எழுத்துருச் சட்டங்களின் பொருள்விளக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எழுத்துருச் சட்டங்களின் பொருள்விளக்கம் (Interpretation of statutes) என்பது, இயற்றப்பட்ட சட்டம் (legislation) நீதிமன்றங்களால் சரியாக விளக்கிக் கூறப்பட்டு முறையாகப் பயன்படுத்த உதவும் ஒரு செயல்முறையாகும். ஒரு வழக்குடன் தொடர்புற்ற எழுத்துருச் சட்டத்தை சிறிதளவு பொருள் விளக்கிக் கூற வேண்டியுள்ளது. சில வேளைகளில் எழுத்துருச் சட்டத்திலுள்ள சொற்கள் தெளிவான மற்றும் நேரடியான பொருளைக் கொண்டிருக்கலாம். ஆனால், பல சூழ்நிலைகளிலும், சட்டத்தில் உள்ள சொற்கள் பல பொருளைத் தருவதாக அல்லது பொருளில் சந்தேகம் ஏற்படுவதாக அமையப்பெற, நீதிபதிகளால் தீர்வுக்கான வேண்டியுள்ளது. எழுத்துருச் சட்டங்களின் பொருளைக் கண்டறிய நீதிபதிகள் எழுத்துருச் சட்டங்களின் பொருள்விளக்கத்திற்கான பல்வேறு கருவிகளையும் முறைகளையும் பயன்படுத்துகிறார்கள். இதில் சட்ட விளக்கத்திற்கான பாரம்பரிய விதிகள், சட்டமியற்ற வரலாறு மற்றும் சட்டத்தின் தேவை ஆகியன உட்படும்.
பொதுச் சட்ட ஆள்வரையில், எழுத்துருச் சட்ட பொருள்விளக்க விதிமுறைகள் சட்டமியற்றகத்தாலோ அல்லது நிர்வாக முகமைகளாலோ இயற்றப்பட்ட சட்டத்திற்கு நீதியகத்தால் பயன்படுத்தப்படுகிறது.

பொருள் விளக்கத்தில் நீதியகம்[தொகு]

எழுத்துருச் சட்டங்களின் பொருள்விளக்கம் என்பது நீதிமன்றங்களின் முதன்மைப் பணியாகும். சட்டமியற்றகம் நியமத்தை (enactment) மட்டும் இயற்றுகிறது, ஆனால் இதன் பொருள்விளக்கம் முழுமையாக நீதியக வரம்பில் உட்படுகிறது. பொருள்விளக்கம் என்பது ஓர் எழுத்துருச் சட்டத்தில் உட்படுத்தப்பட்டவைகளில் மீது சட்டமியற்றகத்தின் உண்மையான குறிக்கோளைக் கண்டறிவதாகும். இது பொதுவாக சட்டப் பொருள்விளக்கம் (legal interpretation) மற்றும் கோட்பாட்டு பொருள்விளக்கம் (doctrinal interpretation) என இருவகைப்படும். சட்டப் பொருள்விளக்கம் எழுத்துரு மற்றும் மரபுச் சார்ந்த சட்டங்களில் உட்பட்டுள்ளவைகளின் உதவியுடன் நடைபெறும் செயல்முறையாகும். கோட்பாட்டு பொருள்விளக்கம், பொருள் விளக்கத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட விதிகளின் உதவியுடன் நடைபெறும் செயல்முறையாகும்.

பொருள்விளக்கத்தின் தேவை[தொகு]

(1) சட்டமியற்றகத்தின் கருதலை கண்டறிதல் (To find out the intention of legislature)
பொருள்விளக்கத்தின் குறிக்கோள் என்பது சட்டமியற்றகம் என்ன கருதி இருந்தது என்பதனை கண்டுபிடிப்பதாகும். இந்த கருதல் நியம ஏடுகளில் (text of enactment) இருந்து உறுதிப்படுத்தப்படும். பொருள்விளக்கத்தின் முக்கிய தேவை என்பது, எழுத்துருச் சட்டத்தின் மொழியமைப்பினால் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ என்ன நினைக்கப்படுகிறது என்பதனை கண்டறிவதாகும். பொருள்விளக்கம் என்பது சட்டமியற்றகத்தின் கருதல் எதனால் உறுதி செய்யப்படுகிறது என்பதை கண்டறிவதற்கான நீதியகத்தின் ஒரு நுட்பமான செயல்பாடாகும்.
எழுத்துருச் சட்டங்கள் வரையப்படும் போது, சட்டமியற்றகம் பொது விளைவுகளை மட்டுமே மனதில் கொண்டிருக்கும். ஆனால் நடைமுறையில் நுணூக்கமாக குறிப்பிடத்தக்க விளைவுகளே நீதிமன்றத்தின் முன்பாக வரும். இத்தகைய நிகழ்வுகளில், நீதிமன்றம் உட்கூறுகளின் பொருளைக் கண்டறிய தனது மனதை பயன்படுத்தியாக வேண்டும்.
எழுத்துருச் சட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் (terms) சாதாரன மொழியில் சிலப் பொருளைக் கொண்டிருக்கலாம், ஆனால் சில மறைமுகமான பொருளை எழுத்துருச் சட்டத்தில் கொண்டிருக்கும். சில சொற்கள் (words) இரட்டை பொருள் தரக்கூடியதாக இருக்கும். இதனால் பொருத்தமான ஒன்றை விளக்கிக்கூறி தொடர்புடைய வழக்கில் பயன்படுத்துவது நீதிமன்றத்தின் கடமையாகும்.[1]

(2) பன்பொருள் களைதல் ( To remove ambiguity)
எழுத்துருச் சட்டங்கள் எல்லாம் மொழியைப் பயன்படுத்தி உருவாக்கப் படுபவை. எழுத்துருச் சட்டத்தில் உட்படுத்தப் பட்டுள்ளவை எல்லாம் இலக்கண மரபின்படி சொற்களைக் கோர்த்து கட்டமைக்கப்படுகிறது. சொற்களின் பொருள் மற்றும் ஒரு குறிப்பிட்ட கருத்தை எடுத்துரைப்பதில் ஊடகமாக அதன் தாக்கம் ஆகிய சிக்கல்கள்தான் பொருள்விளக்கத்தில் ஏற்படும் பிரச்சனையாகும்.

Bank என்ற ஆங்கிலச் சொல் ஆற்றுப்படுக்கை என்றும் வங்கி என்றும் பொருள் படும். பணம் Bank- ல் செலுத்தப்பட்டது என்ற வாக்கியத்தை, பொருள் கொள்ளும் போது, பணம் வங்கியில் செலுத்தப்பட்டது என்பதற்கு பதில் பணம் ஆற்றுப்படுகையில் செலுத்தப்பட்டது என்று பொருள் கொண்டால் தவறாகிவிடும்.

இத்தகைய சூல்நிலையில் நீதிமன்றங்கள் இடத்திற்கு தகுந்தார் போல் சொற்களின் பொருள் மாறுபடுவதை புரிந்து இலக்கணப்படி பொருள்விளக்கம் தரவேண்டும்.

பொருள்விளக்க உதவிகள் (Aids to Interpretation)[தொகு]

பொருள்விளக்கத்திற்கு உதவியான அனைத்தையும் கவனத்தில் கொள்வதில் இருந்தே ஒரு செய்யுளில் காணப்படும் ஏற்பாடுகளின் உண்மை கருத்தை உணரமுடியும். இந்த உதவிகள் சட்டமியற்றகத்தினால் பயன்படுத்தப்பட்டுள்ள சந்தேகத்திற்குரிய கூற்றுகளின் பொருளைக் கண்டறிய உதவுகிறது. இத்தகையப் பொருள்விளக்க உதவிகள் இரண்டாக வகைப்படுத்தப்படுகிறது. அவை உள்ளார்ந்த (அல்லது இயல்பான உதவிகள்) மற்றும் வெளியார்ந்த உதவிகள் ஆகும்.

பொருள்விளக்கத்திற்கான உள்ளார்ந்த உதவிகள் (Internal Aids to Interpretation)[தொகு]

உள்ளார்ந்த உதவிகள் என்பது நீதிமன்றங்கள் பொருள்விளக்கத்திற்காக அந்த செய்யுளின் உள்ளேயே அடிக்கடி நாடிச் செல்லும் பாகங்களாகும்.

இதற்கு எழுத்துருச் சட்டம் எனும் கட்டுரையில் எழுத்துருச் சட்டத்தின் பாகங்கள் எனும் தலைப்பைக் காணவும்.

பொருள்விளக்கத்திற்கான வெளியார்ந்த உதவிகள் (External Aids to Interpretation)[தொகு]

எழுத்துருச் சட்டங்களின் பொருள்விளக்கத்திற்கு சில வெளியார்ந்த உதவிகளும் உள்ளார்ந்த உதவிகளுக்கு அப்பால் பயன்படுகிறது. இவைகள் வெளியார்ந்த உதவிகள் என அழைக்க காரணம் இதற்கான உறைவிடம் செய்யுளுக்கு வெளியே காணப்படுவதால் ஆகும். பன்பொருள் சொற்களை அல்லது கூற்றுகளை விளக்கும் போது நீதிமன்றங்கள் இவற்றை கவனத்தில் கொள்கிறது. கீழேயுள்ளவைகளே முக்கியமான வெளியார்ந்த உதவிகளாகும்.

பொருள் அகராதிகள் (Dictionaries)[தொகு]

எழுத்துருச் சட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள், வார்த்தைகள் மற்றும் சொற்த்தொடர்கள் எழுத்துருச் சட்டத்தில் வரையறுக்கப்படாதப் போது இதன் பொருள் அறிய அகராதியைப் பயன்படுத்தியாக வேண்டியுள்ளது. ஆனால் அகராதியில் ஒரு சொல்லிற்கு ஒன்றிற்கு மேலான பொருள் காணப்படலாம். தற்போதைய ஆங்கில அகராதியில் spring என்றச் சொல்லுக்கு வினையாக பனிரெண்டு பொருளும் பெயராக பதிமூன்று பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது.[2]

எழுத்துருச் சட்டத்தில் ஒரு சொல் வரையறுக்காதப் போது அகராதியில் கொடுக்கப்பட்டுள்ள பல பொருள்களில் இருந்து பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.

நூலேடுகள் (Text books)[தொகு]

சில சூல்நிலையில் நூலேடுகளை நீதிமன்றங்கள் ஒரு நியமத்தின் பொருளை அறியக் காணலாம். இதற்காக நீதிமன்றங்கள் ஏடுகளில் விளக்கப்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என இல்லை. இதை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்ளவோ நிராகரிக்கவோ செய்யலாம்.

சட்டமியற்ற வரலாறு (Legislative History)[தொகு]

கடந்தக் காலங்களில் எழுத்துருச் சட்டத்தின் சட்டமியற்ற வரலாற்றைக் கண்டு இதன் உண்மைக் கருத்தமைப்பை அறிய நீதிமன்றங்கள் பயன்படுத்தியிருந்தன. ஆனால் நவீனப் பார்வையில் இது பொருள்விளக்க உதவியாக அனுமதிக்கப்படுவதில்லை. மன்றங்களில் நடக்கும் சட்டமியற்ற விவாதங்கள்[3][4], தேர்வுக் குழுவின் அறிக்கை[5], மற்றும், குறிக்கோள்கள் மற்றும் காரணங்களின் நிலைபாடு[6], போன்றவை பொருள்விளக்கத்திற்கு அனுமதிக்காதவையாகவே கணக்காக்கப்படுகிறது. இதற்கானக் காரணம், சட்டமியற்றுபவர்கள் என்ன நினைத்தார்கள் என்பது ஏற்கெனவே எழுத்துருச் சட்டத்தில் வார்த்தைகளாக விவரிக்கப்பட்டு இருப்பதாலாகும். தற்போதைய வளர்ச்சியின் படி சட்டமியற்ற ஏற்பாடுகளின் உண்மைக் கருத்தை விளக்க இவைகள் மேற்கோள் காட்டப்படலாம்[7].

நிர்வாக உத்திகள் (Administrative Conveyancing)[தொகு]

பொதுவாக நிர்வாக பயிற்சி பொருள்விளக்க உதவியாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஆனால் எழுத்துருச் சட்டத்தின் ஏற்பாடுகளை விளக்குவதில் நீதிமன்றங்கள் இதற்கு முக்கியத்துவம் தருவதுண்டு.

வர்த்தக பயிற்சிகள் (Commercial Practices)[தொகு]

வர்த்தக பயிற்சிகள் அல்லது பயன்பாடுகள் எழுத்துருச் சட்டத்தின் கருத்தை கண்டறிய நீதிமன்றங்களால் கவனிக்கப்படுவதுண்டு.

குழு அறிக்கை (Committee reports)[தொகு]

எந்த சூல்நிலையில் எழுத்துருச் சட்டம் இயற்றப்பட்டது என்பதை புரிந்துகொள்ள குழு அல்லது ஆணையத்தின் அறிக்கையைக் காண அனுமதிப்பதுண்டு. ஆனால் நீதிமன்றங்கள் குழுவின் பரிந்துரையை காண்பது தேவையற்றது.

வெளிநாட்டு தீர்மானங்கள் மற்றும் தீர்ப்புகள் (Foreign decisions)[தொகு]

ஒரே போன்று சட்டவியல் அமைப்பைக் கொண்ட நாடுகளின் தீர்மானங்கள் மற்றும் தீர்ப்புகளை பின்பற்றலாம். இந்திய ஆங்கில மற்றும் அமெரிக்காவின் தீர்ப்புகளை பின்பற்றுவண்டு. காரணம் இவைகள் ஓரே பொன்ற சட்டவியல் அமைப்பைக் கொண்டிருப்பதால் ஆகும். ஆனால் எழுத்துருச் சட்டத்தின் மொழி தெளிவாக உள்ள போது வெளிநாட்டு தீர்ப்புகளுக்கு முன்தூக்கம் தரப்படக்கூடது[8].

அரசின் சுற்றறிக்கைகள் மற்றும் வெளியீடுகள் (Government Circulars and Publications)[தொகு]

அதிகாரபூர்வமான சுற்றறிக்கைகள், அறிவிப்புகள், ஆணைகள், மற்றும் நிலைபாடுகள் எந்த எழுத்துருச் சட்டத்தின் கீழ் நல்கப்படுகிறதோ அந்த எழுத்துருச் சட்டத்தின் உட்கருத்திற்கு எதிராக அமையாவிட்டால் இவற்றை எழுத்துருச் சட்டங்களின் வெளியார்ந்த பொருள்விளக்க உதவியாக நீதிமன்றங்கள் கவனத்தில் கொள்ளலாம்.[9]

முந்தைய எழுத்துருச் சட்டங்கள் (Previous statutes)[தொகு]

பழுதுகளைக் களைவதுத் தொடர்பான சட்டங்களை இயற்றுவதற்கு தகுதியான அதிகார அமைப்பு சட்டமியற்றகமாகும். ஒவ்வொரு காலங்களிலும் சமூக மாற்றத்திற்கேற்ப நிலவிலுள்ள சட்டம் சீர்திருத்தப்பட வேண்டியுள்ளது. சில நேரங்களில் நிலவிலுள்ள எழுத்துருச் சட்டத்திற்கு பதிலாக புதிய எழுத்துருச் சட்டங்களைக் கொண்டு வரவேண்டியும் உள்ளது. சில நேரங்களில் நீதிமன்றங்கள், சட்டமியற்றகத்தின் நோக்கம் மாறாது இருக்கும் போது பொருள்விளக்கத்திற்காக நிலவிலுள்ள செய்யுளை முந்தைய செய்யுளால் விளக்கிக் கூறுவதுண்டு.

பொதுவான பொருள்விளக்க விதிகள் (General Principles of Interpretation)[தொகு]

சாதாரணமாக நீதிமன்றங்கள் கீழ் காணும் விதிகளையே எழுத்துருச் சட்டங்களின் பொருள்விளக்கத்தின் போது கையாளுகின்றன.

இன் பாறீ மெத்தேறீய (In Pari Materia)[தொகு]

'பாறீ மெத்தேறீய' என்றால் 'ஒருமித்த நிலை' எனப் பொருள்படும். மாக்ஸ்வெல்-ன் கூற்றின்படி எழுத்துருச் சட்டங்கள் ஒரே நபர்கள், பொருட்கள் அல்லது வகுப்பைச் சார்ந்ததாக இருக்கின்றப்போது ஒருமித்த நிலையிலுள்ளன (In pari materia) எனக்கூறலாம். அவைகள் பெரும்பாலும் ஒரேமாதிரியாக இருக்கும். அதாவது ஒரேக் காரியம் தொடர்பான செய்யுள்களில் பயன்படுத்தப்பட்டுள்ள ஒரே சொற்கள் அல்லது சொற்த்தொடர்கள் ஒரேப் பொருளைக் கொண்டதாகவே இருக்கும். அவ்வாறு இருப்பினும் ஒரேச் சொல் அல்லது சொற்த்தொடர் மாறுபட்ட எழுத்துருச் சட்டங்களில் மாறுபட்டப் பொருளைக் கொண்டதாகவும் இருக்கலாம்.

ரெட்டேண்டோ சிங்குலா சிங்கூலிஸ் (Reddendo Singula Singulis)[தொகு]

இந்த கோட்பாட்டில் காணப்படும் விதியின்படி எழுத்துருச் சட்டத்தின் சரியான பொருள்விளக்கத்திற்கு சொற்களின் ஒழுங்கமைப்பும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். சொற்களின் ஒழுங்கமைப்பு தெளிவாகவும், பன்பொருளற்றதாகவும் இருப்பின் பொருள்விளக்க ஆய்வு தேவையற்றதாகும்.

ஓர் எழுத்துருச் சட்ட ஏற்பாட்டின் அல்லது வேறு எழுத்துருச் சட்டங்களின் பகுதியிலுள்ள சொற்களை மற்றுள்ளப் பகுதிகளில் அதற்கு தகுந்தக் குறிக்கோள்களுக்கு முறையாக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தச் சொற்களைப் பகுத்து வாசித்தறிய வேண்டும். எழுத்துருச் சட்டங்களில் 'முறையே' (Respectively), அல்லது 'பொருந்தக்கூடிய (as applicable), அல்லது, 'சூல்நிலைக்கேற்ப' (as the case may be) போன்றச் சொற்கள் பயன்படுத்தப் பட்டுள்ள இடங்களில் இந்த விதிப் பொருந்தக்கூடியதாகும்.

எழுத்துருச் சட்டங்கள் முறிவும் நிறுத்தமும் இல்லாது வாசிக்கப்பட்டால் அதில் தெளிவு இருக்காது என கிரவ்ஃபாற்ட் பிரபு (Lord Crawford) குறிப்பிட்டுள்ளார். இந்த விதியின்படி ஒரு வாக்கியத்தின் ஏதேனும் குறிப்பிட்ட கிளையை சார்ந்துள்ளச் சொற்களை அதன் அமைப்பில் இருந்து எடுத்து பகுத்து வாசிக்க வேண்டும்.

இந்த விதி பின்வரும் எடுத்துக்காட்டினால் விளக்கிக் கூறமுடியும். "யார் வேண்டுமானாலும் வாளை அல்லது துப்பாக்கியை உருவவோ அல்லது நிரப்பவோ முடியும்." இந்த உரையில் 'உருவுதல்' என்பது வாளிற்கும், 'நிரப்புதல்' என்பது துப்பாக்கிக்கும் தான் பொருந்தும். ஏன் என்றால் இங்கு துப்பாக்கியை உருவவும் முடியாது, வாளை நிரப்பவும் முடியாது.

இன் போனம் பாற்த்தம் (In Bonam Partem)[தொகு]

போனம் பாற்த்தம் என்றால் 'சட்டத்துடன் இணங்கி' எனப் பொருள்படும். எழுத்துருச் சட்டத்திலுள்ள சொற்களுக்கு அல்லது உரைகளுக்கு சட்டப்பூர்வமான அர்த்தம் தரப்பட வேண்டும் என்பதே இந்த விதியின் கொள்கையாகும். சட்டப்பூர்வம் என்றால் சட்டப்படி அல்லது சட்டத்தால் அங்கிகரிக்கப்பட்டது எனப் பொருள்படும். ஒரு செயல் ஒரு செய்யுளின் மேற்படி செய்யபட்டால் அது சட்டப்பூர்வமாகச் செய்யபட்டது என எடுத்துக் கொள்ளப்படும்.[10]

மேற்கோள்[தொகு]

  1. Union of India v. Filip Tiago De Gama, [(1990) 1 SCC 277]
  2. The Concise Oxford Dictionary of Current English
  3. A.K. Gopalan v. State of Madras (AIR 1950 SC 27)
  4. Kesavananda Bharathi v. State of Kerala (AIR 1973 SC 1461)
  5. R.S.Nayak v. A.R. Antulay (1984 SC 684)
  6. Aswini Kumar v. Arbinda Bose (AIR 1952 SC 369)
  7. K.P. Varghese v. Income Tax Officer, (AIR 1981 SC 1922)
  8. Bangalore Water Supply Sewerage Board v. A Rajappa and others (AIR 1978 SC 548)
  9. Commissioner of Trade Tax, U.P vs. Kajaria Ceramics Ltd., (AIR 2005 SC 2968 = 2005 (11) SCC 149)
  10. R v. Hulme (1870 5 Q.B. 377)