தச மகா வித்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காளி, தாரா, திரிபுரசுந்தரி, புவனேசுவரி, பைரவி,
சின்னமஸ்தா, தூமாவதி, பகளாமுகி, மாதங்கி கமலாத்மிகா - பதின்பெருவித்தையர்

இந்து சமயத்தில் தச மகா வித்யா (Dasha-Mahavidya) என்பது ஆதிசக்தி (பார்வதி) தேவியின் பத்து உருவங்களை குறிக்கும். மகாவித்யா அல்லது தசமகாவித்யைகள் (பதின்பெருவித்தையர்) என்போர், பத்துத் தேவியரின் குழுமம் ஆகும். அளவற்ற கருணையும் எல்லையில்லாக் குரூரமும்[1] கொண்டவர்களாக, பெண்மையின் பெருந்தெய்வமாகிய பார்வதியின் அம்சங்களாக இவர்கள் விளங்குகின்றனர்.

தச என்றால் பத்து வித்யா என்றால் அறிவு எனப் பொருள். இந்தப் பத்து தேவிகளும் பெண்மையின் சக்தியை தாய்மை முதல் கோபம் வரை அனைத்து வடிவிலும் காட்டுபவர்கள். தசமகா வித்யா தேவிகளின் வருகை சாக்த மார்க்கத்தில் பக்தி என்ற வழியை காட்டியது. உருவாவதும் பெண்ணால், அழிவதும் பெண்ணால் என நம்பும் சாக்தர்கள், இந்த பத்து தேவிகளையும் உளமார வழிபட்டனர். தேவி பாகவத புராணத்தின் கடைசி ஒன்பது அதிகாரங்களில் ஏழாவதான "சண்டி" சாக்தர்களின் "தேவி கீதை" ஆனது. இந்த பத்து தேவிகளில் சில தேவியர் தாந்திரிகர்களால் மட்டும் ஆராதனை செய்யப்படுவர்.

சாக்தத்தின் வரலாற்றில், பெருவித்தையரின் தோற்றமும் வளர்ச்சியும், கி.பி 17ஆம் நூற்றாண்டில் உச்சம் பெற்ற சாக்த பக்தி இயக்கத்தின் முக்கியமான மைல்கற்களாகும். கி.பி ஆறாம் நூற்றாண்டளவில் புராண காலத்தில் தோன்றிய இவ்வழிபாடு, முழுமுதற்கடவுளை, பெண்ணாகப் போற்றியதுடன், தேவி பாகவத புராணம் முதலான நூல்களில், முக்கியமான வழிபாடுகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சாக்தத்தின் மையநூலாக மாறிய "தேவி கீதை", இதே நூலின் ஏழாம் காண்டத்தின் இறுதி ஒன்பது அத்தியாயங்களே (31 முதல் 40 வரை) என்பது குறிப்பிடத்தக்கது. [2]

பெயர்க் காரணம்[தொகு]

மகாவித்யா என்பது, சங்கதச் சொற்களான "மகா" (பெரும்), "வித்யா" (பெருந்தோற்றம், பேரறிவு, ஞானம்) ஆகியவற்றின் சேர்க்கையால் உருவானதாகும்.[2]

பெயர்கள்[தொகு]

"ஒருபெரும் உண்மையே, பத்து திருவடிவங்களில் விளங்குகின்றது. பேரன்னை ஒருத்தியே பத்து பேராளுமைகளாக - பதின்பெருவித்தைகளாகப் போற்றப்படுகிறாள்" என்பது சாக்தரின் நம்பிக்கை.[3]

தச மகா வித்யா தேவிகளின் பெயர்கள்:

காளிகா அம்மன்

1காளி – பரம்பொருளின் இறுதி வடிவம். காலத்தின் தேவியானவள் காலத்திற்கும், மாறுதல்களுக்கும் தேவியாகக் கருதப்படுகிறார். காளி என்பதற்கு 'காலம்' மற்றும் 'கருப்பு' என்று பொருள். காளனின் (ஈசன்) துணைவி தான் காளி. இவரே ஆதி பராசக்தி என்றும் அழைக்கப்படுகிறார். இவரைப் பற்றிய செய்திகள் அதர்வண வேதங்களிலும், தேவி மகாத்மியதிலும் விரிவாக வழங்கபட்டுள்ளது. இவரை வழிபடும் முறைகள் பல தந்திரங்களிலும் கூறப்பட்டுள்ளது. காளி தேவி காலங்களை கட்டுபடுத்தக்கூடியவர் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

2தாரா – தாரா, காளி போல கருப்பாக அன்றி, நீலமாகக் காட்சி தருவள். தாராவின் இடையில், புலித்தோலாடையும் கழுத்தில் மண்டையோட்டு மாலையும் காணப்படும். குருதி வடியும் செவ்விதழும் தொங்கிய நாக்கும் தாராவுக்கும் காளிக்குமிடையிலான இன்னோர் ஒற்றுமை. இருவரும் ஒன்றுபோலவே இருந்தாலும், தாந்திரீக நூல்கள், இருவரையும் வேறுபடுத்திக் காட்டுவதுடன், தாரா தாய்மை நிறைந்தவள் என்றும் கூறுகின்றன. எனினும், வங்காளப் பகுதியில் காளியே அதிகளவில் வழிபடப்படுகின்றாள்.வழிகாட்டியாய் பாதுகாவலியாகவும் விளங்கும் தெய்வம். மோட்சத்தைத் தரும் பேரறிவை வழங்கும் ""நீல சரசுவதி" எனும் பெருந்தெய்வமும் இவளே.


3திரிபுரசுந்தரி (ஷோடசி) – திரிபுரசுந்தரி சக்தி வழிபாட்டு முறையின் முதன்மைக் கடவுள். இலலிதை, இராசராசேசுவரி முதலான பெயர்களிலும் அழைக்கப்படுபவள், பத்து மகாவித்யாக்களில் ஒருத்தியாவாள். ஸ்ரீவித்யா என்றழைக்கப்படும் இவளது முடிந்த முடிவே ஏனைய மகாவித்யாக்கள் ஆகும். ஆதிசக்தியின் மிகவுயர் அம்சமான லலிதையே பார்வதியாகத் திகழ்கின்றாள். தாய் குழந்தையுடன் விளையாடுவது போல, லலிதை தன் அடியவர்களுடன் விளையாடுகின்றாள். மாயையின் வடிவமானதால், அவளே, மகாமாயையும் ஆகின்றாள் பேரழகி! தாந்திரீக நெறியின் பார்வதி. "மோட்சமுக்தி" என்றெல்லாம் போற்றப்படுபவள்.

4. புவனேசுவரி – பிரபஞ்ச வடிவாய்த் திகழும் அன்னை வடிவம். புவனேசுவரி இந்து சமய நம்பிக்கைகளில் மகாவித்யா சக்தியின் பத்து அம்சங்களில் நான்காவது சொரூபமாக விளங்குகின்றாள். பௌதீக உலகின் தோற்றத்திற்கு காரணமான மகா சக்தியாக வர்ணிக்கப்படுகின்றாள். மேலும், உலகின் தீயவற்றை அழிப்பவளாகவும், நல்லவற்றை உருவாக்குபவளாகவும் போற்றப்படுகின்றாள். இவளே சரஸ்வதி, இலக்குமி, காளி மற்றும் காயத்ரி முதலான தெய்வங்களின் தாய்த் தெய்வம் என்பர்.

5பைரவி – பைரவி என்பவர் ஒரு கொடூரமான மற்றும் திகிலூட்டும் இந்து தெய்வமும் தச மகாவித்யாக்களுள் ஒருவரும் ஆவார். அவர் கால பைரவரின் துணைவியார். பார்வதி தேவியின் அம்சமான பைரவி இந்துக்களால் வணங்கப்படுகிறாள். அஞ்சத்தகும் அன்னையின் வடிவம்

6சின்னமஸ்தா –சின்னமஸ்தா அல்லது அரிதலைச்சி, பத்து மகாவித்யா தேவதைகளில் ஒருத்தி. தன் தலையைத் தானே அரிந்து கையிலேந்தி, மறு கையில் கூன்வாள் ஏந்திக் காட்சி தரும் மிகக் குரூரமான வடிவம் இவளுடையது. "பிரசண்ட சண்டிகை" எனும் திருநாமமும் இவளுடையதே! தன் தலை தானே அரிந்த அன்னையின் தியாகத் திருவுருவம். [4]

7தூமாவதி –தூமாவதி என்பவள் பத்து மகாவித்யாக்களில் ஒருத்தி ஆவாள். "புகைத்தேவதை" எனப்பொருள் படும் பெயர்கொண்ட இவள், அன்னைத் தெய்வத்தின் குரூரமான வடிவங்களில் ஒன்றைத் தாங்கியவள். அசிங்கமான- வயதான விதவையாக இவள் சித்தரிக்கப்படுகிறாள். அமங்கலகரமான சந்தர்ப்பங்கள், தீய சகுனங்களுக்குரிய பறவையான காகம், பீடமாதங்கள் முதலியவை இவளுக்குரியவையாகச் சொல்லப்படுகின்றன. இறப்பின் தெய்வம், விதவையாய்க் காட்சியருள்பவள்.

8பகளாமுகி – பகளாமுகி பத்து மகாவித்யா தேவியரில் ஒருவர். தன் கையிலுள்ள தண்டத்தின் மூலம், பகளா, தன் அடியவர்களின் தீய எண்ணங்களையும் அவர்களது எதிரிகளையும் அழித்தொழிப்பதாகச் சொல்லப்படுகிறது. வடநாட்டில் "பீதாம்பரி அம்மை" என்ற பெயரில் இவள் வழிபடப்பட்டு வருகிறாள்.எதிரிகளை அடக்கியாளும் தேவதை. பகளம் என்றால் கடிவாளம் என்று பொருள்.


9மாதங்கி – லலிதாம்பிகையின் தலைமை மந்திரிணி அம்பிகை, மதங்கரின் மகளாக பிறந்தமையால் மாதங்கி என அழைக்கப்படுகிறார். இவருக்கு ராஜ மாதங்கி, ராஜ சியாமளா என்றும் வேறு பெயர்கள் உள்ளன. இந்தியாவின் வடபகுதியில் சியாமளா தேவி என்று அறியப்படுகிறார். இதற்கு நீலம் கலந்த பச்சை நிறம் என்று பொருளாகும். இந்த தேவி சாக்த வழிபாட்டில் சப்தமாதாக்களில் ஒருவராகவும், தசமகா வித்தியாக்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார். இவள் தாந்திரீக நெறியின் கலைமகள்.

10கமலாத்மிகா – கமலாத்மிகா என்பவர் இந்து சமயத்தில் வணங்கப்படும் பெண் கடவுளாவார். இவர் தசமஹாவித்யாக்களுள் ஒருவர் ஆவர். செல்வத்தை வழங்கும் கடவுளாகவும் விஷ்ணுவின் துணைவியான லட்சுமியாக கருதப்படுகிறார். விஷ்ணுவின் அவதாரங்களின் துணையாக இவரும் சீதை, உருக்மணி, பத்மாவதி போன்று அவதாரம் எடுப்பதாக கூறுவதுண்டு தாமரையை விரும்புகின்றவள். தாந்திரீக நெறியின் திருமகள்.

மகாபாகவதபுராணமும் பிரம்மாண்ட புராணமும், "ஷோடசி" என்பதைத் திரிபுர சுந்தரிக்கு(லலிதாம்பிகை) பதிலாகக் கூறுகின்றன.[1] குஹ்யாதிகுஹ்ய தந்திரம் நூல், பதின்பெருவித்தைகளை, திருமாலின் பத்தவதாரங்களுடன் இணைப்பதுடன், அவர்களிலிருந்தே, மால் பத்து அவதாரங்களைக் கொண்டதாக வர்ணிக்கின்றது. ஸ்ரீசக்கரத்தில் இவர்கள் ஆராதிக்கப்படுவதுடன், திரிபுரசுந்தரியை ஆதிபராசக்தியாகப் போற்றுவது சாக்தர் வழக்கு.

உசாவியவை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தச_மகா_வித்யா&oldid=3366912" இலிருந்து மீள்விக்கப்பட்டது