு தீர்வைத் தரும் என்றது கிளர்ச்சி மூளக் காரணமாயிற்று.

சூன் 6, 1984 அன்று புளூஸ்டார் நடவடிக்கையின்போது பிந்த்ரன்வாலா சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு எதிர்வினையாக அக்டோபர் 31, 1984இல் இந்திரா காந்தி அவரது மெய்காவலர்களாலேயே சுடப்பட்டு இறந்தார். இந்த இரு நிகழ்வுகளும் 1990கள் வரை பஞ்சாபில் நிலவிய சீக்கிய மற்றும் சீக்கியரெதிர் வன்முறைகளுக்கு பெரும் காரணங்களாக அமைந்தன.[9]

மேற்சான்றுகள்[தொகு]

  1. Ray, Jayanta (2007). Aspects of India's International Relations, 1700 to 2000: South Asia and the World. India: Pearson Education India. பக். 507. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788131708347. 
  2. Sarhadi, Ajit (1970). Punjabi Suba. U. C. Kapur. பக். 246. 
  3. Sarhadi, Ajit (1970). Punjabi Suba (The Story of The Struggle). Delhi: U. C. Kapur & Sons. பக். 248. 
  4. Singh, Atamjit. "The Language Divide in Punjab". South Asian Graduate Research Journal, Volume 4, No. 1, Spring 1997. Apna. பார்க்கப்பட்ட நாள் 4 April 2013.
  5. Singh, Khushwant. "The Anandpur Sahib Resolution and Other Akali Demands". oxfordscholarship.com/. Oxford University Press. பார்க்கப்பட்ட நாள் 5 April 2013.
  6. Akshayakumar Ramanlal Desai (1 January 1991). Expanding Governmental Lawlessness and Organized Struggles. Popular Prakashan. பக். 64–66. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7154-529-2. https://archive.org/details/nlsiu.342.085.des.5551. 
  7. Akshayakumar Ramanlal Desai (1 January 1991). Expanding Governmental Lawlessness and Organized Struggles. Popular Prakashan. pp. 64–66. ISBN 978-81-7154-529-2.
  8. Harnik Deol (2000). Religion and nationalism in India: the case of the Punjab. Routledge. pp. 102–106. ISBN 978-0-415-20108-7.
  9. Documentation, Information and Research Branch, Immigration and Refugee Board, DIRB-IRB. India: Information from four specialists on the Punjab, Response to Information Request #IND26376.EX, 17 February 1997 (Ottawa, Canada).
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சாப்_கிளர்ச்சி&oldid=3848739" இலிருந்து மீள்விக்கப்பட்டது