கோட்டையகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இங்கிலாந்தின் கிழக்கு சசெக்சில் உள்ள, நீர் நிரம்பிய அகழியால் சூழப்பட்ட போடியம் கோட்டையகம். 1385 இல் கட்டப்பட்டது.

கோட்டையகம் (Castle) அல்லது கோட்டை மனை என்பது ஐரோப்பாவில் அரச குடும்பத்தினர், பிரபுக்கள் என்போரும் படைத் தலைவர்களும் மத்திய காலப் பகுதியில் கட்டிய அரண் செய்யப்பட்ட கட்டிட அமைப்பைக் குறிக்கும். கோட்டையகம் என்னும் சொல் இக்கட்டுரையில் Castle என்னும் ஆங்கிலச் சொல்லின் மொழிபெயர்ப்பாகப் பயன்படுகின்றது. அறிஞர்கள் இச்சொல்லின் பொருள் குறித்துப் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்தாலும், பொதுவாக இது பிரபுக்களின் அரண் செய்யப்பட்ட தனிப்பட்ட வசிப்பிடம் என்பதே பெரும்பாலானோரின் கருத்து.[1] மாளிகை, கோட்டை, அரணுடன்கூடிய குடியிருப்பு என்பவற்றில் கட்டிட அமைப்பில் ஒத்த தன்மைகள் காணப்பட்டாலும், அவை ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவை. மாளிகை பொதுவாக அரண் செய்யப்படுவதில்லை. கோட்டை எல்லா வேளைகளிலும் அரசர்களினதோ, பிரபுக்களினதோ வசிப்பிடங்களாக இருப்பதில்லை. அரணுடன் கூடிய குடியிருப்பு மக்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்படுவது. வெவ்வேறு காலகட்டங்களில் இச்சொல் பல்வேறுபட்ட அமைப்புக்களைக் குறிக்கப் பயன்பட்டுள்ளது. மலைக் கோட்டைகள், பெரிய நாட்டுப்புற வீடுகள் என்பனவும் இச்சொல்லால் குறிக்கப்பட்டன. கோட்டையகங்கள் பயன்பாட்டுக்கு வந்து ஏறத்தாழ 900 ஆண்டு காலப் பகுதியில், அவை பல்வேறு வடிவங்களைக் கொண்டவையாகவும், வேறுபட்ட அம்சங்களோடு கூடியனவாகவும் கட்டப்பட்டன. பாதுகாப்புச் சுவர்கள், அம்புத் தாக்குதலுக்கான இடைவெளிகள் போன்றைவை பொதுவாகக் காணப்பட்டன.

கரோலிங்கியப் பேரரசு வீழ்ச்சியடைந்த பின்னர் அதன் ஆட்சிப் பகுதிகளைப் பல பிரபுக்களும், இளவரசர்களும் தம்மிடையே பிரித்துக்கொண்டனர். இதைத் தொடர்ந்து ஐரோப்பியப் பாணிக் கோட்டையகங்கள் 9 ஆம் 10 ஆம் நூற்றாண்டுகளில் தோன்றின. தம்மைச் சூழ இருந்த பகுதிகளைக் கட்டுப்படுத்துவதற்காகப் பிரபுக்கள் கோட்டையகங்களை அமைத்தனர். இக்கோட்டையகங்கள் தாக்குதலுக்கும், தற்காப்புக்குமான அமைப்புக்களாக இருந்தன. பிற பகுதிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கான தளமாக இவை பயன்பட்ட அதேவேளை எதிரிகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அமைப்புக்களாகவும் இவை செயற்பட்டன. கோட்டையகங்கள் தொடர்பான ஆய்வுகளில் அவற்றின் படைத்துறை சார்ந்த தோற்றத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டாலும், இவ்வமைப்புக்கள் நிர்வாக மையங்களாகவும், அதிகார பலத்தின் குறியீடுகளாகவும் விளங்கின. நகர்ப்புறக் கோட்டையகங்கள் உள்ளூர் மக்களையும், முக்கியமான போக்குவரத்து வழிகளையும் கட்டுப்படுத்துவதற்குப் பயன்பட்டன. நாட்டுப்புறக் கோட்டையகங்கள், ஆலைகள், வளம் பொருந்திய நிலங்கள், நீர் வளங்கள் போன்ற சமூகத்தின் வாழ்வோடு ஒன்றிணைந்த அம்சங்களுக்கு அண்மையாக அமைக்கப்பட்டன.

பல கோட்டையகங்களைத் தொடக்கத்தில் மண், மரம் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கட்டினர். காலப்போக்கில் அவற்றின் அரண்களைக் கற்களாற் கட்டி வலுப்படுத்தினர். தொடக்ககாலக் கோட்டையகங்கள் இயற்கையாக அமைந்த அரண்களைப் பயன்படுத்திக்கொண்டன. இவற்றில் காவலுக்கும், தாக்குதலுக்குமான கோபுரங்களோ அம்புத் தாக்குதலுக்கான சிறப்பு அமைப்புக்களோ இருக்கவில்லை. 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியிலும், கோட்டையகங்களின் பாதுகாப்புக்கான புதிய அணுகுமுறை உருவானது. கோட்டையகங்களின் பாதுகாப்புக்காக உயர்ந்த கோபுரங்கள் பரவலாகப் புழக்கத்துக்கு வந்தன. பக்கவாட்டுத் தாக்குதலுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஒரு மையத்திலிருந்து விரிந்து செல்லும் வகையில் பல அடுக்குகளில் அரண்கள் அமைக்கப்பட்டன. கோட்டையகங்களின் எல்லாக் கட்டிடக்கலைக் கூறுகளும் படைத்துறைப் பயன்பாடு கொண்டவையாக இருக்கவில்லை. அகழிகள் அவற்றின் முன்னைய பாதுகாப்புப் பயன்பாட்டில் இருந்து அதிகாரத்தின் குறியீடுகளாக மாறின. சில பெரிய கோட்டையகங்கள் நீண்ட, வளைந்து வளைந்து செல்லும் அணுகுவழிகளைக் கொண்டிருந்தன. இது சம்பந்தப்பட்ட பிரபு தொடர்புல் உயர்வான கருத்துக்களை உருவாக்குவதையும், சூழவுள்ள நிலத் தோற்றத்தின் மீது குறியீட்டு ஆதிக்கம் செலுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது.

மத்திய காலத்தின் இறுதியில் கோட்டையகங்கள் அவற்றின் படைத்துறை முக்கியத்துவத்தை இழக்கத் தொடங்கின.[2] இதன் விளைவாகக் கோட்டையகங்கள் வாழிடங்களாகவும், அதிகாரத்தை வெளிப்படுத்தும் குறியீடுகளாகவும் மட்டுமே முக்கியத்துவம் பெற்றன.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Coulson 2003, ப. 16
  2. Duffy 1979, ப. 23–25
  3. Liddiard 2005, ப. 2, 6–7

உசாத்துணைகள்[தொகு]

  • Coulson, Charles (2003), Castles in Medieval Society: Fortresses in England, France, and Ireland in the Central Middle Ages, Oxford: Oxford University Press, ISBN 0-19-927363-4
  • Duffy, Christopher (1979), Siege Warfare: The Fortress in the Early Modern World 1494–1660, London: Routledge & Kegan Paul, ISBN 0-7100-8871-X
  • Liddiard, Robert (2005), Castles in Context: Power, Symbolism and Landscape, 1066 to 1500, Macclesfield: Windgather Press Ltd, ISBN 0-9545575-2-2
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டையகம்&oldid=2866448" இலிருந்து மீள்விக்கப்பட்டது