சிக்டன் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிக்டன் கோட்டை (Chiktan Fort) என்பது இந்தியாவின் கார்கில் மாவட்டத்தில் இருக்கும் சிக்டன் என்ற கிராமத்தில் உள்ள ஒரு கோட்டையாகும். இக்கோட்டை சிக்டன் கார் என்றும் அழைக்கப்படுகிறது[1].

16-ம் நூற்றாண்டில் பால்டி இனக்குழு கைவினைஞர்களால் சிக்டன் கோட்டை கட்டப்பட்டுள்ளது. ஆட்சியாளர்கள் பலர் மாறினாலும், இக்கோட்டை பகுதி அண்டை அரசாட்சிகளுடன் ஒன்று சேர்க்கப்பட்டு, பல நூற்றாண்டுகளாக ஒர் அரச குடியிருப்பாகவே இருந்துள்ளது. புறக்கணிப்பு மற்றும் இயற்கை சக்திகள் பாதிப்பால் இன்று இடிந்தநிலையில் ஒரு பாழடைந்த கோட்டையாகக் காணப்படுகிறது.

சிந்து நதிக்கு அருகில், பின்னணியில் மலைகளுடன் ஒரு பள்ளத்தாக்கின் உட்புறத்தில் சிக்டன் கோட்டை அமைந்துள்ளது. திமித்தமண் மற்றும் சேற்றுக்கலவையுடன் கூடிய கல்கொத்துவேலைப்பாடால் இக்கோட்டை கட்டப்பட்டுள்ளது. சிங்கென் சந்தன் வடிவமைப்பில் கட்டிடம் மற்றும் தச்சு வேலைகள் மேற்கொள்ளப்பட்டு கூரைப்பகுதியை தாங்கவும், கோட்டைக்கதவு மற்றும் சன்னல்களுக்கும் மரக்கட்டைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தாக்குதல்கள் எதிர்கொள்ளத் தயாராகவும், இப்பகுதி மக்களின் வலிமை, சகோதரத்துவம், சமூகம் மற்றும் ஒற்றுமை ஆகியனவற்றுக்கு அடையாளமாகவும் சிக்டன் கோட்டை இருந்தது. வரலாற்றில் இக்கோட்டை பல முறை தாக்கப்பட்டாலும் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை கைவிடப்படவில்லை. தற்பொழுது, புறக்கணிப்பு மற்றும் இயற்கை கூறுகள் காரணமாக வெளிப்புற சுவர்களின் பெரும்பகுதி சிதைந்து கிடக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் மையப்பகுதியில், உள்ளூர் அரசு மருத்துவமனைக்காக இங்கிருந்து கல் எடுக்கப்பட்டதும் இச்சிதைவிற்கு ஒரு காரணமாகும்.

சிக்டன் கோட்டை குறிப்பிடத்தக்க ஒரு தலைநகரம், அரசியல் மையம் மற்றும் வலிமையான ஓர் இராணுவத்தளமாக இருந்துள்ளது. வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் முக்கிய அடையாளமாக இன்றும் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்டன்_கோட்டை&oldid=2974194" இலிருந்து மீள்விக்கப்பட்டது