புரி ஜெகன்நாதர் கோயில்

ஆள்கூறுகள்: 19°48′17″N 85°49′6″E / 19.80472°N 85.81833°E / 19.80472; 85.81833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரி ஜெகன்நாதர் கோயில்
ஜெகன்நாதர் கோயில், புரி
புரி ஜெகன்நாதர் கோயில் is located in ஒடிசா
புரி ஜெகன்நாதர் கோயில்
புரி ஜெகன்நாதர் கோயில்
ஒடிசாவில் ஜெகன்நாதர் கோயில், புரி
ஆள்கூறுகள்:19°48′17″N 85°49′6″E / 19.80472°N 85.81833°E / 19.80472; 85.81833
பெயர்
பெயர்:ஸ்ரீ மந்திரம் (ଶ୍ରୀ ମନ୍ଦିର), Bada Deula (ବଡ଼ ଦେଉଳ)
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:ஒடிசா
மாவட்டம்:புரி
அமைவு:பெரிய தெரு, புரி
கோயில் தகவல்கள்
மூலவர்:ஜெகன்நாதர்
சிறப்பு திருவிழாக்கள்:புரி தேரோட்டம்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கலிங்க பௌத்த கட்டிடக் கலை
வரலாறு
கட்டப்பட்ட நாள்:பொ.ஊ. 1161
அமைத்தவர்:ஆனந்தவர்மன், கீழைக் கங்க குல அரசர்
இணையதளம்:http://jagannath.nic.in/

ஜெகன்நாதர் கோயில் அல்லது ஜெகந்நாதர் கோயில் (Jagannath Temple) இந்தியாவின் கிழக்கு கடற்கரையில், ஒடிசா மாநிலத்தில், புரி அல்லது பூரி கடற்கரை நகரத்தில் அமைந்த வைணவத் திருக்கோயில் ஆகும். இக்கோயில் ஜெகன்நாதர், பலபத்திரர் மற்றும் சுபத்திரைக்கு அர்பணிக்கப்பட்ட கோயிலாகும்.[1] முகம் மற்றும் கைகள் மட்டுமே காணும் வகையில் அமைந்த இக்கோயிலின் மூலவர்களான ஜெகன்நாதர், பலபத்திரர் மற்றும் சுபத்திரையின் திருமேனிகள் மரத்தால் ஆனவை. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இம்மூலத் திருமேனிகள் உரிய சடங்குகளுடன், புதிய மரத்தால் செதுக்கி அமைக்கப்படும்.[2]

இக்கோயில் பொ.ஊ. 12ஆம் நூற்றாண்டில் கீழைக் கங்கர் குல அரசன் ஆனந்தவர்மன் சோடகங்கனால் கட்டப்பட்டது.[3][4] இக்கோயிலின் மூலவர்களான ஜெகந்நாதர், பலபத்திரர், சுபத்திரை தனித் தனியாக மூன்று தேர்களில் ஏறி ஊரை ஊர்வலம் வரும் நிகழ்வான ரத யாத்திரை திருவிழா ஆண்டிற்கு ஒரு முறை, ஆடி பௌர்ணமி அன்று துவங்கி ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது.[5]

சைதன்ய பிரபு, புரி ஜெகந்தாதரால் கவரப்பட்டு பல ஆண்டுகள் புரியில் வாழ்ந்தவர். ஜெயதேவர் மற்றும் சாது ராமானந்தரும் இக்கோயிலுடன் தொடர்புடையவர்.[6]

தேர்த் திருவிழா[தொகு]

உலகப் புகழ் வாய்ந்த பூரி ஜெகநாதர் கோயில் தேரோட்டத் திருவிழா ஆண்டு தோறும் 9 நாட்கள் நடைபெறும். தேரோட்டத் திருவிழாவில், இலட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் நாடு முழுவதிலிருந்து கலந்து கொள்கிறார்கள்.

தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு, 16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, மஞ்சள் நிறத் தேரில் உற்சவ மூர்த்தியான பூரி ஜெகன்நாதரும், 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய தேரில் பலபத்திரரும் 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கறுப்பு நிறத் தேரில் சுபத்ரா தேவியும் எழுந்தருள்வர்.

பாரம்பரிய வழக்கப்படி, தேரோடும் 'ரத்ன வீதி'யைத் தங்கத் துடைப்பத்தால் பூரி நகர மன்னர் கஜபதி பெருக்கிச் சுத்தம் செய்வார். முதலில் பலபத்திரர் தேரும், அதன் பின்னர் சுபத்ரா தேவி எழுந்தருளிய தேர்கள் புறப்பட்ட பின்பு, இறுதியாக ஜெகன்நாதர் எழுந்தருளிய தேர் புறப்படும்.

குண்டிச்சா கோவில் நோக்கிச் செல்லும் ரத யாத்திரியின் ஒரு பகுதியாக, வழியில் உள்ள மவுசிமா கோவிலில் ஜெகன்நாதர் ஓய்வு எடுப்பார். அங்கிருந்து மீண்டும் தேர்கள் புறப்பட்டு புரி ஜெகன்நாதர் கோயிலை வந்தடையும்.

தேரோட்டத்திற்காக ஆண்டுதோறும் 45 அடி உயரமும் 35 அடி அகலமும் கொண்ட புதிய தேர் மரத்தால் கட்டப்படுகிறது.

கோவிலின் தல வரலாறு[தொகு]

மரத்தால் செய்யப்பட்ட பலபத்திரர்-சுபத்திரை-ஜெகன்நாதர் உருவச்சிலைகள்

ஜரா என்ற வேடன் எய்த அம்பு பட்டு கிருஷ்ணர் மரணத்தை தழுவினார், பின்னர் அவரது உடல் ஒரு பெரிய மரக்கட்டை போல ஆனது. புரியை ஆண்டு வந்த இந்திரத்துய்மன் எனும் அரசனின் கனவில் கிருஷ்ணன் கூறியவாறு, புரி கடலில் மிதந்து வரும் ஒரு பொருளைக் கொண்டு சிலையை செதுக்குமாறு பெருமாள் கூறினார். ஒரு அந்த பெரிய மரக்கட்டை கடலில் மிதந்து வந்தது. அதைக் கொண்டு காவலர்கள் எடுத்துச் சென்று அரசனிடம் ஒப்படைத்தனர். அரசன் அந்த மரக்கட்டைக்கு பெரிய பூஜைகள் நடத்தி தச்சர்களை அழைத்து பெருமாள் சிலை செய்யும்படி கூறினார். தச்சர்களின் தலைவர் சிலை செய்வதற்காக அந்த மரத்தில் உளியை வைத்தவுடன் உளி உடைந்துவிட்டது. அப்போது அவர் முன்பு பெருமாள் ஒரு முதிய தச்சனைப் போல வேடமணிந்து தோன்றினார். அரசனிடம் 21 நாட்களில் இந்த வேலையை முடித்து தருவதாகவும், அதுவரை தான் வேலைசெய்யும் அறையை யாரும் திறக்கக் கூடாது என்றும் கூறினார். அதற்கு அரசனும் ஒப்புக்கொண்டார். 15 நாட்கள் அந்த அறையின் உள்ளிருந்து உளிச்சத்தம் கேட்டது. எனவே அரசன் வேலை மும்முரமாக நடக்கிறது என எண்ணி அந்த அறைப்பக்கம் போகவில்லை. அதையடுத்து மூன்று நாட்கள் சத்தமே இல்லை. இதனால் தச்சர் தூங்கிவிட்டாரோ என எண்ணி, அரசன் அவசரப்பட்டு கதவைத் திறந்து விட்டான். உடனே தச்சர் கோபமடைந்தார். மூன்று நாட்கள் சத்தம் வரவில்லை என்றதும் எனது அறைக்கதவை திறந்துவிட்டாய். எனவே இந்தக் கோயிலில் நீ ஸ்தாபிக்கும் சிலைகள் அரைகுறையாகவே இருக்கும். அப்படி இருந்தாலும் பரவாயில்லை. அப்படியே பிரதிஷ்டை செய்துவிடு. இந்த கோயிலுக்கு வருபவர்கள் சிலையைப் பார்த்துவிட்டு பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செல்வார்கள் என்று அருள்பாலித்தார். அந்த அறையில் வேலை முடியாத நிலையில் ஜெகந்நாதர், பலராமன், சுபத்திரா ஆகியோரின் சிலைகள் இருந்தன. அந்த சிலைகளையே அரசர் பிரதிஷ்டை செய்தார்.

இந்திர தையுமாவின் காலத்திற்கு பிறகு அவர் கட்டிய பழைய கோயில் பாழடைந்து விட்டது. அதன்பிறகும் அந்த இடத்தில் பல கோயில்கள் கட்டப்பட்டன. அவற்றையும் கடல் மூழ்கடித்து விட்டது. தற்போதைய கோயில் ஏறக்குறைய பொ.ஊ. 1135இல் அரசர் அனந்தவர்மனால் துவக்கப்பட்டு, 1200ம் ஆண்டில் இவரது பேரன் அனங்காபி மாதேவ் என்ற அரசனால் முடிக்கப்பட்டது. இது பஞ்சரத முறைப்படி அமைக்கப்பட்ட ஆலயமாகும். இவ்வாலயத்தின் மேற்கில் எட்டு உலோகக் கலவையால் செய்யப்பட்ட நீலச்சக்கரம் உள்ளது. ஆலயக் கொடிமரம் ஏழைகளுக்கு அருள்பவன் என்னும் பொருளில் பதீதபவன் பாவனா என்று அழைக்கப்படுகிறது. இவை இரண்டையும் வணங்கினாலே ஜெகந்நாதரின் அருளைப் பூரணமாகப் பெறலாம் என்கிறார்கள். இராமாயணத்தில் இராமபிரானும், மகாபாரத்தில் பாண்டவர்களும் இங்கே வந்து வேண்டிக்கொண்டதாக புராணங்கள் கூறுகிறது.[7]

பக்தை கருமாபாய்[தொகு]

பூரியில் கருமாபாய் என்ற பக்தை வசித்தாள். அவளுக்கு சோதனைகள் பல இருந்தும் தினமும் அதிகாலையில் கோயிலுக்குச் சென்று ஜெகந்நாதப்பெருமாளை தரிசனம் செய்த பின்னே, வேலைகளைத் தொடங்குவாள். பாண்டுரங்க பக்தர் ஒருவர் கருமாபாயின் வீட்டிற்கு வந்தார். அவருக்கு அன்னமிடும் பாக்கியம் தனக்குக் கிடைத்ததை எண்ணி அவள் மகிழ்ந்தாள். உங்களுக்கு நேர்ந்த துன்பம் என்ன என்பதைக் கூறுங்கள், என்றார் வந்தவர். கருமாபாய், எனக்கு திருமணமாகி குழந்தை பிறந்தது. ஆனால், தாய்மை அடைந்த சில மாதங்களிலேயே என் கணவர் இறந்து விட்டார். இருந்தாலும், வைராக்கியத்துடன் அவனை வளர்த்து ஆளாக்கினேன். அவனுக்கு திருமணம் செய்து வைத்தேன். என் மகனும் ஒரு குழந்தைக்கு தந்தையானான். ஆனால், அப்போதும் என் வாழ்வில் விதி விளையாடியது. பேரன் பிறந்த சில மாதங்களிலேயே என் மகனும், மருமகளும் விபத்தில் சிக்கி இறந்து விட்டனர். தலையில் இடி விழுந்தது போல அதிர்ந்து போனேன். மிகுந்த சிரமத்திற்கிடையே என் பேரனை வளர்த்து வந்தேன். அப்போது பாழாய்ப் போன விதி என்னை விடுவதாக இல்லை. அவனும் நோய் வாய்ப்பட்டு இறைவனிடமே சென்று விட்டான். செய்வதறியாமல் நடை பிணமாகி விட்டேன். இதுவே, என் மன வேதனைக்கு காரணம், என்று கூறி அழுதாள். இந்த துக்க சம்பவங்களைக் கேட்ட பாண்டுரங்க பக்தர் மவுனமானார்.

அவர், இம்மண்ணில் பிறந்த உயிர் ஒருநாள் இறந்து தான் ஆகவேண்டும் என்பது விதி. இதிலிருந்து ஒருவரும் தப்பிக்க முடியாது. கடவுள் கொடுத்த இப்பிறவியைப் பயனுள்ளதாக்க வேண்டியது நம் கடமை. அதனால், பாண்டுரங்கனைத்தவிர வேறெந்த சிந்தனைக்கும் இடம் தராதீர்கள். உங்கள் கைகள் இரண்டும் அவனுக்கே பணி செய்யட்டும். கால்கள் அவன் திருக்கோயிலையே நாடட்டும். மனம் அந்த ரங்கனின் திருவடித் தாமரைகளையே சிந்தித்திருக்கட்டும், என்று ஆறுதல் வார்த்தை கூறினார். தான் கொண்டு வந்திருந்த பாலகிருஷ்ணன் விக்ரஹத்தை அவளிடம் கொடுத்த பக்தர், அம்மா! இந்த உலகில் நம்மோடு வரும் உறவுகளெல்லாம் தற்காலிகமானவையே. இந்த நீலமேக சியாமள வண்ணனே நமது நிரந்தர உறவினன். அவனே தாயாக, தந்தையாக, பிள்ளையாக, நண்பனாக இருந்து எப்போதும் காத்து நம்மைக் கரைசேர்ப்பவன், என்றவர், ஒரு மந்திரத்தையும் உபதேசம் செய்து, அதை தினமும் ஓதி மனச்சாந்தி பெறும்படி கூறி புறப்பட்டார்.

அன்றுமுதல் கருமாபாயும் சின்னக் கண்ணனின் நினைப்பிலேயே மூழ்கினாள். பாசம் மிக்க தாயாக, அந்தக் கண்ணன் சிலையை மடியில் வைத்துக் கொள்வாள். காலையில் துயில் எழுந்ததும் கண்ணனை நீராட்டுவாள். பட்டுச் சட்டை அணிந்து அலங்காரம் செய்வாள். கன்னத்தில் அன்போடு முத்தமிடுவாள். பால், அன்னம் வைத்து பாட்டுப் பாடி ஆராதனை செய்வாள். இதுவே அவளின் அன்றாடப் பணியாக மாறியது. ஒருநாள், அவள் பொழுது புலர்ந்தது தெரியாமல் ஏதோ அசதியில் அயர்ந்து தூங்கிவிட்டாள். கண் விழித்ததும் கண்ணன் ஞாபகம் வந்துவிட்டது. குளிக்காமலேயே அடுப்படிக்கு சென்று, பால் காய்ச்ச ஆயத்தமானாள். அப்போது, கருமாபாய்க்குத் தெரிந்த பெரியவர் ஒருவர் தற்செயலாக வந்தார். அவள் குளிக்காமல் அடுப்படியில் பால் காய்ச்சுவதைப் பார்த்து, "பக்திக்கு ஆச்சாரம் மிக முக்கியம் என்பது தெரியாதா? காலையில் குளித்த பின் தான் பகவானுக்குப் பிரசாதம் செய்ய வேண்டும் என்பது கூட தெரியாமல் பாவம் செய்கிறாயே!" என்றார்.

ஐயா! எங்கள் வீட்டுக் குட்டிக்கண்ணன் எழும் நேரமாகி விட்டது. பாவம்! குழந்தைக்குப் பசிக்குமே என்று குளிக்காமலேயே அடுப்படிக்கு வந்து விட்டேன், என்றாள். கருமாபாயின் பக்தியை உலகுக்கு உணர்த்த ஜெகந்நாதர் திருவுள்ளம் கொண்டார். அன்றிரவு கோயில் அர்ச்சகர் கனவில் தோன்றிய அவர், இவ்வூரில் கருமாபாய் என்னும் பரம பக்தை ஒருத்தி இருக்கிறாள். அவளிடம்சென்று, ஆச்சாரத்தை விட பக்தி தான் முக்கியம். குளிக்காமல் செய்தாலும், அவள் படைக்கும் பால் பிரசாதத்தை விருப்பத்தோடு நான் ஏற்று மகிழ்கிறேன், என்று தெரிவிக்கும்படி ஆணையிட்டார். பொழுது புலர்ந்ததும் கருமாபாயின் வீட்டுக்கு அர்ச்சகர் புறப்பட்டார். தான் கனவில் கண்ட காட்சியை அவளிடம் தெரிவித்தார். இவ்விஷயத்தைக் கேட்டதும் அவள் கண்கள் குளமானது. பூஜை அறைக்குச் சென்று, கண்ணனின் விக்ரஹத்தை மார்போடு அணைத்துக் கொண்டாள். அப்போது, ஜெகந்நாதப் பெருமான் சங்கு, சக்கரத்தோடு காட்சியளித்தார்.[8]

விமலா (பிமலா) தேவி சக்தி பீட சன்னதி[தொகு]

புரி ஜகந்நாதர் கோவில் வளாகத்தில் தென்மேற்கு மூலையில் ரோஹிணி குண்ட் அருகே விமலா தேவி (பிமலா தேவி) சக்தி பீட சன்னதி உள்ளது. இது சார் சக்தி தாம்கள் என்றும் ஆதி சக்தி பீடங்கள் என்றும் அழைக்கப்படும் நான்கு முக்கியமான சக்தி பீடங்களில் ஒன்றாகும். புரி செல்வோர் தவறாமல் இந்த தேவியையும் வழிபடுகிறார்கள்.[9]

கோவர்தன பீடம்[தொகு]

ஆதி சங்கரர் நிறுவிய நான்கு பீடங்களில் ஒன்றான கோவர்தன பீடம் புரியில் அமைந்துள்ளது.

போக்குவரத்து வசதிகள்[தொகு]

புவனேசுவரத்திலிருந்து 60 கி.மீ தொலைவில் புரியில் உள்ள இவ்வாலயத்திற்குச் செல்ல மும்பை, தில்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, அகமதாபாத், ஹைதராபாத் போன்ற முக்கிய நகரங்களிலிருந்து தொடருந்து வசதிகள் உள்ளன.

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-10-25. பார்க்கப்பட்ட நாள் 2015-04-12.
  2. Nugteren, Albertina (2010). "Weaving Nature Into Myth: Continuing Narratives Of Woood, Trees, And Forests In The Ritual Fabric Around The God Jagannath In Puri". Journal For The Study Of Religion, Nature And Culture 4.2: 159–172. 
  3. Cesarone, Bernard (2012). "Bernard Cesarone: Pata-chitras of Odisha". asianart.com. பார்க்கப்பட்ட நாள் 2 July 2012. This temple was built in approximately 1135-1150 by Codaganga, a king of the Eastern Ganga dynasty
  4. "Chodaganga Deva". indiadivine.org. 2012. பார்க்கப்பட்ட நாள் 2 July 2012. Chodaganga Deva (1078-1150), the greatest of the Ganga kings, built a new temple on the ruins of the old one
  5. "Jagannath Temple History". Time. 1959-07-20 இம் மூலத்தில் இருந்து 2018-12-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225085743/http://content.time.com/time/magazine/article/0,9171,892784,00.html. 
  6. "Bhaktivedanta VedaBase". Archived from the original on 2007-09-30. பார்க்கப்பட்ட நாள் 2006-09-12.
  7. http://temple.dinamalar.com/New.php?id=1789
  8. http://temple.dinamalar.com/news_detail.php?id=13674
  9. http://en.wikipedia.org/wiki/Vimala_Temple

அடிக்குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lord Jagannath
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Rath Yatra
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chariot Festival Puri
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரி_ஜெகன்நாதர்_கோயில்&oldid=3786606" இலிருந்து மீள்விக்கப்பட்டது