யூலியெத்தா லாந்தேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூலியெத்தா லாந்தேரி
பிறப்புமார்ச் 22, 1873
லா பிரிகெ, இத்தாலி இராச்சியம்
இறப்புபெப்ரவரி 25, 1932(1932-02-25) (அகவை 58)
புவெனஸ் ஐரிஸ், அர்கெந்தீனா
படித்த கல்வி நிறுவனங்கள்புவனெசு ஐரிசு பல்கலைக்கழகம்
வாழ்க்கைத்
துணை
ஆல்பெர்ட்டோ ரென்ஷா

யூலியெத்தா லாந்தேரி (Julieta Lanteri), (மார்ச் 22, 1873 — பெப்ரவரி 25, 1932) இத்தாலிய அர்கெந்தீன மருத்துவர், முன்னணி கட்டற்ற சிந்தனையாளர், அர்கெந்தீன மகளிர் உரிமை மற்றும் சமூக சீர்திருத்த செயற்பாட்டாளர் ஆவார்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

ஜூலி மாடெலின் லாந்தேரி அப்போதைய இத்தாலியின் கூனியோ மாகாணத்தில் பிரிகா மரித்தமா என்னும் (தற்போது லா பிரிகெ, பிரான்சு) சிற்றூரில் பிறந்தார்.[1] அவரது பெற்றோர், மாட்டெயா கைடொவும் பியர்ரி-அன்டாயின் லாந்தேரியும் தங்கள் இரு மகள்களுடன் 1879இல் அர்கெந்தீனாவிற்கு குடி பெயர்ந்தனர். யூலியெத்தா புவனெசு ஐரிசிலும் லா பிளாடாவிலும் வளர்ந்தார்.[1][2]

1898 ஆம் ஆண்டு புவனெசு ஐரிசு பல்கலைக்கழகத்தில் மருந்தியல் பட்டம் பெற்றார்.[1] பின்னர் பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறையில் தொடர விண்ணப்பித்தார். ஆனால் இவரது சேர்க்கைக்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது; பொதுவான பெண்கள் வேலைக்கு செல்வதற்கு எதிராகவும் குறிப்பாக பிணங்களை வைத்து பெண்கள் பரிசோதனைகளில் ஈடுபடுவதற்கு எதிராகவும் குரல் எழுப்பினர். ஆனால் மருத்துத்துறை தலைவர் லோயோபோல்டொ மோன்டெசு டெ ஓகாவின் பரிந்துரையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இத்தகைய நிகழ்வுகளால் லாந்தேரியும் அர்கெந்தீனாவில் முதன்முதலில் மருத்துவப் பட்டம் பெற்ற செசிலியா கிரீர்சன் என்ற மருத்துவரும் இணைந்து 1904 ஆம் ஆண்டு அசோசியேசன் டெ யுனிவெர்சிடரியசு அர்ஜென்டினாசு (அர்கெந்தீனப் பல்கலைக்கழக சங்கம்) என்ற முதல் பெண்களுக்கான மாணவர் சங்கத்தை நிறுவினர். சான் ரோக் மருத்துவமனையில் மகளிர் பிரிவில் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றிய பின்னர் [3] 1907 ஆம் ஆண்டு அர்கெந்தீனாவின் ஐந்தாவது பெண்ணாக மருத்துவப் பட்டம் பெற்றார்; இவர் முதல் மருத்துவப் பட்டம் பெற்ற இத்தாலிய அர்கெந்தீனப் பெண்ணாவார் .[2]

புவனெசு ஐரிசு பொதுமக்கள் உதவி மையத்திலும் அவசரக்கால மருத்துவமனை மற்றும் மருந்தகத்தில் லாந்தேரி பத்தாண்டுகள் பணி புரிந்தார்.[4] வறியவர்களுக்கு மருத்துவ வசதிகளுக்கான அணுக்கம் பெற அப்போதிலிருந்தே போராடினார்; இதற்காக செமனா மெடிகா என்ற பருவ ஏட்டைத் துவக்கினார்.[2] 1905இல் அர்கெந்தீன கட்டற்ற சிந்தனை சங்கத்தை நிறுவினார். பெண்களின் உரிமைகள் குறித்த செயல்பாடுகளில் துடிப்புடன் விளங்கினார்; கிரீர்சன், அலிசியா மோரோ டெ ஜஸ்டோ போன்றோருடன் இணைந்து 1906இல் பெண்ணியத்திற்கான மையம் நிறுவப்படக் காரணமாகவிருந்தார்.[5]

தேசிய பெண் கட்டற்ற சிந்தனையாளர் கூட்டிணைவை நிறுவி அதன் இதழ் லா நுவா முகெர் வெளியிடத் தொடங்கினார். 1910ஆம் ஆண்டில் முதல் பன்னாட்டு மகளிர் பேராயம் நிகழ்த்திட வேண்டிய ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தார். பின்னதாக தேசிய சிறார்நல பேராயம் நடந்திடவும் ஒருங்கிணைத்தார்.[4] தான் படித்த கல்லூரியின் மருத்துவத் துறையில் ஆசிரியப்பணிக்கு விண்ணப்பித்தபோது வெளிநாட்டினர் என்ற காரணத்தால் மறுக்கப்பட்டதால் அர்கெந்தீன குடியுரிமைக்கு விண்ணப்பித்தார். திருமணமாகாத புலம்பெயர் பெண்களுக்கு பொதுவாக அர்கெந்தீனக் குடியுரிமை வழங்கப்படுவதில்லை. 1910இல் மருத்துவர் ஆல்பெர்டோ ரென்ஷாவை மணந்து, எட்டு மாத நீதிமன்ற வழக்குக்குப் பிறகு 1911இல் இவருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது. இந்தத் திருமணமும் சர்ச்சைக்குள்ளானது; மணப்பெண்ணை விட மணமகன் 14 ஆண்டுகள் அகவை குறைந்தவராக இருந்தார். இதே காரணத்தால் அதே கல்லூரியில் அவருக்கு உளவியல் மருத்துவப்படிப்பு படிக்க அனுமதி மறுக்கப்பட்டது.[6]

அர்கெந்தீன சட்டத்தில் பெண்கள் வாக்குரிமை குறித்து விரிவாக தெரிந்திருந்ததனால் புவனெசு ஐரிசு நகர மன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு அலுவரிடம் போராடி சூலை 16, 1911இல் தமது வாக்கை பதிவு செய்தார்; இதன்மூலம் தென் அமெரிக்காவிலேயே வாக்களித்த முதல் பெண்மணி என்ற பெருமை பெற்றார்.[6] (இருப்பினும் அர்கெந்தீனாவில் பெண்களுக்கு வாக்குரிமை 1947 வரை வழங்கப்படவில்லை.[7]) இச்சம்பவத்தால் இராணுவப் பணி புரிந்தோருக்கு மட்டுமே வாக்குரிமை என அந்தாண்டு சட்டம் திருத்தப்பட்டு (அர்கெந்தீனாவில் இராணுவப்பணி அனைத்து ஆண்களுக்கும் கட்டாயமானது) பெண்களுக்கு வாக்குரிமை மீண்டும் மறுக்கப்பட்டது. லாந்தேரி தனது வழக்கறிஞர் அஞ்செலிகா பரேடாவுடன் இணைந்து தேசிய பெண்ணிய சங்கம் என்ற அரசியல் கட்சியை நிறுவினார். 1918இல் அர்கெந்தீன மக்களவைக்கு போட்டியிட்டார்; தொடர்ந்து 1930 இராணுவப் புரட்சி வரை அடுத்தடுத்த தேர்தல்களில் போட்டியிட்டார்.[2]

அவரது அரசியல் இயக்கம் பொது வாக்குரிமை, அர்கெந்தீன குடியியல் சட்டத்தில் பாலினச் சமநிலை, மற்றும் பல்வேறு முற்போக்கான சமூக சீர்திருத்தச்சட்டங்களுக்குப் போராடியது; வேலைநேர கட்டுப்பாடு, சமவூதியம், ஓய்வூதியம், பேறுகால விடுப்பு, பெண்கள் , குழந்தைத் தொழிலாளர் நலம், பெண்களுக்கு தொழில்முறை பயிற்சி, திருமண முறிவை சட்டபூர்வமாக்குதல்; இளம் குற்றவாளிக்கு சிறப்புக் கவனிப்பு; சிறைச்சாலை சீர்திருத்தங்கள்; மரணதண்டனை ஒழிப்பு; பொது நலத்திற்கும் கின்டர்கார்ட்டின் பள்ளிகளுக்கும் கூடுதல் முதலீடு; தொஒழிற்சாலைகளில் பணிப்பாதுகாப்பு சட்டங்கள்; மதுவிலக்கு, தொற்றுநோய்களுக்கு முன்தடுப்பு மருந்துகள், விலைமாதர் விடுதிகள் ஒழிப்பு என பல்வேறு முற்போக்கு சீர்திருத்தங்களை முன்வைத்தார்.[4] இருப்பினும் ஒவ்வொரு தேர்தலிலும் 1,000 முதல் 1,730 வாக்குகளே பெற்று வந்தார்;[7] இவருக்கு ஆதரவாக இருந்தவர்களில் தேசிய எழுத்தாளர் ஆனுவல் கால்வேசு முதன்மையானவராவார்.[6]

மரு. லாந்தேரி அர்கெந்தீன மருத்துவக் கழகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] அவர் தொடர்ந்து மருத்துவ சேவை புரிந்து வந்தார்.[1] சேனெசு பெனா என்ற புவனெசு ஐரிசின் புறநகரில் துவக்கப்பள்ளியைத் தொடங்கினார். ஐரோப்பாவில் விரிவாக பயணித்து விரிவுரைகள் ஆற்றினார்.[3] 1928இல் முடி மீட்பு தைலம் தயாரிப்பில் இறங்கினார்.[2] வாக்களிக்க படைத்துறையில் பணி புரிந்திருக்க வேண்டும் என்ற சட்டத்தால் பெண்கள் வாக்குரிமை போராட்டத்தின் அங்கமாக 1929இல் படைத்துறையில் பணிபுரிய விண்ணப்பித்தார். இந்த வழக்கு அர்கெந்தீனா உச்ச நீதிமன்றம் வரை சென்றது. அங்கு இவரது முயற்சி தோல்வியடைந்தது.[2]

லாந்தேரி பெப்ரவரி 23, 1932இல் புவனெசு ஐரிசின் மையப்பகுதியில் வணிக மாவட்டத்திலுள்ள அவெனிடா ரோக் சேன்சு பெனா சாலையில் நடந்து செல்கையில் மகிழுந்து மோதியது. ஓட்டுநர் தப்பியோடிவிட லாந்தேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டுநாட்கள் சிகிச்சைக்குப் பிறகு தமது 58ஆம் அகவையில் உயிரிழந்தார்;[2] அவரது அடக்கத்திற்கு 1,000 மக்கள் கூடினர்.[4]

விபத்து என காவல்துறை அறிவித்தபோதும் அர்கெந்தீனாவின் எல் முண்டோ இதழில் அடெலியா டி கார்லோ ஏற்கவில்லை. இந்த விபத்தின் விவரங்களை வெளியிட்ட அச்செய்தி இதழ் காவல்துறை அறிக்கையில் ஓட்டுநர் பெயரும் வண்டி அடையாளங்களும் அழிக்கப்பட்டிருந்ததைக் குறிப்பிட்டது; ஓட்டுநர், டேவிட் கிளாப்பென்பாக், வலதுசாரி துணைப்படை குழுவான அர்கெந்தீன நாட்டுப்பற்றாளர் சங்கத்தைச் சேர்ந்தவர் என்றும் கிளாப்பென்பாக் அதற்கு முன்னால் பல கொலைகளை நிகழ்த்தியுள்ளார் என்றும் செய்தி வெளியிட்டது. இது பிரசுரமான சில நாட்களில் அர்கெந்தீன கூட்டரசு காவல்துறை டி கார்லோவின் வீட்டை சூறையாடியது.[2]

புலன்விசாரிப்பு இதழாளர்களான அரசெல்லி பெல்லோட்டா, அன்னா மாரியா டெ மெனா லாந்தேரியின் வாழ்க்கை வரலாற்றை 2001இல் (முறையே யூலியெத்தா லாந்தேரி: லா பேசன் டெ உனா முகெர் மற்றும் பலோமிட்டா பிளாங்கா) வெளியிட்டுள்ளனர்.[2][4] புவனெசு ஐரிசின் புதிய மாவட்டமான புவர்ட்டோ மதெரோவில் உள்ள ஒரு சாலைக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.[8]

மேற்சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Lanteri e Pastorelli in Argentina".
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 "Julieta Lanteri". El Argentino. Archived from the original on 2013-01-22. பார்க்கப்பட்ட நாள் 2016-05-10. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  3. 3.0 3.1 3.2 Argentines of To-day. New York: The Hispanic Society of America. 1920. https://archive.org/details/argentinesoftoda01parkuoft. 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 "Julieta Lanteri (1873-1932)". University of North Carolina. Archived from the original on 2011-10-04. பார்க்கப்பட்ட நாள் 2016-05-11.
  5. "Alicia Moreau de Justo". La Nación. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  6. 6.0 6.1 6.2 "Julieta Lanteri, una precursora de los derechos de las mujeres". La Fogata.
  7. 7.0 7.1 "Calendario Histórico: Se aprueba el voto femenino (21 de Agosto de 1946)". Buenos Aires Ciudad. Archived from the original on 2012-03-14. பார்க்கப்பட்ட நாள் 2016-05-11.
  8. "Calles de Puerto Madero". Luis Cortese.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூலியெத்தா_லாந்தேரி&oldid=3857387" இலிருந்து மீள்விக்கப்பட்டது