காரல் கிரவுல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காரல் கிரவுல் (Karl Graul பிப்பிரவரி 6, 1814--நவம்பர் 10, 1864[1]) என்பவர் செருமனி நாட்டைச் சேர்ந்த கிறித்தவப் பாதிரியார் ஆவார். காரல் கிரவுல் 1849 முதல் 1853 வரை தமிழகத்தில் மறைப் பணியும் தமிழ்ப் பணியும் செய்தார். திருக்குறளைத் தம் தாய் மொழியான செருமனியில் மொழியாக்கம் செய்திருந்தார். அவர் இறந்து சில நாள்களுக்குப் பின் "DER KURAL DES THIRUVALLUVER" என்னும் பெயரில் திருக்குறளின் செருமன் மொழிபெயர்ப்பு நூல் வெளிவந்தது.

பிறப்பு, படிப்பு, பணி[தொகு]

செருமனியில் உள்ள ஓயார்சித்ஸ் என்னும் சிற்றுரில் ஒரு எளிய நெசவுத் தொழில் புரிந்த குடும்பத்தில் பிறந்தார். செருமனியில் இருக்கும் போதே தமிழ் மொழியைக் கற்றார். லெய்ப்சிக் இவாஞ்சலிக்கல் லூத்தரன் மிசனனின் முதல் இயக்குநராக 1844 ஆம் ஆண்டில் காரல் கிரவுல் இந்தியாவுக்கு அனுப்பப் பட்டார். கிறித்தவ மதக் கருத்துகளைப் பரப்பும் நோக்கத்தில் தமிழகத்துக்கு வந்த செருமானியர்கள் அக்காலத்தில் தமிழ் இலக்கியத்தின் சிறப்புகளை அறிந்து தமிழ் மொழியைக் கற்கத் தொடங்கினர். தமிழகம் வந்தவுடன் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ள விரும்பிய காரல் கிரவுல் சீர்காழிக்குச் சென்று தமிழ்ப் புலவர் நல்லதம்பியிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுக் கொண்டார்.

தமிழ்ப்பணி[தொகு]

வாழை மரம், தென்னைமரம், பனை மரம், கமுகு, ஆல் ஆகியன பற்றி செருமானியத்தில் கவிதைகள் புனைந்தார். 1853இல் லிப்சிக் திரும்பியதும் தமிழ் மொழியையும் இலக்கிய இலக்கணங்களையும் மிசன் மனையில் அங்கு வசித்த செருமானியருக்கு சொல்லிக் கொடுத்தார். தமிழ் இலக்கணத்தை செருமன் மொழியில் எழுதினார். அவர் இறக்கும் தறுவாயில் தாம் எழுதி வைத்திருந்த திருக்குறள் செருமன் மொழிபெயர்ப்பை அச்சிட்டு வெளியிடுமாறு வேண்டினார். அவ்வாறே அவர் மறைந்து சில நாள்களில் அந்நூல் வெளியிடப்பட்டது.

சான்று[தொகு]

நினைக்கப்பட வேண்டியவர்கள்-நூல், பதிப்பு உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை, சிகாகோ,அமெரிக்கா.

குறிப்புகள்[தொகு]

  1. Biographical Dictionary of Christian Missions p. 257
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரல்_கிரவுல்&oldid=2306976" இலிருந்து மீள்விக்கப்பட்டது