பேக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேக்கல் கோட்டை

பேக்கல் (Bekal) என்பது கேரள மாநிலத்தில் காசர்கோடு மாவட்டத்திலுள்ள பள்ளிக்கரை கிராமத்தில் அமைந்திருக்கின்ற ஒரு கடலோரப் பகுதி ஆகும். மாவட்டத்தின் முதன்மையான பொழுதுபோக்கிடங்களில் ஒன்றாகவும் இது விளங்குகின்றது. பேக்கல் காசர்கோடு நகரத்திலிருந்து 14 கி.மீ தெற்கில் அமைந்திருக்கின்றது. பேக்கல் என்ற பதம், வலிய குளம் (பலிய குளம்) என்ற சொல்லிருந்து உருவானதாக புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர் ராமநாயக் கருதுகின்றார். இப் பெயரே பேக்குளம் என்றாகி பின்னர் பேக்கல் என்றாக உருமாறியதாக இருக்கும் எனக் கருதப்படுகின்றது[1]

பேக்கல் கோட்டை கேரளத்தின் மிகப் பெரிய கோட்டைகளில் ஒன்றாகும். திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டதாகவும் இது விளங்குகின்றது. கோட்டையில் நின்று கடற்கரையின் அழகை கண்டு ரசிக்கவும், அதன் வனப்பைக் காணவும் பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகிறார்கள். கேரளத்தின் மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக இது இன்று மாற்றம் கண்டிருக்கின்றது. இக் கோட்டைக்குள் காணப்படும் படிகள் ஒரு சுரங்கத்தைச் சென்றடைந்து, அது அரபிக் கடலைத் தடுக்கின்ற மதிலிற்கு அப்பால் போய் இணைகின்றது. கடலருகே கோட்டையில் அமைந்திருக்கும் வட்டமான கோட்டைச் சுவர் கடலில் இறங்குமுகமாக கட்டப்பட்டிருக்கின்றது. பிரபல தமிழ்த் திரைப்படமான பம்பாயில் வருகின்ற புகழ்பெற்ற உயிரே... என்ற திரைப்பாடல் இக் கோட்டையிலேயே படமாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது [2].

குறிப்புகள்[தொகு]

  1. http://kasargod.nic.in/%20Official%20Website%20of%20the%20District%20Administration காசர்கோடு மாவட்ட இணையதளம்
  2. http://www.bekal.org/ பேக்கல் சுற்றுலா வளர்ச்சித் துறை
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேக்கல்&oldid=1906857" இலிருந்து மீள்விக்கப்பட்டது