கவைபிரி உயிரினத் தோற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவாய் தீவுகளுக்கு காற்றினாலும் கடலலையினாலும் சென்று ஒதுங்கிய உயிரினங்கள் படிமலர்ச்சிவழியாக பெருங்கண்டத்து உயிரினங்களிலிருந்து மாறுபட்டு இன்று வேறெங்கும் இல்லாத தனித்தன்மைகளுடன் விளங்குகின்றன.

கவைபிரி உயிரினத் தோற்றம் (Cladogenesis) என்பது படிவளர்ச்சிவழிப் பிரிதல் நிகழ்வாகும். இதில் ஒரு தாய் உயிரினம் வேறுபட்ட இரண்டு சேய் உயிரினங்களாகப் பிரிந்து விரிபடிவளர்ச்சிவழிப் பிரிகவையை உருவாக்குகிறது.[1]

சில உயிரினங்கள் புதிய தொலைவிடங்களை அடைய நேரும்போதோ, சூழல் பலமுறை பேரழிவுகளை உருவாக்கும்போது பல வெற்றிட வாழ்விடங்கள் உருவாகும்போதோ கவைபிரி உயிரினம் எப்போதும் உருவாகிறது. இந்த உயிரினங்களை நெடுந்தொலைவுக்குப் பிரிக்கும் நிகழ்வுகள் அதேநேரத்தில் அவை திறம்பட வாழவும் இனப்பெருக்கம் செய்யவும் சூழலுக்குத் தக மேலும் படிமலரவும் சமவாய்ப்புகளையும் தருகின்றன.[2] கவைபிரி உயிரினத் தோற்றத்துக்கான வாழும் எடுத்துக்காட்டாக அவாய்த் தீவுத் தொடரைக் கூறலாம். இவ்விடத்துக்குப் பல அருகிய உயிரினங்கள் கடல் நீரோட்டம் வழியாகவும் காற்றோட்டம் வழியாகவும் வந்து சேர்ந்துள்ளன. விரிபடிவளர்ச்சியால் உருவாகிய இவையொத்த உயிரினங்கள் புவியில் வேறெங்குமே காணப்படவில்லை.

கவைபிரி உயிரினத் தோற்றம் நேர் உயிரினத் தோற்றத்துக்கு (anagenesis) முரண்பட்டதாகும். நேர் உயிரினத் தோற்றத்தில் ஒரு மூதாதை உயிரினம் படிப்படியான மாற்றங்களின் திரள்வால் போதுமான அளவுக்கு வேறுபாடுற்றுக் கணிசமான அளவு தனியினமாகிப் புது வடிவச் சிறப்பினமாகிறது. இங்குத் தொகுதிக் கால்வழியில் கிளைபிரிவேதும் ஏற்படுவதில்லை.

கவைபிரி உயிரினத் தோற்றப் பகுப்பில் ஓர் உயிரினம் அமைதலை நிறுவவோ மறுக்கவோ பல முறைகளும் சான்றுகளும் உள்ளன. இதற்கு அறிவியலார் பயன்படுத்தும் சில முறைகள், ஒவ்வொன்றுக்கும் உரிய விளக்கம் அல்லது சான்றுடன், கீழே தரப்பட்டுள்ளன.

  • நிகரியாக்கங்கள் (Simulations): இதற்கு ஏற்கனவே அறிந்த உயிரினங்களின் குருணைத்திரி / இழைமணித் (mitogandrial) தகவல்களைத் திரட்டி, அத்தகவல்களைக் கணினியில் இட்டு பல்வேறுபட்ட சூழல் நிலைமைகளை ஆயலாம். இதனால் உயிரினம் உருவாகியதற்குக் கவைபிரிவுதான் காரணமாவென உறுதிபடுத்திக் கொள்ளலாம். இவ்வகைக் கணினி ஆய்வு நடைமுறையில் மிக எளியது. பல நேரங்களில் தனிநேர்வுகளின் ஆய்வும் செய்முறை உருவாக்கமும் ஏராளமான செலவுதருவனவாகவும் காலம்பிடிப்பனவாகவும் அமைகின்றன. எனவே கணினியில் தகவலையிட்டு பல்வேறு வாய்ப்புநிலைகளை ஆய்ந்து பார்ப்பது எளிதானதாகவும் துல்லியமானதாகவும் அமைகின்றது.
  • புறதோற்ற / தொல்லுயிரியல் ஆய்வு: ஒரேநேரத்தில் ஈருயிரினங்கள் நிலவினவா என்பதைத் தொல்லுயிர் எச்சங்களில் இருந்து உறுதிபடுத்தலாம். என்றாலும் இதில் சில குறைபாடுள் உண்டு.ஏனெனில், தொல்லுயிர் எச்சங்கள் முழு உருவக் கணிப்பிற்குப் பிறகே அவற்றை வேறுபடுத்தமுடியும்.
  • மூலக்கூற்றுச் சான்று: ஓர் உயிரினத்தின் மரபுத்தொகை அல்லது டி.என்.ஏ விரிபடிமலர்ச்சிக்கு ஆட்பட்டுள்ளதா என மூலக்கூற்றுத் தகவல்களைக் கொண்டு அறிந்து கொள்ளலாம். இதனுடன் தொல்லுயிர் எச்சத் தகவல்களை இணைத்து இரண்டு வேறுபட்ட உயிரினங்கள் நிகரான மூதாதையில் இருந்து தோன்றியனவா என்றும் ஒரேநேரத்தில் அவை நிலவினவா என்றும் உறுதிபடுத்தலாம்.
  • படிமங்கள்: இதில் வாழும் இரண்டு உயிரினங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.ஏற்கனவே நிலவியதாகக் கருதப்பட வாய்ப்புடைய முந்தைய சூழல்களில் அவை செய்முறைக்கு ஆட்படுத்தப்படுகின்றன. அதன்வழியாக இருவேறுபட்ட உயிரினங்கள் நிலவுவதற்கு கவைபிரிவுதான் காரணமா அல்லது வேறு விளக்கமேதும் உண்டா என முடிவு செய்யப்படுகிறது. இதுதான் உயிரினத் தோற்றத்தை அளந்தறியும் துல்லியமான முறையாகும். ஏனெனில், இவை கணினி முடிவுகளைப் போல உருவாக்கப்பட்ட முடிவுகளல்ல. மாறாக இவை மெய்யான வாழ்க்கை முடிவுகளாகும்.

இவை உயிரினத் தோற்ற நிகழ்ச்சி கவைபிரிவகையா நேர்மாற்றவகையா என அறிவதற்கான சில வழிமுறைகளே. அறிவியலார் உயிரினங்களுக்கு இடையில் நிலவும் உறவு அறியவும் அவை பிரிவதற்கான காரணங்களை அறியவும் பல புதிய முறைகளைக் கண்டுபிடித்தவண்ணம் உள்ளனர்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Gould, Stephen Jay, & Eldredge, Niles (1977). "Punctuated equilibria: the tempo and mode of evolution reconsidered." பரணிடப்பட்டது 2014-06-24 at the வந்தவழி இயந்திரம் Paleobiology 3 (2): 115-151. (p.145)
  2. Strotz LC, Allen AP. Proc Natl Acad Sci U S A. 2013 Feb 19; 110(8):2904-9. Epub 2013 Feb 1