அம்ரிதா பிரீதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்ரிதா பிரீதம்
பிறப்பு(1919-08-31)ஆகத்து 31, 1919
குஜ்ரன்வாலா, பஞ்சாப் (பிரித்தானிய இந்தியா) (தற்போது குஜ்ரன்வாலா, பஞ்சாப் (பாகிஸ்தான்)
இறப்புஅக்டோபர் 31, 2005(2005-10-31) (அகவை 86)
தில்லி, இந்தியா
தொழில்புதின ஆசிரியர், கவிஞர், கட்டுரையாளர்
தேசியம்இந்தியன்
காலம்1936–2004
வகைகவிதை, உரைநடை, தன்வரலாறு
கருப்பொருள்இந்தியப் பிரிவினை, பெண்கள், கனவு
இலக்கிய இயக்கம்காதல் சார்-முற்போக்குவாதம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்நான் வாரிஸ் ஷாவை கேட்கிறேன்' (Aj Akhan Waris Shah Nu (poem))
பிஞ்சர் (புதினம்)

அம்ரிதா பிரீதம் (Amrita Pritam, ஆகஸ்டு 31, 1919-அக்டோபர் 31, 2005) பஞ்சாபி மற்றும் இந்தி மொழிகளில் எழுதிய பஞ்சாபிக் கவிஞரும், எழுத்தாளரும், புதின ஆசிரியரும் ஆவார்[1]. அவர் எழுதிய கவிதை நூல்கள், கதைகள், புதினங்கள் எண்ணிக்கையில் நூற்றுக்கு மேல் இருக்கும். இந்தியாவின் உயர்ந்த இலக்கிய விருதுகளான ஞானபீட விருது, சாகித்திய அகாதமி விருது, உட்பட்ட பல விருதுகளைப் பெற்றவர். தொடக்கக் காலத்தில் காதலும் கற்பனையும் நிறைந்த கவிதைகளைப் படைத்தார். ஒன்றுபட்ட இந்தியா உடைந்து இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் என்று பிரிந்த போது நிகழ்ந்த வன்முறைகளும் கலவரங்களும், இலட்சக் கணக்கில் மக்கள் கொலையான நிகழ்வுகளும் அம்ரிதாவின் எழுத்துப் போக்கை மாற்றின. மதச்சண்டையால் ஏற்பட்ட அவலங்களைத் தம் படைப்புகளில் பதிவு செய்தார்.

அறுபது ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவிலும் பாக்கிஸ்தானிலும் பஞ்சாபி இலக்கியத்தில் சிறந்த ஆளுமையுடன் வலம் வந்தார். அம்ரிதாவின் இலக்கியப் படைப்புகள் ஆங்கிலம், பிரெஞ்சு, மற்றும் சப்பான் மொழிகளிலும் பிற இந்திய மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப் பெற்றுள்ளன[2] [3].

இளமைக் காலம்[தொகு]

இவருடைய இயற்பெயர் அம்ரிதா கவுர். பஞ்சாபில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) குஜ்ரன்வாலா என்னும் ஊரில் பிறந்தார்[3]. அவருடைய தந்தை ஒரு பள்ளி ஆசிரியரும், சீக்கிய மதப் போதகரும், ஓர் இலக்கிய இதழாசிரியருமாவார்[4][5][6]. அம்ரிதா பதினோரு வயதுச் சிறுமியாக இருந்தபோது அவருடைய தாயார் காலமானார். அப்பிரிவினால் ஏற்பட்ட தனிமை உணர்வு அவரைக் கவிதைகளை எழுதத் தூண்டியது. இவரது முதல் கவிதைத் தொகுப்பான ’அம்ரித் லெஹ்ரான்’ (’சாகா அலைகள்’) 1936 இல் அவரது 16ஆவது வயதில் வெளியானது. 1936 முதல் 1943 வரை இவரால் எழுதப்பட்ட ஆறு கவிதை நூல்கள் வெளிவந்தன. இவர் பிரீதம் சிங் என்பவரை 1935இல் மணந்தார். திருமணத்திற்குப் பின்னர் அம்ரிதா பிரீதம் என்று தம் பெயரை அமைத்துக் கொண்டார்.[7]

இந்தியா-பாக்கிஸ்தான் பிரிவினை[தொகு]

இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு நாடுகளாகப் பிரிந்த போது நிகழ்ந்த கொடுமையான வன்முறைகளினாலும் கொலைகளினாலும் அகதியானார். அம்ரிதா லாகூரிலிருந்து புது தில்லிக்குக் குடியேறினார். தம் ஆண் மகவுடன் டேராடூனிலிருந்து தில்லிக்கு தொடர்வண்டியில் ஒரு முறை பயணம் செய்த வேளையில் தம்முள் எழுந்த அவல உணர்வை ஒரு தாளில் எழுதினார்[8]. 'நான் வாரிஸ் ஷாவை கேட்கிறேன்' என்னும் தலைப்பிட்ட ஓர் அருமையான கவிதையே அது[9]. வாரிஸ் ஷா என்பவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பஞ்சாபைச் சேர்ந்த 'சுபி' கவிஞர் ஆவார்[10].

படைப்புகள்[தொகு]

அம்ரிதாவின் எழுத்துகள் முற்போக்குக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தன. 1943 இல் வங்கப் பஞ்சம் ஏற்பட்டபோது பொருளியல் பற்றிய திறனாய்வுக் கருத்துகளை முன்வைத்தார். 1960 இல் இவருக்கும் கணவருக்கும் பிணக்கு ஏற்பட்ட காரணத்தால் மண விலக்கு நிகழ்ந்தது. தம் இல்லற வாழ்வில் பட்ட கசப்பான அனுபவங்களை கவிதைகளிலும் கதைகளிலும் வெளிப் படுத்தினார். எனவே பெண்ணிய எழுத்தாளர் என்னும் ஒரு பரிமாணத்தையும் பெற்றார். அம்ரிதாவின் சில புதினங்கள் திரைப் படங்களாகவும் ஆக்கப் பட்டன. பிஞ்சர் என்னும் படத்துக்கு விருதும் கிடைத்தது நாகமணி என்னும் பெயரில் ஓர் இலக்கிய இதழை நடத்தி வந்தார்[1][11]. ஓஷோவின் சில நூல்களுக்கு முன்னுரைகள் எழுதினார்[12]. ஆன்மீக எழுத்துகளிலும் சிறந்து விளங்கினார்[13]. பிற்காலத்தில் இந்தி மொழியிலும் தம் எழுத்து வன்மையைக் காட்டினார். ஆல் இந்தியா ரேடியோவில் சில காலம் பணி புரிந்தார்.

விருதுகளும் சிறப்புகளும்[தொகு]

  • பஞ்சாப் ரத்தன் விருது
  • சாகித்திய அகாதமி விருது (1956)
  • ஞானபீட விருது (1982)[14]
  • பத்மசிறீ விருது (1969)
  • பத்ம விபூசண் விருது (2004)
  • தில்லிப் பல்கலைக் கழகம் முனைவர் பட்டம் (1973)
  • ஜபல்பூர் பல்கலைக் கழகம் முனைவர் பட்டம் (1973)
  • விஸ்வ பாரதி முனைவர் பட்டம் (1987)
  • பல்கேரிய நாட்டு விருது (1979)
  • பிரெஞ்சு அரசு விருது (1987)
  • பாக்கிஸ்தான் அரசு பஞ்சாபி இலக்கிய விருதை இவருடைய இறுதிக் காலத்தில் வழங்கியது.
  • 1986 முதல் 1992 வரை இந்தியப் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்தார்.
  • புகழ் வாய்ந்த இசை அமைப்பாளர் குல்சார் அம்ரிதாவின் கவிதைகளுக்கு இசை அமைத்து ஒலி நாடா ஆல்பத்தை 2007ஆம் ஆண்டில் வெளியிட்டார்[15][16].

மேற்சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 Amrita Pritam, The Black Rose by Vijay Kumar Sunwani, Language in India, Volume 5 : 12 December 2005.
  2. Amrita Pritam: A great wordsmith in Punjab’s literary history Daily Times (Pakistan), 14 November 2005.
  3. 3.0 3.1 Amrita Pritam – Obituary The Guardian, 4 November 2005.
  4. Amrita Pritam Women Writing in India: 600 B.C. to the Present, by Susie J. Tharu, Ke Lalita, published by Feminist Press, 1991. ISBN 1-55861-029-4. Page 160-163.
  5. New Panjabi Poetry ( 1935–47) Handbook of Twentieth-century Literatures of India, by Nalini Natarajan, Emmanuel Sampath Nelson, Greenwood Publishing Group, 1996. ISBN 0-313-28778-3.Page 253-254.
  6. Kushwant Singh, "Amrita Pritam: Queen of Punjabi Literature", The Sikh Times
  7. Amrita Pritam – Obituary The Independent, 2 November 2005.
  8. An alternative voice of history பரணிடப்பட்டது 2005-12-08 at the வந்தவழி இயந்திரம் Nonica Datta, The Hindu, 4 December 2005.
  9. Juggling two lives[தொடர்பிழந்த இணைப்பு] The Hindu, 13 November 2005.
  10. Complete Heer Waris Shah
  11. "Books of Amrita Pritam". Archived from the original on 2016-01-17. பார்க்கப்பட்ட நாள் 2014-05-04.
  12. A tribute to Amrita Pritam by Osho lovers பரணிடப்பட்டது 2011-07-16 at the வந்தவழி இயந்திரம் Sw. Chaitanya Keerti, sannyasworld.com.
  13. Visions of Divinity – Amrita Pritam பரணிடப்பட்டது 2008-09-27 at the வந்தவழி இயந்திரம் Life Positive, April 1996.
  14. "Jnanpith Laureates Official listings". Jnanpith Website. Archived from the original on 2007-10-13. பார்க்கப்பட்ட நாள் 2014-05-04. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  15. 'Amrita recited by Gulzar' பரணிடப்பட்டது 2008-07-05 at the வந்தவழி இயந்திரம் www.gulzaronline.com.
  16. Gulzar recites for Amrita Pritam Times of India, 7 May 2007.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

காணொளி இணைப்புகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்ரிதா_பிரீதம்&oldid=3685155" இலிருந்து மீள்விக்கப்பட்டது