பர்மா பசார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பர்மா பசார் எனப்படுவது மியன்மாரில் இருந்து நாடு திரும்பிய மியன்மார் தமிழர்களுக்காக தமிழக அரசு சென்னை நகரத்தில், மெரினா கடற்கரை ஒட்டிய, பாரிமுனை பகுதியில் அமைத்துக் கொடுத்த ஒரு சந்தைத் தொகுதி ஆகும். இது பாரிமுனை எனும் பகுதியில், சென்னைக் கடற்கரை தொடருந்து நிலையத்தின் எதிரில் உள்ளது. 1969ம் ஆண்டு தமிழக அரசினால் இந்த கடைத்தொகுதி அமைக்கப்பட்டது. சுமார் 200 கடைகளை ஒரு வரிசையில் கொண்டமைந்துள்ள இந்த கடைத்தொகுதி ஒரு கிலே மீட்டர் நீளமாக பகுதியில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

பர்மா பஜாரானது 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கும் கந்தசாமிக் கோவிலைச் சுற்றி இருந்துள்ளது. ஆனால் அது பர்மாபசார் என அப்போது அழைக்கப்படவில்லை. குஜிலி பஜார் என்ற பெயரில் இருந்துள்ளது. காரணம் அங்கு குஜிலி பாட்டுப் புத்தகங்கள் விற்கப்பட்டதால் அப்பெயர் பெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலமான அப்போது அது ‘தீவ்ஸ் பஜார்’ என்றும் அழைக்கப்பட்டது. காரணம் அங்கு முடிச்சவிக்கிகள் (ஜேப்படி திருடர்கள்) அதிகமாக இருந்ததுதான். இந்த ‘தீவ்ஸ் பஜார்’ பற்றி 1913இல் வெளியான ’விஷ்ணு ஸ்தல மஞ்சரி' இதழில் “வேடிக்கை பார்ப்பதிலேயே மனம் செலுத்தாமல் அப்போதுக்கப்போது தங்களுடைய ஜேபியிலும் மடியிலும் வைத்திருக்கும் பணப் பைகளைக் கவனித்து வர வேண்டும். இவ்விடத்தில் முடிச்சவிழ்க்கும் பேர்வழிகள் அதிகம் என்று மயிலை கொ. பட்டாபிராம முதலியார் எழுதியுள்ளார். 1925ஆம் ஆண்டு வெளியான ‘பஞ்சாமிர்தம்’ இதழில் எழுத்தாளர் அ. மாதவையா இதைப்பற்றி விரிவாக எழுதியுள்ளார்.[1]

1960களில் பர்மாவிலிருந்து வந்த அகதிகளுக்கு அங்கு அரசாங்கம் இடம் ஒதுக்கியதால், அன்று முதல் அது பர்மா பஜார் என்று அழைக்கப்படுகிறது. இந்த பஜாரில் உள்ள வணிகர்களின் நலனுக்கான அமைப்பாக 1966 ஆம் ஆண்டு முதல் பர்மா தமிழர் மறுமலர்ச்சி சங்கம் இயங்கிவருகிறது.[2]

பஜார்[தொகு]

சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே சுமார் ஒரு கிலோமீட்டர் நீளத்துக்கு இந்த பஜார் உள்ளது. பஜாரில் சுமார் 200 கடைகள் உள்ளன. தொடர்வண்டி நிலையத்தில் இருந்து பல பயணிகள் தொடர்ந்து வெளியே வருவதால், சந்தை எல்லா நேரங்களிலும் பரப்பரப்பாகவே இருக்கிறது.   ஒரு வாரத்துக்கு 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் இந்தப் பாதையைக் கடந்து செல்லுகிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.[2]

2017 ஆண்டு மதிப்பீட்டில், இங்கு உள்ள 600க்கும் மேற்பட்டக் கடைகள் உள்ளதாகவும், அதில் 5,000க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கின்றனர் எனப்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. முகமது ஹுசைன் (4 ஆகத்து 2018). "குஜிலிப் பாட்டுத் தெரு". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 6 ஆகத்து 2018.
  2. 2.0 2.1 "Buzz hour". The Hindu. 9 May 2007 இம் மூலத்தில் இருந்து 23 மார்ச் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080323163340/http://www.hinduonnet.com/thehindu/mp/2007/05/09/stories/2007050950010100.htm. பார்த்த நாள்: 16 Mar 2014. 
  3. Sanjay Vijayakumar, Sangeetha Kandavel (29 June 2017). "Chennai’s grey markets remain fuzzy about GST". The Hindu (Chennai: The Hindu). http://www.thehindu.com/news/cities/chennai/chennais-grey-markets-remain-fuzzy-about-gst/article19166734.ece. பார்த்த நாள்: 2 July 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்மா_பசார்&oldid=3577714" இலிருந்து மீள்விக்கப்பட்டது