புற்றுப்பாறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிகவும் பொதுவான ஆறு குகைக்கனிமப் படிவுகளின் அடையாளங்களை படம் காட்டுகிறது. பெரிதாக்கி பெயர்களைப் பார்வையிடவும்
நியூ மெக்சிகோவிலுள்ள காரல்சுபாத் நிலத்தடிகுகையிலுள்ள சூனியக்காரியின் விரல்

புற்றுப்பாறை (Stalagmite) என்பது குகையின் தரைப்பரப்பில் நிகழும் ஒருவகையான பாறை உருவாக்க முறையாகும். குகையின் கூரைப்பகுதியிலிருந்து தரையில் விழுதுகளாகச் சொட்டும் பொருட்கள் தரையிலிருந்து படிப்படியாக வளர்வது புற்றுப்பாறை படிவு முறையாகும்[1]. வெளிர்மஞ்சள் நிற பிசின், எரிமலைக்குழம்பு, கனிமங்கள், களிமண், தூள்கரி, பிசின்கள், மணல் மற்றும் மெல்லுருகற்சேர்க்கை ஆகியனவற்றால் உருவாகலாம்[2][3] . இவ்வகை உருவாக்கத்துடன் இயைந்து குகையின் கூரையில் இருந்து பாறை செங்குத்தாக கீழ்நோக்கி வளருவது விழுதுப் பாறை உருவாக்க முறைஎனப்படுகிறது. இம்முறைகளை நினைவிற் கொள்ள எளிமையாக சில நினைவுக் குறிப்புகள் உருவாகியுள்ளன. கரையான் புற்றைப் போல தரையிலிருந்து மேல்நோக்கி வளர்வது புற்றுப் பாறை மு்றை என்றும் விழுதைப் போல் மேலிருந்து கீழிறங்குவதால் விழுதுப்பாறை முறை எனவும் அழைக்கப்படுவதாகக் கொள்ளலாம்.

உருவாக்கம் மற்றும் வகைகள்[தொகு]

சுண்ணாம்புக்கல் புற்றுப்பாறைகள்[தொகு]

குகைக்கனிமப் படிவுகள், மிகப்பொதுவான புற்றுப்பாறை வகையாகும். வழக்கமாக இவை சுண்ணாம்புக் கல்லாலான குகைகளில் உருவாகின்றன[4]. நிலத்தடியில் உள்ள அடிநிலைக்குகைகளில் அமில-கார நிலை எண் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இவ்வகைப் பாறைகளின் தோற்றம் நிகழ்கிறது. கால்சியம் கார்பனேட்டு மற்றும் கனிம நீர் கரைசல்களில் இருந்து வீழ்படிவாகின்ற இதர கனிமங்கள் படிவதால் புற்றுப்பாறைகள் தோன்றுகின்றன. கால்சியம் கார்பனேட் பாறையின் முதன்மையான வடிவம் சுண்ணாம்புக்கல் ஆகும். கால்சியம் ஈராக்சைடைக் கொண்டுள்ள இது தண்ணீரால் கரைக்கப்பட்டு அடிநிலைக் குகைகளில் கால்சியம் பைகார்பனேட்டு கரைசலாக உருவாகிறது[5]

அந்தமானில் உள்ள பரட்டாங்கு தீவு அருகே இது போன்ற சுண்ணாம்புக்கல் புற்றுப்பாறை குகை உள்ளது. அந்தமான் தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் இதனைக் கண்டு களிக்கிறார்கள் [6]

எரிமலைக்குழம்பு புற்றுப்பாறைகள்[தொகு]

உயிர்துடிப்புடன் கூடிய எரிமலைக்குழம்பு குழாய்களின் உட்புறத்தில் இவ்வகை புற்றுப்பாறைகள் உருவாகின்றன. சுண்ணாம்புக்கல் புற்றுப்பாறைகள் தோன்றும் வழிமுறையிலேயே இவ்வகைப் பாறைகளும் உருவாகின்றன. குகையின் தரையில் கனிமங்களின் படிவு நிகழ்வது இவ்வுருவாக்கத்திற்கு இன்றியமையாததாகும். இருப்பினும் எரிமலைக்குழம்பு புற்றுப்பாறைகள் மிக விரைவாக சிலமணி நேரங்களில், நாட்களில், வாரங்களில் உருவாகி விடுகின்றன, ஆனால் சுண்ணாம்புக்கல் புற்றுப்பாறைகள் உருவாக ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பிடிக்கின்றன.

எரிமலைக்குழம்பின் பாய்வு தடைப்பட்டால் எரிமலைக்குழம்பு புற்றுப்பாறைகளின் வளர்ச்சியும் தடைபடும்[2]. அதாவது ஒருமுறை இவ்வளர்ச்சி துண்டிக்கப்பட்டால் மீண்டும் இவ்வளர்ச்சி எப்போதும் இருக்காது. எரிமலைக்குழம்பு குழாய்களில் விழுதுப்பாறைகளை விட புற்றுப்பாறைகளின் தோற்றம் மிகவும் அரிதாகும். ஏனெனில், பாறை உருவாக்கத்தின் போது விழுகின்ற பொருட்கள் நகரும் எரிமலைக்குழம்புத் தரையில் வீழ்வதால் அவை ஈர்க்கப்படுகின்றன அல்லது வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன.

எரிமலைக்குழம்பு விழுதுப்பாறைகள் மற்றும் எரிமலைக்குழம்பு புற்றுப்பாறைகள் இரண்டுக்கும் பாகுபாடில்லாமல் எரிமலைக்குழம்புத்திவலை என்ற பொதுப்பெயர் பயன்படுத்தப்படுகிறது, பனித்திவலை என்ற சொல்லில் இருந்து எரிமலைக்குழம்புத்திவலை என்ற சொல் பிறக்கிறது[2].

பனிக்கட்டிப் புற்றுப்பாறை[தொகு]

பருவகாலங்களில் அல்லது ஆண்டு முழுவதும் பலகுகைகளில் பொதுவாக, பனிக்கட்டி புற்றுப்பாறைகள் காணப்படுகின்றன. குறிப்பாக தரைக்கு மேலேயுள்ள குகைச் சூழலில், இவை பனித்திவலைப் படிவுகள் என்று பொதுப்பெயரால் அழைக்கப்படுகின்றன[7].

மேற்பரப்பில் இருந்து குகைக்குள் ஊடுருவும் நீர்க்கசிவானது, குகையின் வெப்பநிலை உறைநிலைக்கு கீழே இருக்குமானால் தரையில் சேகரமாகி புற்றுப்பாறையாக உருவாகிறது. இதைத்தவிர சூழலில் இருந்து நீராவி நேரடியாகப் படிவதாலும் இவ்வுருவாக்கம் நிகழ்கிறது[8]. எரிமலைக்குழம்பு புற்றுப்பாறைகள் போலவே பனிக்கட்டி புற்றுப்பாறைகளும் மிக விரைவாக சிலமணி நேரங்களில், நாட்களில், வாரங்களில் உருவாகி விடுகின்றன. ஆனால் அவற்றைப்போல வளர்ச்சி தடைப்பட்டால் இவற்றின் வளர்ச்சி தடைபடுவதில்லை. மாறாக, வெப்பநிலையும் தண்ணீரும் உகந்த சூழ்நிலையில் இருந்தால், மீண்டும் பனிக்கட்டிப் புற்றுப்பாறையாக உருவாகின்றன. பனிக்கட்டி விழுதுப் பாறைகளைவிட பனிக்கட்டி புற்றுப் பாறைகள் பரவலாக காணப்படுகின்றன. ஏனெனில் சூடான காற்று குகையின் கூரைப்பகுதிக்கு நகர்வதால் உறைநிலையைவிட அங்கு வெப்பநிலை உயர்ந்து விடுகிறது.

படக்காட்சிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. σταλαγμίας, Henry George Liddell, Robert Scott, A Greek-English Lexicon, on Perseus.
  2. 2.0 2.1 2.2 Larson, Charles (1993). An Illustrated Glossary of Lava Tube Features, Bulletin 87, Western Speleological Survey. பக். 56. 
  3. Hicks, Forrest L. (1950). Formation and mineralogy of stalactites and stalagmites. 12. பக். 63–72. http://www.karstportal.org/FileStorage/NSS_news/1950-v012-001.pdf. பார்த்த நாள்: 2013-07-08. 
  4. {{cite web|url=http://www.pbs.org/wgbh/nova/earth/how-caves-form.html%7Cwork=[[Nova (TV series)|Nova|publisher=PBS|title=How Caves Form|accessdate=2013-07-01}}
  5. C. Michael Hogan. 2010. “Calcium”. eds. A. Jorgensen, C. Cleveland. Encyclopedia of Earth. National Council for Science and the Environment.
  6. Geomorphologists’ Delight: Limestone caves in Baratang
  7. Keiffer, Susan (2010). "Ice stalactite dynamics". பார்க்கப்பட்ட நாள் 2013-07-08.
  8. Lacelle, Denis (2009). "Formation of seasonal ice bodies and associated cryogenic carbonates in Caverne de l'Ours, Québec, Canada: Kinetic isotope effects and pseudo-biogenic crystal structures" (PDF). Journal of Cave and Karst Studies. pp. 48–62. பார்க்கப்பட்ட நாள் 2013-07-08.

புற இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Stalagmites
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புற்றுப்பாறை&oldid=3222000" இலிருந்து மீள்விக்கப்பட்டது