தெ. இரா. மகாலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டி. ஆர். மகாலிங்கம்
டி. ஆர். மகாலிங்கம் (1950களில்)
பிறப்பு(1924-06-16)16 சூன் 1924
தென்கரை, சோழவந்தான், மதுரை
இறப்புஏப்ரல் 21, 1978(1978-04-21) (அகவை 53)
பணிநடிகர்
அறியப்படுவதுநடிகர், பாடகர், இயக்குனர்
சமயம்இந்து
பெற்றோர்இராமகிருஷ்ண கனபாடிகள், லட்சுமி

தென்கரை இராமகிருஷ்ணன் மகாலிங்கம் அல்லது பொதுவாக டி. ஆர். மகாலிங்கம் (16 சூன் 1924 - 21 ஏப்ரல் 1978)[1] 1940 – 1950களில் பிரபலமாகயிருந்த ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். உச்சத்தொனியில் பாடும் திறமை பெற்ற இவர் நடித்த காதல் மற்றும் பக்திப்பாடல்கள் இவருக்குப் பெயர் வாங்கித் தந்தன.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

மதுரை மாவட்டம், சோழவந்தானை அடுத்துள்ள தென்கரை என்ற ஊரில் பிறந்த மகாலிங்கம்[2] ஐந்து வயதில் இருந்தே மேடையேறி நாடகங்களில் நடிக்கவும் பாடவும் செய்தார். சோழவந்தான் அருகே இருந்த செல்லூர் சேச அய்யங்கார் மிருதங்கமும் பாட்டும் மகாலிங்கத்துக்கு சொல்லிக் கொடுத்தார். அவரது குழுவுடன் மடங்களிலும் கோவில்களிலும் பஜனை பாடும் வாய்ப்பு மகாலிங்கத்துக்கு கிடைத்தது. பிரபல பாடகர் எஸ். சி. கிருஷ்ணன் அவரது நெருங்கிய நண்பர். அந்தக் காலத்தில் ஒலிபெருக்கிகள் அதிகமாக இல்லாததால் பாடகர்கள் மிகவும் சத்தமாகப் பாட வேண்டியிருந்தது. அதனால் அக்காலத்துப் பாடகர்கள் எஸ். ஜி. கிட்டப்பா, மகாலிங்கம், எஸ்.சி.கிருஷ்ணன், எம். கே. தியாகராஜ பாகவதர் மற்றும் டி. எம். செளந்தரராஜன் வரை தங்கள் குரலை அதற்குத் தகுந்தவாறு பக்குவப்படுத்த வேண்டியிருந்தது.

பாய்ஸ் நாடகக் கம்பனியில் எஸ். ஜி. கிட்டப்பாவின் வாரிசு எனப் புகழடைந்திருந்த மகாலிங்கத்துக்கு 13 ஆவது வயதிலேயே திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 12 ஆவது வயதில் மகாலிங்கம் ஒரு நாடகத்தில் நடித்த போது அவரின் பாட்டை கேட்ட ஏ. வி. மெய்யப்பச் செட்டியார், ஏவிஎம் இன் பிரகதி பிக்சர்ஸ் நிறுவனத்தின் நந்தகுமார் (1938) படத்தில் இவரை பதின்ம வயது குறும்பு நிறைந்த கண்ணனாக அறிமுகப்படுத்தினார். எஸ். வி. வெங்கட்ராமன் இசை அமைத்த பாடலைப் பாடியபடியே அதில் அறிமுகமானார் மகாலிங்கம். கிருஷ்ணரைப் பற்றி தமிழ், இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் எடுக்கப்பட்ட இப்படம் அதிக வெற்றி பெறவில்லை. ஆனாலும் இப்படத்தின் பாடல்கள் பிரபலமாயின. அதன் பின்னர் துணை நடிகராக பிரகலாதா, சதிமுரளி, வாமன அவதாரம், பரசுராமர் போன்ற படங்களில் பாடி நடித்துப் புகழ் பெற்றார்.

திரைப்படங்களில் நடித்தாலும் நாடகங்களிலும் தொடர்ந்து நடித்தார். வள்ளி திருமணம், பவளக்கொடி போன்ற நாடகங்கள் இவருக்குப் பெரும் புகழைத் தந்தது.

இரண்டாம் உலகப் போர் காலத்தில் 1945 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி படத்தில் இவரை கதாநாயகனாக ஏ. வி. மெய்யப்பச் செட்டியார் அறிமுகப்படுத்தினார். அப்படம் இவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. அப்படத்தில் அவர் முருகனாக நடித்திருந்தார். இவர் நடிகராகவும், பாடகராகவும் திரைப்படத்துறையில் நிலையான இடத்தைப் பிடிப்பதற்கு அப்படம் பெரிதும் காரணமாக இருந்தது. 55 வாரங்கள் இத்திரைப்படம் தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது. அடுத்து நாயகனாக நடித்த நாம் இருவர், ஞானசௌந்தரி, வேதாள உலகம், ஆதித்தன் கனவு, மாயாவதி போன்ற வெற்றியை ஈட்டின.

இதன் பிறகு தானே சொந்தமாக படங்களை தயாரிக்கும் முடிவுடன் சிறீசுகுமாரன் புரோடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். மச்சரேகை என்ற படத்தை தயாரித்தார். அது சுமாராக ஓடியது. அதனையடுத்து சின்னதுரை, விளையாட்டு பொம்மை போன்ற படங்களின் தோல்வியால் தன் சொத்துக்களை இழந்தார். அடுத்துவந்த நான்கு ஆண்டுகள் பட வாய்ப்புகள் இன்றி இருந்தார். நான்கு ஆண்டுகள் கழித்து மாலையிட்ட மங்கை வெற்றிப் படத்தின் மூலமாக திரையுலகில் மீண்டுவந்தார். அதன்பிறகு ம. கோ. இராமச்சந்திரன், சிவாஜி கணேசன் ஆகியோரின் எழுச்சிவரை இவரது வெற்றிப் பயணம் தமிழ்த் திரையுலகில் தொடர்ந்தது.[3]


நடித்த திரைப்படங்கள்[தொகு]

  1. நந்தகுமார் (1937)
  2. பூலோக ரம்பை (1940)
  3. சதி முரளி (1940)
  4. தயாளன் (1941)
  5. பிரகலாதா (1941)
  6. நந்தனார் (1942)
  7. மனோன்மணி (1942)
  8. ஸ்ரீ வள்ளி (1945)
  9. நாம் இருவர் (1947)
  10. ஞானசௌந்தரி (1948)
  11. வேதாள உலகம் (1948)
  12. ஆதித்தன் கனவு (1948)
  13. பவளக்கொடி (1949)
  14. மாயாவதி (1949)
  15. இதய கீதம் (1950)
  16. லைலா மஜ்னு) (1950)
  17. மச்சரேகை (1950)
  18. மோகனசுந்தரம் (1951)
  19. வேலைக்காரன் (1952)
  20. சின்னதுரை (1952)
  21. விளையாட்டு பொம்மை (1954)
  22. மாலையிட்ட மங்கை (1958)
  23. அபலை அஞ்சுகம் (1959)
  24. மணிமேகலை (1959)
  25. அமுதவல்லி (1959
  26. ரத்தினபுரி இளவரசி (1960)
  27. ஆடவந்த தெய்வம் (1960)
  28. கவலை இல்லாத மனிதன் (1960)
  29. தந்தைக்குப்பின் தமையன் (1960)
  30. ஸ்ரீ வள்ளி (1961)
  31. திருவிளையாடல் (1965)
  32. திருநீலகண்டர் (1972)
  33. அகத்தியர் (1972)
  34. ராஜ ராஜ சோழன் (1973)
  35. ஸ்ரீ கிருஷ்ணலீலா (1977)
  36. தெருப்பாடகன்
  37. பண்ணையார் மகள்
  38. என்னைப் பார்
  39. திருமலை தெய்வம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "தந்தையின் கடனை அடைத்த மகள்!". தி இந்து. 19 சூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 23 சூன் 2015.
  2. பாலா சங்குப்பிள்ளை, திரையுலகில் மூவேந்தர்களுடன் போட்டியிட்டு முதன்மையாகத் திகழ்ந்த ரி.ஆர்.மகாலிங்கம், வீரகேசரி, சூன் 4, 2011
  3. "ஜூன் 16, 1924 - டி.ஆர். மகாலிங்கம் நூற்றாண்டு: நினைவில் வாழும் கந்தர்வக் குரல்!". Hindu Tamil Thisai. 2023-06-16. பார்க்கப்பட்ட நாள் 2023-06-22.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெ._இரா._மகாலிங்கம்&oldid=3899339" இலிருந்து மீள்விக்கப்பட்டது