உலகக் கல்லீரல் அழற்சி நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலகக் கல்லீரல் அழற்சி நாள்
World Hepatitis Day
கல்லீரல் அழற்சி குறித்த விழிப்புணர்வு, செயற்பாடு, தடுப்பு, சிகிச்சை குறித்து உலக மக்களை ஊக்குவிப்பதற்கான கல்லீரல் அழற்சி நாள் சின்னம்
நாள்ஜூலை 28
நிகழ்வுஆண்டுதோறும்

உலகக் கல்லீரல் அழற்சி நாள் (World Hepatitis Day), ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது.கல்லீரல் அழற்சி நோய்களுக்கான அறிகுறிகள், தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த நாள் உலக சுகாதார அமைப்பால் (WHO) ஏற்படுத்தப்பட்டது[1].

உலகளவில் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் கடும் கல்லீரல் அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் பேர் இந்நோயின் தாக்கத்தால் மரணமடைகின்றனர்.[2]

உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்ட எட்டு மக்கள் நல்வாழ்வுப் பரப்புரைகளில் உலகக் கல்லீரல் அழற்சி நாளும் ஒன்று. மற்ற ஏழு நாட்கள்: உலக சுகாதார நாள், உலக குருதிக் கொடையாளர் நாள், உலக நோய் எதிர்ப்புத் திறனூட்டல் வாரம், உலக காச நோய் நாள், உலக புகையிலை எதிர்ப்பு நாள், உலக மலேரியா நாள், உலக எயிட்சு நாள்.[3]

பின்னணி[தொகு]

உலகளவில் கிட்டத்தட்ட 500 மில்லியன் மக்கள் கல்லீரல் அழற்சி பி அல்லது கல்லீரல் அழற்சி சி நோயுடன் வாழ்கின்றனர்.[4] சரியான கவனமும் சிகிச்சையும் அளிக்கப்படாத கல்லீரல் அழற்சி பி மற்றும் கல்லீரல் அழற்சி சி நோய்கள் முற்றி, கல்லீரல் இழைநார் வளர்ச்சி நோயாகி (சிர்ரோசிஸ்), கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் செயலிழப்பு போன்ற சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும்.

எயிட்சு நோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்தே அனைவரும் அதிக கவனம் கொண்டுள்ள நிலையில், உண்மையில் எயிட்சின் பாதிப்பால் நேரும் மரணத்தை விட வேகமாக, ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் பேர் கல்லீரல் அழற்சி பி அல்லது கல்லீரல் அழற்சி சி நோய் பாதிப்பால் மரணமடைகின்றனர்.[5]

கல்லீரல் அழற்சி நோய் விழிப்புணர்வு குறித்த உலகளவிலான நிகழ்வுகளில் ஜூலை 28 ஆம் நாளன்று, ஹெபடைடிஸ் குழுக்கள், நோயாளிகள், குரல்கொடுப்போர் எனப் பலரும் கலந்து கொள்கின்றனர். குறிப்பாக 2012 இல், இந்நோய் குறித்த அறியாமையை அடையாளம் காட்டும் விதமாக ,20 நாடுகளில் இருந்து 12,588 பேர் ”மூன்று புத்திசாலி குரங்குகள்” செய்கைகளைச் செய்து, உலக கின்னஸ் சாதனை நிகழ்த்தினர்.

வரலாறு[தொகு]

2012, அக்டோபர் மாதம் முதல் திகதியன்று முதன்முதலில், பன்னாட்டு கல்லீரல் அழற்சி சி விழிப்புணர்வு நாள் துவக்கம் நடந்தது. ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நோயால் பாதிக்கப்பட்ட்டோர் குழுக்களின் கூட்டு முயற்சியால் இது நடத்தப்பட்டது.[4] எனினும் நோயால் பாதிக்கப்பட்டோரின் வெவ்வேறு குழுக்கள் இந்நாளை வெவ்வேறு திகதிகளில் அனுசரித்தனர்.[5] ஒருங்கிணைக்கும் முயற்சியாக, உலக ஹெபாடைடிஸ் கூட்டணி, நோய் பாதிக்கப்பட்டோர் குழுக்களுடன் இணைந்து, 2008 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதியை முதல் உலகக் கல்லீரல் அழற்சி நாளாக அறிவித்தது.

2010 ஆம் ஆண்டு, மே மாதம் நடந்த 63வது உலக நல்வாழ்வு கூட்டத்தில் நிறைவேறிய தீர்மானத்தைத் தொடர்ந்து, உலகக் கல்லீரல் அழற்சி நாள் உலகளவில் முக்கியம் வாய்ந்ததானது. தேசிய, பன்னாட்டு அளவிலான விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வதை முதன்மை நோக்காகக் கொண்டதாக இந்நாள் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஹெபடைடிஸ் பி நச்சுயிரியைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசுபெற்ற அறிவியலாளர் பாருச் சாமியெல் பிளம்பெக்கை (Baruch Samuel Blumberg ) நினைவுகூரும் விதமாக, அவர் பிறந்த நாளான ஜூலை 28 க்கு இந்நாள் அனுசரிக்கப்படும் திகதி மாற்றப்பட்டது.

தற்பொழுது நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் உலகக் கல்லீரல் அழற்சி நாள் அனுசரிக்கப்படுகிறது. இலவசமாக நோய் கண்டறிதல், பதாகை பரப்புரைகள், செயற்விளக்கங்கள், சொல்லாடல் நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், தடுப்பூசி முகாம்கள் போன்ற பல நிகழ்வுகள் இந்நாளில் மேற்கொள்ளப்படுகின்றன.[6] ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார அமைப்பு ஆண்டறிக்கையை வெளியிடுகிறது.

கருப்பொருட்கள்[தொகு]

உலகக் கல்லீரல் நாள் கீழ்வரும் செயற்பாடுகளில் கவனம் செலுத்துவதற்கான வாய்ப்புகளைத் தருகிறது:[2]

  • பல்வேறு விதமான கல்லீரல் அழற்சி நோய்கள் மற்றும் அவை பரவும் விதங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரித்தல்;
  • தடுப்பைப் பலப்படுத்தல், நோய் கண்டறிதல், ஹெபடைடிஸ் நச்சுயிரியையும் அது தொடர்பான நோய்களையும் கட்டுப்படுத்தல்;
  • ஹெபடைடிஸ் பி தடுப்பூசி போடுதல், தேசிய தடுப்பாற்றல் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை ஒருங்கிணைத்தல்
  • உலகளவில் ஹபடைடிசுக்கான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தல்.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருள் முன்னிறுத்தப்படுகிறது:

  • 2016: ஹெபடைடிசை வருமுன் காக்க: அது உன்னைப் பொறுத்ததே[7]
  • 2015: ஹெபடைடிஸ் நச்சுயிரி தடுப்பு: இப்பொழுதே செயற்படு.[8]
  • 2014: ஹெபடைடிஸ்: மீண்டும் யோசி.
  • 2013: சத்தமில்லாமல் கொல்லும் இந்நோயைத் தடுக்க மேலதிகச் செயற்பாடு தேவை.
  • 2012: நீ நினைப்பதைவிட அது அருகிலுள்ளது.
  • 2011: ஹெபடைடிஸ் எங்கும், எவரையும் தாக்கும். தெரிந்து கொள். அதனை எதிர்கொள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hepatitis A Fact sheet N°328". World Health Organization. July 2013. பார்க்கப்பட்ட நாள் 20 February 2014.
  2. 2.0 2.1 World Health Organization, World Hepatitis Day. Accessed 8 April 2014.
  3. World Health Organization, WHO campaigns. பரணிடப்பட்டது 2016-04-22 at the வந்தவழி இயந்திரம்
  4. 4.0 4.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-07-26. பார்க்கப்பட்ட நாள் 2015-10-24.
  5. 5.0 5.1 World Hepatitis Alliance. "World Hepatitis Alliance Calls on Governments to Take Urgent Action to Tackle Chronic Viral Hepatitis B & C Epidemic; 2008". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2008-08-18. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original on 2008-12-19. பார்க்கப்பட்ட நாள் 2015-10-24.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  6. World Hepatitis Alliance, World Hepatitis Day Wrap-Up Report 2012. பரணிடப்பட்டது 2013-08-03 at the வந்தவழி இயந்திரம்
  7. "worldhepatitisday". World Health organization. பார்க்கப்பட்ட நாள் 28 July 2015.
  8. "World Hepatitis Day 2015 to focus on prevention". World Health organization. பார்க்கப்பட்ட நாள் 28 July 2015.

வெளியிணைப்புகள்[தொகு]