இரண்டாம் கீர்த்திவர்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரண்டாம் கீர்த்திவர்மன் அல்லது ரஹப்பா (ஆட்சிக்காலம் கி.பி.746 - 753 ) என்பவன் சாளுக்கிய மரபின் ஆட்சியாளன் ஆவான். இவன் தனது தந்தை விக்ரமாதித்னுக்குப் பின் ஆட்சிப்பொறுப்பேற்றவன். . இவனது பரந்த ஆட்சி அதிகாரத்தை இராஷ்டிரகூடர்கள் மற்றும் பாண்டியர்கள் முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

பாண்டியர்களுடன் போர்[தொகு]

பாண்டியன் பராங்குசன் தனது எல்லையை விரிவாக்கும் பொருட்டு கங்க நாட்டின் மீது படையெடுத்து வந்தான். கங்கமன்னன் சிறீபுருசன் சாளுக்கியரின் மேலாட்சியை ஏற்றிருந்ததால் இவனுக்கு ஆதரவாக கீர்த்திவர்மனும் தனது படைகளுடன் போர்க்களத்திற்கு வந்தான். கி.பி.740 அல்லது 741ல் காவிரிக்கரையில் வேண்பை என்ற இடத்தில் நடந்த போரில் பாண்டியன் பராங்குசன் பெருவெற்றி பெற்றான்.

அதிகாரக் குலைவு[தொகு]

கீர்த்திவர்மனின் வலிமையைக்குறைக்கும் விதமாக இராஷ்டிரகூட தந்திதுர்கன் தனது பேரரசை வலிமைப்படுத்தினான். எல்லோராவைச் சுற்றித் தனது பேரரசை விரிவாக்கினான். சாளுக்கியப் பேரரசின் வடக்கு மாகாணங்களின் கட்டுப்பாட்டைக் குலைத்தான்.

மேலும் அவன் கிழக்கு மற்றும் தெலுங்கு மாகாணங்களில் சாளுக்கியரைச் சுற்றியுள்ள கலிங்கர் மற்றும் கோசல அரசர்களிடம் கூட்டணி அமைத்துக்கொண்டான். மேலும் தந்திதுர்கனின் கூட்டணியில் பல்லவன் நந்திவர்மனும் இணைந்துகொண்டான். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட கீர்த்திவர்மனுக்கு உதவிக்காக எந்த திசையிலும் திரும்ப முடியவில்லை.

கீர்த்திவர்மன் மீதான இறுதித் தாக்குதல் கி.பி. 752 இல் நடத்தினர். சாளுக்கியர் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டனர்.

இரண்டாம் கீர்த்திவர்மனே வாதாபி சாளுக்கியரில் இறுதி அரசன் ஆவான். 220 ஆண்டுகள் மேற்கு சாளுக்கியர் கிளை மீது கிரகணம் சூழ்ந்ததைப் போன்று இருந்தது. இரண்டாம் தைலப்பனால் 973 ஆண்டு இந்த மரபு மீண்டும் துளிர்த்தது.

மேற்கோள்[தொகு]

  • Nilakanta Sastri, K.A. (1955). A History of South India, OUP, New Delhi (Reprinted 2002).
  • Dr. Suryanath U. Kamat (2001). Concise History of Karnataka, MCC, Bangalore (Reprinted 2002).