தங்க நச்சுத் தவளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்க நச்சுத் தவளை

தங்க நச்சுத் தவளை ( golden poison frog (Phyllobates terribilis),[1] இதன் வேறு பெயர்கள் golden frog, golden poison arrow frog, golden dart frog ) என்பது கொலொம்பியாவின் பசிபிக் கடற்கரைப் பகுதியல் காணப்படும் நச்சுத்தன்மைவாய்ந்த நச்சு அம்புத் தவளை வகையைச் சேர்ந்த ஒரு ஓரிடவாழி தவளையாகும். இவை ஆண்டு மழையளவு 5 மீ அல்லது அதற்கு மேற்பட்டுள்ளதாகவும், வெப்பநிலை குறைந்தது 26 ° செ என்ற அளவும், கடல் மட்டத்தில் இருந்து 100 மீட்டர் முதல், 200 மீட்டர் வரையும், ஈரப்பதம் 80-90% உள்ள மழைக் காடுகளில் காணப்படுகின்றன. இது ஒரு சமூக விலங்காகும், இவை ஆறு தவளைவரையிலான குழுக்களாக வாழுகின்றன. இந்த தவளைகள் பெரும்பாலும் சிறிய அளவுள்ளதாகவும், பிரகாசமான வண்ணங்கள் கொண்டதாகவும் தீங்கற்றதாகவும் கருதப்படுகிறது, ஆனால் காட்டு தவளைகள் நச்சுத்தன்மை கொண்டதாக உள்ளன.[2] இரண்டு அங்குலமே உள்ள இந்தத் தவளைதான் உலகிலேயே மிக அதிக நச்சு கொண்ட தவளை. ஒரு முறை நச்சை பீய்ச்சி அடித்தால் மூன்றே நிமிடங்களில் 10 மனிதர்களைக் கொன்றுவிடக்கூடியது. பத்து ஆயிரம் சுண்டெலிகளைக் கொன்றுவிடக் கூடியது. இவை பொன் நிறத்தில் மட்டுமின்றி, ஆரஞ்சு, வெளிர் பச்சை நிறங்களிலும் இவை காணப்படுகின்றன. தன் ஆபத்தானவன் என்று மற்ற விலங்குகளை எச்சரிப்பதற்காகவே இவ்வாறு கண்கவர் வண்ணங்கள் கொண்டுள்ளது. அழிந்துவரக்கூடிய அரிய உயிரினங்களின் பட்டியலில் இந்தத் தங்கத் தவளைகளும் உள்ளன. காடுகளை அழித்தல், சட்டத்துக்குப் புறம்பாகத் தங்கச் சுரங்கம் அமைத்தல், கோகோ பயிரிடுதல் போன்ற பல காரணங்களால் தங்கத் தவளைகள் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளன.[3]

பரவலும், வாழிடமும்[தொகு]

தங்க நச்சுத் தவளை ஓரிடவாழியாகும். இவை பசிபிக் கடற்கரையில் ஈரப்பதமான மழைக்காடுகள் உள்ள கொலொம்பியாவின் கவுகா மற்றும் வள்ளி டில் கவுகா ஆகிய பகுதிகளில்,[4] சுமார் 5,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள காடுகளில் காணப்படுகிறது. இவை தரையில் முட்டைகளை இடுகின்றன. முட்டை பொரித்து வெளிவரும் தலைப்பிரட்டைகளை ஆண் தவளைகள் குளங்களுக்கு கொண்டுசென்று விடுகின்றன.[5]

நச்சுத்தன்மை[தொகு]

இந்த தங்க நச்சுத் தவளைகள் ஆபத்தான உயிரினங்களே தவிர, கொடூரமான உயிரினங்கள் அல்ல. பொதுவாக நச்சுத்தன்மை கொண்ட விலங்குகளும் பூச்சிகளும் பற்கள், கொடுக்குகள் மூலம் நச்சை செலுத்துகின்றன. ஆனால், தங்கத் தவளை தனக்கு ஆபத்து என்று உணர்ந்தால், தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காகத் தோலில் இருந்து நச்சை பீய்ச்சி விடுகிறது. இந்தத் தவளையை நம் கையில் உறையில்லாமல் வைத்திருந்தால், அடுத்த சில நொடிகளில் மரணம் உறுதி. ‘அல்கலாய்ட்’ என்ற விஷம் தவளையின் தோல் முழுவதும் பரவியிருக்கிறது. இந்த விஷம் நரம்புகளின் செயல்களைத் தடுத்துவிடும். தசைகளைச் சுருக்குகிறது. இறுதியில் இதயத்தைச் செயலிழக்க வைத்துவிடும். உள்ளுர் பழங்குடி மக்கள் இதன் நஞ்சை சேகரித்து வேட்டைக்கு பயன்படுத்துகின்றனர். முன்பு வட, தென் அமெரிக்கக் காடுகளில் வாழ்ந்த தவளைகளுக்கு நச்சு இல்லை. காலப் போக்கில் இவை சாப்பிடும் உணவுகளிலிருந்தே நச்சுத்தன்மையைப் பெற்றிருக்க வேண்டும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.[6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Frost, Darrel R. (2014). "Phyllobates terribilis Myers, Daly, and Malkin, 1978". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 6 September 2014.
  2. Dart poison frogs and their toxins The ASA Newsletter 1999
  3. "தவளைக்கு விஷம் உண்டா?". தி இந்து (தமிழ்). 13 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 15 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  4. Acosta-Galvis, A.R. (2014). "Phyllobates terribilis Myers, Daly, & Malkin, 1978". Lista de los Anfibios de Colombia V.03.2014. www.batrachia.com. பார்க்கப்பட்ட நாள் 6 September 2014.
  5. Wilmar Bolívar, Stefan Lötters (2004).
  6. ADW: Phyllobates terribilis: Information
  7. WonderQuest: Most poisonous animal, Contentious ethanol debate, Do fish sleep?
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்க_நச்சுத்_தவளை&oldid=3930595" இலிருந்து மீள்விக்கப்பட்டது