வான்கடிதத்தாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிய பிரித்தானியாவின் நத்தார் வான்கடிதத்தாள் (1967ல் வெளியிடப்பட்ட இரண்டில் ஒன்று)

வான்கடிதத்தாள் என்பது, வானஞ்சல் ஊடாக அனுப்புவதற்குரிய கடிதம் எழுதுவதற்கான மிக மெல்லிய, எடை குறைவான மடித்து ஒட்டும்வகையில் வடிவமைக்கப்பட்ட தாள் ஆகும். இதில் தனியான கடித உறை எதுவும் கிடையாது. சலுகைக் கட்டணத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவதால், இதற்குள் வேறு எதையும் வைத்து அனுப்புவதைப் பெரும்பாலான அஞ்சல் நிர்வாகங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இவ்வாறு ஏதாவது பொருளை உள்ளே வைத்து அனுப்புவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்த எச்சரிக்கைகள் வான்கடிதத்தாளில் அச்சிடப்பட்டிருப்பது உண்டு.

பெரும்பாலான வான்கடிதத்தாள்களில் முன்கட்டணம் செலுத்தப்பட்டதைக் காட்டும் அஞ்சல்தலை அச்சிடப்பட்டிருக்கும். இதனால் இது, அஞ்சல் எழுதுபொருள் எனக்கொள்ளப்படுவதற்கான தகுதியைப் பெறுகிறது. ஆனாலும், நியூசிலாந்து, சிம்பாப்வே, அயர்லாந்து போன்ர நாடுகள் வான்கடிதத்தாள்களை அச்சிட்ட அஞ்சல்தலை இல்லாமல் விற்கின்றன. இவ்வாறான அஞ்சல்தலை அச்சிடாத வான்கடிதத்தாள்களை அஞ்சல் நிர்வாகங்கள் மட்டுமன்றி தனியார் நிறுவனங்களும் வெளியிட முடியும். அனுப்புபவர்கள் தமது பெயரையும் முகவரியையும் பின்புறத்தில் எழுதவேண்டும்.

வரலாறு[தொகு]

வான்கடிதத்தாள்களின் பயன்பாடு இரண்டாம் உலகப் போர்க் காலத்திலேயே (1939-45) பெருமளவுக்குப் பிரபலமானது. அரச பொறியாளர்கள் பிரிவில், இராணுவ அஞ்சல் சேவையின் மத்திய கிழக்குப் பிரிவின் உதவி இயக்குனரக இருந்த லெப்டினன்ட் கர்னல் ஆர். ஈ. இவான்சு, வானஞ்சல் தேவைகளுக்காக 1/10 அவுன்சிலும் குறைந்த எடைகொண்ட கடித அட்டைகளையே பிரித்தானிய இராணுவம் பயன்படுத்த வேண்டும் என முன்மொழிந்தார். போருக்கான அரசாங்கச் செயலாளராக இருந்த சர் அந்தனி ஏடன், 1940ல் மத்திய கிழக்குக்கு வந்திருந்தபோது, அவரிடம் இவான்சு இந்த ஆலோசனையை முன்வைத்தார். அடுத்த ஆண்டு சனவரியில், ஏடன், மத்திய கிழக்குப் படையின் தலைமைத் தளபதியான ஆர்க்கிபால்ட் வேவெல், வேவெல்லின் முதல் ஏர்ல் அவர்களுக்கு இவான்சின் திட்டம்பற்றி எடுத்துரைத்தார்.[1]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Edward Wells (1987). 'Mailshot – A history of the Forces Postal Services'. Defence Postal & Courier Services, London. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வான்கடிதத்தாள்&oldid=1912843" இலிருந்து மீள்விக்கப்பட்டது