விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மே 11, 2014

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈரானியப் புரட்சி என்பது ஈரானின் இசுலாமியப் புரட்சி என்றும் 1979 புரட்சி என்றும் அழைக்கப்படுகிறது. அமெரிக்க ஆதரவு பலவீ அரசமரபின் அரசர் முகமது ரிசா சா பலவீ ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு இசுலாமிய குடியரசு அயத்தோலா கோமெய்னி தலைமையில் அமைந்ததை இந்நிகழ்வு குறிக்கிறது. இப்புரட்சிக்கு இடதுசாரி அமைப்புகளும் இசுலாமிய அமைப்புகளும் ஈரானிய மாணவர் இயக்கமும் துணைபுரிந்தன. புரட்சியின் தொடக்கத்தில் சா அரசைக் காப்பாற்ற சோவியத் ஒன்றியம் முயன்றாலும் இசுலாமிய குடியரசை சோவியத் ஒன்றியம் உடனடியாக ஏற்றுக்கொண்டது. இப்புரட்சி உலகுக்கு பெரும் வியப்பைத் தந்தது. புரட்சிக்குத் தேவையானவை எனக் கருதப்படும் பொருளாதார நெருக்கடி, அடித்தட்டு மக்களின் புரட்சி, போரில் தோல்வி, கட்டுப்படாத இராணுவம் போன்ற காரணங்கள் இப்புரட்சிக்கு தேவைப்படாததே இதற்கு காரணமாகும். இப்புரட்சி மேற்குலக சார்பு மன்னராட்சியை நீக்கிவிட்டு மேற்குலக எதிர்ப்பு கொண்ட இசுலாமிய ஆதிக்க கொள்கை உடையதாக மாறியது. இப்புரட்சி ஒப்பீட்டளவில் வன்முறையற்றதாக இருந்தது. மேலும்...


வானியல் என்பது விண்பொருட்கள் பற்றியும், அவற்றின் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் படிப்படியான வளர்ச்சி பற்றியும், மற்றும் பூமிக்கும் அதன் காற்று மண்டலத்துக்கும் வெளியே நடைபெறும் நிகழ்வுகளை அவதானிப்பதிலும், விளக்குவதிலும் ஈடுபட்டுள்ள ஓர் அறிவியலாகும். வானியலுடன் தொடர்புடைய, ஆனாலும் முற்றிலும் தனித்துவமான துறையான அண்டவியல் என்பது அண்டத்தைப் பற்றி முழுமையாக ஆய்வதாகும். வானியல் என்பது வரலாற்றில் மிகவும் பழைமையான அறிவியல் துறைகளில் ஒன்றாகும். வரலாற்றுக்கு முந்தைய நாகரிகங்களின், அதாவது எகிப்து மற்றும் நுபிய நாகரிக நினைவுச் சின்னங்கள் அவர்களின் வானியல் அறிவைப் பறைசாற்றுகின்றன. மேலும், ஆரம்பகால நாகரிகங்களான பாபிலோனிய, கிரேக்க, இந்திய, ஈரானிய, சீன மற்றும் மாயன் நாகரிகங்களில் குறிப்பிட்ட கால இடைவேளைகளில் விண்வெளியை அவதானித்துக் குறிப்புகள் எடுப்பது வழக்கமாயிருந்தது. ஆனாலும், ஒரு தனித்துவமான அறிவியல் துறையாக வளருவதற்கு தொலைநோக்கியின் கண்டுபிடிப்பு இன்றியமையாததாக இருந்தது. அதன் பயன்பாடு ஆரம்பித்த பின்னரே வானியல் துறையின் வளர்ச்சி சிறப்பாக இருந்தது. மேலும்...