தெலூரால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தெலூரால்கள் (Tellurols) என்பவை ஆல்ககால்கள் மற்றும் பீனால்களை ஒத்த வரிசைச் சேர்மங்களாகும். ஆக்சிசன் அணுக்களுக்குப்[1] பதிலாக ஆல்ககால் மற்றும் பீனால் சேர்மங்களில் தெலூரியம் அணுக்கள் இடம்பெற்றிருக்கும்.தெலூரால்கள், செலினால்கள் மற்றும் தையால்கள் யாவும் ஒரேவகையான பண்புகளைக் கொண்டுள்ளன. கரிம தெலூரியம் சேர்மங்களுக்கு தெலூரால்கள்தான் அடிப்படை என்றாலும் நிலைப்புத்தன்மை இல்லாத காரணத்தால் அவை அதிகமாக முக்கியத்துவம் பெறவில்லை. தெலூரோயெசுத்தர்களும் தெலூரோசயனேட்டுகளும் தெலூராலில் இருந்து தருவிக்கப்படும் வழிப்பொருட்களாகும்.

பண்புகள்[தொகு]

ஆல்க்கைல்தெலூரால்கள் மஞ்சள் நிறத்தில் நீர்மங்களாகவும் கடுமையான நெடியுடனும் காணப்படுகின்றன. அரைல்தெலூரால்கள் நிறமற்ற படிகங்களாக உருவாகின்றன. இவைகளைக் காட்டிலும் கரிமவுலோகதெலூரால்கள் அதிக நிலைப்புத் தன்மையுடன் காணப்படுகின்றன. குறைந்த நிலைப்புத்தன்மை உடைய இச்சேர்மங்களின் வாய்ப்பாடுகள் (Me3Si)3CTeH, (Me3Si)3SiTeH, மற்றும் (Me3Si)3GeTeH என்று அமைகின்றன.

அமிலக் – காரப் பண்புகள்[தொகு]

தெலூரால்களின் அமிலத்தன்மையை ஐதரசன் தெலூரைடின் (H2Te) அமிலத்தன்மை மற்றும் பிரிகை மாறிலி ஆகிய கூறுகளின் அடிப்படையில் ஊகித்து அறியமுடியும். ஐதரசன் தெலூரைடின் அமிலத்தன்மை எண், pKa 2.64 ஆகவும் அதன் பிரிகை மாறிலி 2.3 × 10−3.5.ஆகவும் இருக்கிறது. ஐதரசன் சல்பைடு மற்றும் ஐதரசன் செலினைடு ஆகிய சேர்மங்களைக் காட்டிலும் ஐதரசன் தெலூரைடின் அமிலத்தன்மை எண் குறைவாகவும் பிரிகை மாறிலியின் மதிப்பு அதிகமாவும் இருக்கிறது[2].

ஐதரசன் பிணைப்பு இச்சேர்மத்தில் இல்லை என்ற காரணத்தினால் தெலூரால்கள் குறைவான கொதிநிலையைக் கொண்டுள்ளன என்பதை அறிய முடியும். தெலூரால்களில் இருக்கும் Te–H பிணைப்புகள் வலிமையற்றவை. இவை வெப்பத்தால் எளிமயாக ஆக்சிசனேற்றம் மற்றும் சிதைவுகளை அடைகின்றன. புறவூதாக் கதிர்களும் கூட தெலூரால்களை சிதைவடையத் தூண்டுகின்றன. மீத்தேன் தெலூரால் இருமெத்தில் இருதெலூரைடு மற்றும் ஐதரசன் என இரண்டாகச் சிதைவடைகிறது.

தயாரிப்பு[தொகு]

எத்தனால்தெலூரால் என்ற சேர்மமே முதன்முதலில் தயாரிக்கப்பட்ட தெலூரால் ஆகும். 1926 ஆம் ஆண்டு கிரிக்னார்டு காரணியைப் பயன்படுத்தி இச்சேர்மம் தயாரிக்கப்பட்டது. அடிக்கடி பயன்படுத்தப்படும் தயாரிப்பு முறையாக இருப்பது, இருதெலூரைடுகளை (R2Te2) ஒடுக்குதல் முறையில் தெலூரால்களாக மாற்றும் முறையே ஆகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Igor D Sadekov and A V Zakharov 1999 "Stable tellurols and their metal derivatives" Russ. Chem. Rev. 1999, vol. 68, 909.
  2. Patai, Saul, and Zvi Rappoport. The Chemistry of Organic Selenium and Tellurium Compounds. Vol. 1. Chichester England: Wiley, 1986.

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெலூரால்&oldid=3620261" இலிருந்து மீள்விக்கப்பட்டது