நாடு காட்டுப் பரவணிக் கல்வெட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"நாடு காட்டுப் பரவணிக் கல்வெட்டு" என்பதன் மைப்பிரதி ஒன்று லண்டன் மாநகர பொருட்காட்சிச் சாலையின் நூல் நிலையத்தில் உள்ளது[1]. இதுவரை அது அச்சில் வெளியானதாகத் தெரியவில்லை. கிழக்கிலங்கை பற்றிய நூல்களிலோ அல்லது அங்கு எழுதப்பட்ட இலக்கியங்களிலோ அதைப் பற்றிய குறிப்புக்கள் எதுவும் காணப்படவில்லை. அது பெரும்பாலும் நாடுகாட்டுப்பற்று பற்றிய வரலாற்றுக் குறிப்புக்களைக் கொண்டுள்ளது. ஏறத்தாள 150 ஆண்டுகளுக்கு முன்னர் மட்டக்களப்புப் பிரதேசம் ஏழு நிர்வாகப் பிரிவுகளாக அமைந்திருந்தது.[2] அவற்றுள் நாடுகாட்டுப் பற்று என்பதும் ஒன்றாகும். இப்பிரிவுகள் ஒவ்வொன்றும் வன்னியர் என்னும் சிற்றரசர்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்தன.

மொழிநடையும் கல்வெட்டின் காலமும்[தொகு]

நாடுகாட்டு பரவெணிக் கல்வெட்டு ஒரு இலக்கிய வகையைச் சேர்ந்ததாக உள்ளது. மத்திய காலப் பகுதியிலே இந்த வகையான இலக்கியம் இலங்கைத் தமிழரிடையே, அதுவும் கிழக்கிலங்கை மற்றும் வன்னிப் பகுதிகளிலுமே பெரும் வளர்ச்சியடைந்திருந்தது. கோணேசர் கல்வெட்டு, வையா என்னும் நூல்கள் கல்வெட்டு எனப்படும் இலக்கிய வகையிலே பிரசித்தம் பெற்று விளங்கின. திருகோணமலை, யாழ்ப்பாணம் (அடங்காப்பற்று) ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்த மக்களின் வரலாறுகளை மேற்படி நூல்கள் கூறுவதுபோல், மட்டக்களப்புத் தென்பகுதியின் வரலாற்று அம்சங்களை இக்கல்வெட்டு பொருளாகக் கொண்டுள்ளது. நாடுகாட்டு பரவெணிக் கல்வெட்டு ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் பதிப்பிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். மட்டக்களப்பு மான்மியத்தில் காணப்படும் சான்றுகள், நாடுகாட்டுப் பகுதியிலுள்ள மரபுவழிக் கதைகள், அங்குள்ள தொல்பொருள் சான்றுகள் ஆகியவைகளின் அடிப்படையில் நாடுகாட்டு பரவெணிக் கல்வெட்டிலுள்ள கதைகள் ஆராயப்படல் வேண்டும்.

இதிலே அதன் ஆசிரியரைப் பற்றியோ, அது இயற்றப்பட்ட காலத்தைப் பற்றியோ எந்தக் குறிப்புகளும் காணப்படவில்லை. புலியன் தீவில் உலவிசி என்ற பறங்கி வாழ்ந்தமை பற்றிக் கூறப்பட்டுள்ளமையினால், இது இலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சி நடைபெற்றபோது எழுதப்பட்டிருக்கின்றது என்பது உறுதியாகின்றது. கண்டி அரசன் மற்றும் வன்னிய இராசாக்கள் பற்றிக் குறிப்புகள் உள்ளதால், கண்டி அரசனின் மேலாதிக்கம் மட்டக்களப்பப் பிரதேசத்தில் நிலவிய காலத்து வரலாற்று அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளதாகக் கொள்ளலாம்.

மட்டக்களப்பு மான்மியத்தின் மொழிநடைக்கும் கல்வெட்டின் மொழிநடைக்கும் இடையிலே பாரிய வேறுபாடுகள் உள்ளன. மட்டக்களப்பு மான்மியத்தின் ஒரு பகுதி வசனநடையிலும், ஏனைய பகுதிகள் செய்யுள் வடிவிலும் அமைந்துள்ளன. அது காலத்துக்குக் காலம் பல்வேறு ஆசிரியர்களினால் எழுதப்பட்ட கவித்திரட்டுக்களையும், உரைகளையும் கொண்டதொரு தொகுப்பாகும்.[3] ஆனால் கல்வெட்டை ஒருவரே எழுதியுள்ளார். வரலாற்று அம்சம் பொருந்திய மரபு வழியான கதைகளே அதில் பெரும்பாலும் இடம்பெற்றுள்ளன. மட்டக்களப்பு மான்மியத்தின் மொழிநடை கல்வியறிவு படைத்த புலவர்களின் இலக்கண இலக்கிய மரபுகள் அமைந்த செந்தமிழ் வழக்காகும். ஆனால் கல்வெட்டில் ழகர, ளகர மயக்கங்கள் அதிகமாகவும், இரு சொற்கள் சரியான முறையில் புணர்த்தி எழுதப்படாமல், முதற்சொல்லின் இறுதி எழுத்தை இரட்டிப்பாக்கி பாமரர் வழக்கில் எழுதப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மான்மியம் கிழக்கிலங்கைத் தமிழர்களின் தேசிய உணர்ச்சியின் விளைவாக எழுந்ததாகும். வெருகல் ஆற்றிலிருந்து பூமுனை வரையிலான பிரதேசத்தில் வாழ்ந்த தமிழர்கள் மொழி, சமுதாய வழமை, பாரம்பரியம் ஆகியவற்றினால் ஒன்றுபட்டிருந்தனர். இந்த ஒற்றுமையும், கண்டி இராச்சியத்தில் வாழ்ந்த சிங்களவர்களோடு இருந்த வேற்றுமையும், கிழக்கிலங்கைத் தமிழர்களின் மத்தியில் ஒரு வகையான தேசிய உணர்வினை ஏற்படுத்தின. கண்டிச் சிங்கள மன்னர்கள் கிழக்கிலங்கைத் தமிழர்களின் தனித்துவத்தையும், சிறப்புரிமைகளையும் ஒப்புக்கொண்டிருந்தார்கள் என்பதற்கு, பிரதேச நிர்வாகத்தில் சுதந்திர ஆதிக்கம் செலுத்திய வன்னியர்களின் ஆட்சி ஒர் எடுத்துக் காட்டாகும். பூகோள அமைப்பு, மொழிவழிப் பாரம்பரியம், அரசியல் வரலாறு ஆகியவற்றைக் கொண்ட தேசிய உணர்வினைப் பிரதிபலிப்பதே "மட்டக்களப்புத் தேசம்" என்னும் கோட்பாடாகும். இதன் வரலாற்றை வகுத்துக்கொள்ள எழுதப்பட்டதே மட்டக்களப்பு மான்மியம் என்னும் மட்டக்களப்பின் பூர்வீக சரித்திரமாகும். ஆனால் மட்டக்களப்பின் பழைய பிரிவுகளில் ஒன்றான நாடுகாட்டுப் பற்று, அதன் பிரதேச உணர்ச்சியின் விளைவாகவே "நாடுகாட்டுப் பரவெணிக் கல்வெட்டு" எழுதப்பட்டது எனக் கருதலாம்.

கல்வெட்டில் உள்ள தகவல்கள்[தொகு]

சீத்தவாக்கையில் இருந்து இங்கு குடிபெயர்ந்த நிலமையிறாளை பற்றிய கதையுடன் கல்வெட்டு ஆரம்பமாகின்றது. மட்டக்களப்பில் வசிக்கின்ற முஸ்லிம்கள் சிலரின் முன்னோர்கள் சீத்தவாக்கையிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் என்பது மரபு. ஆனால் இக்கல்வெட்டில் சிங்களவர்களையே குறிப்பிடப்பட்டிருக்கிறது. நிலமையிறாளை, அவரின் மனைவி கிரியெத்தனா, மகன் இராசபக்ச முதலியார் மற்றும் வேறு சிலரும் சீத்தவாக்கையிலிருந்து குடிபெயர்ந்து 'தளவில்' என்னுமிடத்திலே குடியிருந்தாரகள். அவர்கள் வரும்போது அவர்களின் கால்நடைகள், சொத்துக்கள், அடிமைகள் மற்றும் வண்ணார், சங்கரவர், தட்டார், கிண்ணறையர், ஒலியர் ஆகியவர்களையும் கூட்டிக்கொண்டு வந்ததாகச் சொல்லப்படுகின்றது. பின்பு இராசபக்ச முதலியாரும் அவரது உறவினர்களும் இறக்காமம் என்னுமிடத்துக்குக் குடிபெயர்ந்தார்கள். கல்வெட்டில் வருகின்ற கதைகள் யாவும் இராசபக்ச முதலியாரோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. அவர் கண்டி அரசனோடு தொடர்புள்ளவராகவும், இராச முத்திரைகள் பெற்றவராகவும் காணப்படுகின்றார். அவர் பட்டம் வழங்கப்பட்ட முதலியாகவும், அவரது நெருங்கிய உறவினர் காளாஞ்சி அப்புகாமி பட்டம் பெறாத முதலியாகவும் குறிப்பிடப்படுகின்றனர். இவற்றை நோக்கும் போது சீத்தவாக்கையிலிருந்து நாடுகாட்டுக்கு குடிபெயர்ந்த ஒரு சிங்களக் குடும்பம் மரபு வழியாகவே கண்டி அரசிலே உயர்பதவிகளைப் பெற்றிருந்தவர்கள் என்பது புலனாகிறது. முதலாம் இராசசிங்கனுடைய ஆட்சிக்காலத்தில் இக்குடும்பத்தவர்கள் அதிகாரிகளாக மட்டக்களப்பப் பிரதேசத்திற்கு அனுப்பப்பட்டிருக்கலாம். கண்டி அரசனுடைய பெயரோ, அவனுடைய நடவடிக்கைகளோ, கால வரையறைகளோ கல்வெட்டில் குறிப்பிடப்படவில்லையாகையால், அதில் இடம்பெற்றிருக்கின்ற வரலாற்று நிகழ்ச்சிகளை ஒரு கால வரையறைக்குள் சேர்க்க முடியாதுள்ளது.

கல்வெட்டிலே நாடுகாட்டில் அதிகாரம் செலுத்திய வன்னியர்களைப் பற்றியும் சில குறிப்புக்கள் காணப்படுகின்றன. சிங்காரவத்தையிலே ஏழு வன்னியர்கள் இருந்ததாகவும், அவர்கள் திருக்கோயில் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும் சொல்லப்படுகின்றது. இது, நாடுகாட்டுப் பகுதியிலே சிங்காரவத்தை வன்னியர்களைப் பற்றி நிலவி வருகின்ற ஐதிகங்களை உறுதிப்படுத்துவதாக உள்ளன.[4] கோவில்மேடு, பட்டிமேடு ஆகிய இடங்களிலுள்ள அம்மன் கோவில்களைப் பற்றிய சில கதைகளும் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளன. பட்டிமேட்டிலிருந்து காரைதீவுக்கு அம்மன் சென்றதாகவும் கூறப்பட்டிருக்கின்றது. சீத்தாவாக்கையிலிருந்து அம்மன் பட்டிமேட்டுக்குச் சென்றதாக பொற்புறா வந்த காவியம் கூறுகின்றது.[5]

நாடுகாட்டிலே இருந்த பல ஊர்கள், வயல்வெளிகள் ஆகியவற்றின் பெயர்களும் கல்வெட்டில் இடம் பெற்றுள்ளன. பட்டிய வத்தவளை, வாடிமுனை, பாமங்கை, கல்மடு, கோவில்மேடு, பட்டிமேடு, மேட்டுவெளி, பள்ளவெளி, வேகாமம், வலிப்பத்தான்சேனை, கடவத்தைவெளி, திவிளானைவெளி, பொத்தானைவெளி, வம்மியடி வயல், பட்டிப்பளை, அணுக்கன் வெளி, சிங்காரவத்தை, நாதனை ஆகிய இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதேபோல் நாடுகாட்டுப் பற்றில் வாழ்ந்து வந்த முஸ்லிம்களையும், அவர்களது தலைவர்களையும் பற்றிய குறிப்புக்களும் கல்வெட்டில் காணப்படுகின்றன. பொன்னாச்சிகுடி, வரிசைநாச்சிகுடி, முகாந்திர நாச்சிகுடி, மாலைகட்டிகுடி, கிணிக்கருதன்குடி, பணியவீட்டுக் குடி ஆகிய ஏழு வகை முஸ்லிம் குடிகளும் நாடுகாட்டிலே வாழ்ந்தனர் என்றும், அவர்கள் அனைவருக்கும் பொன்னாச்சிகுடியே தலைமை என்றும் கல்வெட்டிலே குறிப்பிடப்பட்டிருக்கிறது.[6] இந்த ஏழு குடிகளும் மட்டக்களப்பு பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களிடையே இப்போதும் காணப்படுகின்றன. இது, அவர்கள் கிழக்கிலங்கையில் வாழும் தமிழர்களோடு இனரீதியாகவும், சமுதாய ரீதியாகவும் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டு பதிப்பில் வெளிவந்தால், மட்டக்களப்பு தேசத்தின் வரலாற்றை ஆராய ஒரு ஆதாரம் கிடைக்கும். அது மட்டுமன்றி பதுங்கிக் கிடக்கும் இதுபோன்ற பிற ஆதாரங்களையும், செப்பேடுகளையும் வெளியிடுவதன் மூலமே மட்டக்களப்பு தேசத்தின் வரலாறு முழுமை பெறக்கூடிய வாய்ப்புக் கிடைக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. No. OR 6616 r
  2. A Monograph of the Batticaloa District of the eastern Province of Ceylon, S.O.Canagaratnam, Colombo-1921,P.10,78
  3. மட்டக்களப்பு மான்மியம், எப்.எக்ஸ்.சி.நடராசா, கொழும்பு - 1962
  4. Monograph of the Batticaloa District, P.10
  5. மகாமாரித்தேவி திவ்வியகரணி, சி.கணபதிப்பிள்ளை, யாழ்ப்பாணம்
  6. Monograph of the Batticaloa District PP. 90-95